
தோட்டக்காரன் பழனி வாழைக்குலையை கார் டிக்கியில் வைத்ததும் கார் குருவாயூர் நோக்கிப் புறப்பட்டது . சுப்பிரமணி தான் ஒட்டிக்கொண்டு போனார். அருகே அவர் மனைவி தங்கம், அதிகாலையில் குளித்து உடலில் மஞ்சள் மணமும் தலையில் மல்லிகை மணமும் மணக்க.
அவர்கள் வாழைக்கொல்லையில் முதல் குலை வந்ததும் அதை அப்படியே எடுத்துக் கொண்டு போய்க் குருவாயூரப்பனுக்கு சமர்ப்பிப்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார்கள். காரில் ஏசுதாஸின் இனிய குரலில் ஒரு நேரமெங்கிலும் என்று குருவாயூரப்பனின் திவ்ய ரூபத்தை தரிசிக்க ஏங்கும் மலையாள பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காகக் காரை நிறுத்திச் சுப்பிரமணி கீழே இறங்கி செல்ல, தங்கம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள். பெட்ரோல் பங்க் மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு சிறுவன் காரைப் பார்த்ததும் ஓடி வந்து தங்கத்திடம் வயிற்றைத் தட்டி காண்பித்து கை ஏந்தினான். எண்ணெய் காணாத வறண்ட தலை முடி, சோகையான தேகம், கண்களில் பசியின் அயர்ச்சி தங்கத்துக்கு அவனைப் பார்த்ததும் மன உருகியது. ஏதாவது பசிக்கு வாங்கி தரலாம் என்றால் அக்கம் பக்கம் ஒரு கடையும் இல்லை. ஏதோ ஒரு உந்துதலில் சட்டென்று காரை விட்டு இறங்கியவள், டிக்கியை திறந்து
பழக்குலையிலிருந்து இரண்டு கனிந்த பழங்களைப் பிய்த்து எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் நன்றியுடன் பெற்றுக் கொண்டு திரும்பப் போய்ப் பெட்ரோல் பங்க் மூலையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். தங்கம் முகம் எல்லாம் பூரிப்பாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்
அதற்குள் சுப்பிரமணி பெட்ரோல் போட்டுக் கொண்டு வர இவள் வெளியே நிற்பதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்டார்.
“குருவாயூரப்பனுக்கு நல்ல பசி போல இருக்கு. நாம குருவாயூர் போய்ச் சேர்வதற்கு முன்னாலேயே நம்ம வீட்டுக்குலையிலிருந்து ரெண்டு பழம் கேட்டு வாங்கி சாப்பிட்டுட்டார் .” முகமெல்லாம் சிரிப்பாகப் பரவசமாக
பெட்ரோல் பங்க் மூலையில் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனைச் சுட்டிக்காட்டி சொன்னாள்.
மிகுந்த பசியில் ஆவலோடு பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்ததும் சுப்பிரமணிக்கு மனதில் என்ன தோன்றியதோ?
“குருவாயூரப்பனுக்கு இது எப்படி போதும்?” என்று சொல்லிக் கொண்டே டிக்கியை திறந்து குலையிலிருந்து இன்னும் இரண்டு வாழைப்பழங்களை பிய்த்து எடுத்துக் கொண்டு போய் அந்தச் சிறுவனிடம் கொடுத்தார்.
திரும்பக் கார் கிளம்பியதும் குருவாயூரப்பனின் திவ்ய தரிசனத்திற்காக ஏங்கி ஏசுதாஸ் பாடலைத் தொடர ஆரம்பிக்கக் குருவாயூர் போகும் முன்பே குருவாயூரப்பன் தரிசனம் ஆகிவிட்ட திருப்தியில் சுப்பிரமணியம் தங்கமும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்
258 words
