சுஸ்ரீ/கனவுமெய்ப்படவேண்டும்

பேரன்பின் சுகந்தம்

(முதல் தொகுப்பு)

சம்பத் சொன்னான்,”அப்பா எப்பப் பாத்தாலும் கத்திட்டே தான்  இருப்பாரு, விடுங்கண்ணே.”

இப்படி மொட்டையா ஆரம்பிச்சா உங்களுக்கு என்ன தெரியும்? அதாகப் பட்டது, என் அப்பா சுந்தரம், நான் சிவராமன், தம்பி சம்பத், அம்மா அலமேலு – இதுதான் எங்க குடும்பம். அப்பா ஒரு வக்கீல் கிட்ட வேலை செய்றார், சொற்ப வருமானம்,  அம்மா அக்கம் பக்கத்துக்கு ரவிக்கையோ, கிளிசல் துணியோ தச்சுக் கொடுத்து குடும்பத்து வருமான ஓட்டையை அடைக்க முயற்சி பண்றா.

நான் ΒΑ பாஸ் பண்ணிட்டேன். முதல்ல ஆசைப் பட்டது சினிமா ஃபீல்ட்.  ஆனா அப்பாவும் இதே மாதிரி ஆசைப் பட்டு, நிறைய அடி பட்டு, நொந்து நூலாகி, கடேசில வக்கீல் கிட்ட வேலைக்கு சேந்ததை அம்மா சொல்லி பல தடவை கேட்டுட்டேன்.

”டேய் உனக்கு இருக்கற அழகு, பேச்சுத் திறமை, சட்சட்னு மாறும் முக பாவங்களுக்கு சிறந்த நடிகனா வருவே, வெட்டியா டைம் வேஸ்ட் பண்றே,” இது ஷ்யாமளாவோட அட்வைஸ்.

நான்,”ஷ்யாமி, நான் என் அப்பாவோட முதல் அச்சு; நான் இப்ப இருக்கற மாதிரிதான் அப்பா இருப்பாராம். சினிமாக்கு ஆசைப் பட்டு, மதுரைல இருந்து மெட்ராஸ் ஓடி வந்து, திண்டாடினதை, அவமானப் பட்டதை கேட்டு தான், சினிமா ஆசை வளர விடாமல் அடக்கி வச்சிருக்கேன்.”

“உன் அப்பாக்கு வாய்ப்பு கிடைக்கலைன்னா, உனக்கும் கிடைக்காதுனு நீயா ஏன் தீர்மானம் பண்றே, மவுன்ட்ரோட்ல உன் கட்அவுட் நிக்கணும்னு எனக்கு ஆசையா இருக்காதா?”

“ஏய் அதுக்கு என்ன அர்த்தம். விளக்கமா சொல்லு கொஞ்சம்.”

“ஆமாம், சொல்றாங்க வாங்க, மண்டைல மசாலா இருந்தா எப்பவோ புரிஞ்சிருக்கும்.”

“புரியாம இல்லை, ஆனா சொல்லறதுக்கு பயம்.”

“சரி, நீயா சொல்ற வரை காத்திருப்பேன்.”

அம்மா முடிஞ்ச அளவு தன் தையல் மிஷினை விரட்டினாள். என்ன விரட்டினாலும் கிளிசல் துணி தைக்க என்ன கிடைச்சிரும்?

அப்பா கத்தறாரு. காரணம் நான் அவர்கூட ஆபிஸ் போய் அவர் பாஸ் வக்கீலை பாத்து வேலைக்கு கெஞ்சணும்னு எதிர் பாக்கறார். என் வயசுக்கே உரிய ஈகோ அதை மறுத்தது. “நான் வேணா வக்கீல் படிப்பை முடிச்சிட்டு அவருக்கு அசிஸ்டண்டா வரேன்,”

“இப்ப நான் வந்து அவர் மேஜையை துடைக்கற, கேஸ் கட்டை தூக்கற, காபி ஆத்திக் கொடுக்கற, அவர் காரை ஓட்டற, அவர் மனைவிக்கு புடலங்காயும் கறிவேப்பிலையும் வாங்கிட்டு வர வேலை எனக்கு வேண்டாம்.”

“ஏண்டா, என் வேலையை குத்திக் காட்டி அவமானப் படுத்தறயா? அப்படி சம்பாதிக்கற பணத்துலதான் நம்ம குடும்பம் பிழைக்குது, தெரிஞ்சிக்க.”

அம்மாவோட தையல் மெஷின் டகடகனு ஓடிட்டிருந்தது. அம்மா எங்க பேச்சை கேட்டதாவே காட்டிக்கலை. .சம்பத் இப்பதான் முதல் வருஷம் சயன்ஸ் டிகிரி பண்றான். அவனுக்கு பி.எஸ்சி முடிச்சிட்டு மேனேஜ்மெண்ட் படிக்கணும்னு ஆசை. ஏழைகளா பிறந்தா ஆசைப் படக் கூடாதா என்ன?

அம்மா தன் தையல் வேலையை நிறுத்தாம தலை நிமிர்த்தி என்னை பாத்தா.

 ” லா காலேஜ்ல படிக்க நிறைய செலவாகுமா?”

“முதல் வருஷம் சேர கிட்டத்தட்ட 30,000 ரூபாயாவது குறைஞ்சது வேணும். அதுக்கப்பறம், நானே பார்ட் டைம் வேலை ஏதாவது பாத்து மத்ததை சமாளிச்சிப்பேன்.”

அம்மா,”உன் அப்பாவை கேக்காதே பாவம். அவர் ஏற்கனவே பல இடங்கள்ல வாங்கின கடனை திரும்ப தர முடியாம கலங்கறார். நான் செட்டியாரம்மா வீட்டு கல்யாணத்துக்கு மொத்தமா தைக்க  ஆர்டர் எடுக்க கேட்டிருக்கேன். அவங்க ரொம்ப நல்லவங்க. உதவி பண்ணுவாங்க. நீ காலேஜ்ல சேரற வழியைப் பாரு.”

நான் அம்மா கழுத்தை கட்டிண்டேன், ”என்னால எவ்வளவு சிரமம் அம்மா உனக்கு. அந்த வக்கீல் கிட்ட வேலைக்குப் போறேன். இப்ப படிக்கலை விடும்மா, என்னதான் கல்யாணத்துக்கு டிரஸ் தச்சாலும் அஞ்சாயிரம் கூலி கிடைச்சா ஜாஸ்தி, மீதிக்கு எங்கே போறது; நீ யார் கிட்டயும் கால்ல விழ வேண்டாம்.”

“அப்படி இல்லைடா, பயப்படாதே. பிச்சை கேக்கலை. யார் கிட்டயும். கடனாதான் வாங்கறேன். அதை அடைக்கற தெம்பும், தைரியமும் எனக்கு இருக்கு.”

“அம்மா, உங்களை மேல் மேலும் கஷ்டப்படத்தறது என் மனசை அறுக்குதம்மா.”

“என்னோட தரித்திரம்தான் உன் அப்பாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கிடுச்சுனு, ஒரு உறுத்தல் எப்பவும் எனக்கு இருக்கு. அவரோட திறமைக்கு சினிமா உலகத்துல பேரும் புகழோட ஜொலிக்க வேண்டியவர். என்ன பெரிய உலக அழகின்னு என்னைப் பாத்து கல்யாணம் பண்ணிட்டாரோ, தெரியலை. அதுல இருந்து அவர் தன் எல்லா கனவுகளையும் துறந்து நமக்காக 

கஷ்டப் படறார்.”

“உனக்கென்னம்மா, இத்தனை வயசாகியும் உலக அழகி தான். இனிமே நாங்க உழைச்சு இந்த உலக அழகியை தலை மேல தாங்கப் போறோம்.”

“இத்தனை வயசுக்கு, உன் அப்பனை மாதிரி அழகா பேசக் கத்துட்டிருக்கே.”

அம்மா பிள்ளை பேசி தீத்துக்கட்டும்; நாம இன்னும் பின்னால அதாவது ஒரு 40 வருஷம் பின்னால போவோம்.

பழைய மெட்ராஸ்ல, திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம்  பிள்ளைத் தெரு. நிறைய பிராமண குடும்பங்கள் வசித்த தெரு. ஓடு வேய்ந்த, திண்ணை வச்ச வீட்டில் ஒரு நடுத்தர வருமானம் உள்ள குடும்பம். கஸ்தூரி ரங்கன் மவுண்ட்ரோட் ஹிக்கின்பாதம்ஸ்ல வேலை பாக்கறார். அவர் மனைவி வேதாம்பாள் ஸ்கூல் டீச்சர். ஒரே குழந்தை அலமேலு, அடக்கமான பெண்.  உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்தவுடன் கஸ்தூரிரங்கனுக்கு பெண்ணை கல்லூரி அனுப்புவதில் இஷ்டம் இல்லை. 18 வயதானவுடன் தன் சகோதரியின் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கணும்னு தீர்மானித்திருந்தார்.

தாயார் வேதம் தான் குழந்தை தையல், டைப்னு ஏதாவது கத்துக்கட்டும்னு, பெல்ஸ் ரோட்ல மாடர்ன் டெய்லரிங் இன்ஸ்ட்யூட்ல சேத்து விட்டா. களங்கமில்லாது வளர்ந்த அந்த அழகிய பெண்ணைப் பார்த்து இன்ஸ்ட்யூட் பக்கம் மேன்ஷனில் தங்கி இருந்த இளைஞர்கள் கொஞ்சம் கேலி கிண்டல்னு ஆரம்பித்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அலமேலு பொறுமையாக இருந்து பார்த்தாள், தாள முடியாம  ஒரு தினம் தந்தையிடம் முறையிட்டாள். “இன்னிக்கு நீ போம்மா; நான் வந்து பாக்கறேன். எவனுக்கு என் பெண்ணை சீண்ட தைரியம் இருக்குனு.”

புக்‌ஷாப் செக்யூரிடி ஆளை துணைக்கு கூட்டிக் கொண்டு சாயந்தரம் தையல் வகுப்புக்கு வெளியே வந்த போது அந்தப் பையன் கொஞ்சம் ஸ்டைலாக மேன்ஷன் வாசலில் வந்து நின்றான். அவனைப் பார்த்தவுடன் அந்த செக்யூரிடி 

ஆளும், கஸ்தூரி ரெங்கனும், அவனை உலுக்கி அவனை கன்னத்திலும்,முதுகிலுமாகத் தாக்கினர். அன்றுதான் அந்த மேன்ஷனில் புதுசா சேந்திருந்த சுந்தரத்துக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் நம்மை தாக்குகிறார்கள்னு.

வெளியே அப்போதுதான் வந்த அலமேலு “அப்பா இவரை நான் முன்னே பின்னே பாத்ததில்லை பாவம் விடுங்க அவரை.”

ஊரில் இருந்து சினிமா ஆசையில் ஓடி வந்திருந்த முதல் நாளே இப்படி ஆகும்னு எதிர் பாக்காத சுந்தரம் அதிர்ந்து போனான்.

“மன்னிச்சிக்கங்க என் அப்பா ஆள் தெரியாம தாக்கிட்டார்னு,” சொன்ன அந்த பெண்ணிடம் முதல் பார்வையிலயே மயங்கி விட்டான். .

கோடம்பாக்கம் சினிமா சான்ஸ் தேடி பகலெல்லாம் சுற்றி விட்டு மாலையில் அலமேலுவைப் பார்க்க ஓடி வந்துடுவான். மெல்ல மெல்ல ரெண்டு பக்கமும் பற்றிக் கொண்டது.

வீட்டில் எதிர்ப்பை மீறி சுந்தரம், அலமேலு திருமணம் வடபழனி கோவிலில் நடந்தது. சின்னச் சின்ன சினிமா வேலைகள் குடும்பம் நடத்த போதாமல்,ஒரு வக்கீலிடம் வேலைக்கு சேந்தான் சுந்தரம். அலமேலு கற்ற தையல் கொஞ்சம் குடும்ப வருமானத்தை பெருக்கியது.

இப்ப சிவராமன், சம்பத் பிறந்து வளர்ந்து நிற்கிறார்கள். அந்த கடவுளின் விளையாட்டு இன்னும் தொடர்கிறது.

இப்ப சிவராமன் லா காலேஜா, சினிமாவானு தீர்மானிக்க முடியாம குழப்பத்தில் உக்காந்திருந்த போது, சம்பத் “அண்ணா”னு அலறிய வண்ணம் ஓடி வந்தான். 

“ஏண்டா இப்படி வீடு ரெண்டான மாதிரி அலறரே; என்ன ஆச்சு? பரிட்சைல பாசாயித் தொலைச்சிட்டயா என்ன?”

“எப்பப் பாரு என் படிப்பை கிண்டல் பண்ணலேன்னா உனக்கு தூக்கம் வராது.”

“பின்ன என்ன சீக்கிரம் சொல்லித் தொலையேன்.”

“என்னோட மவுத் ஆர்கனை தேடிண்டிருந்தேன், இல்லை நேத்துல இருந்து.”

“அச்சச்சோ அது கிடைச்சிருச்சா? இனிமே அதை ஊதி ஊதி உயிரை வாங்குவயே.”  

“இதைப் பாரு அப்பாவோட புஸ்தக அலமாரில இருந்து கிடைச்சது”னு ஒரு அரதப் பழசான ஒரு தடிச்ச நோட்டுப் புஸ்தகத்தை நீட்டினான். “நான் கொஞ்சம் தான் படிச்சேன், இந்த மாதிரி கதையெல்லாம் ஏன் நம்ம தமிழ் சினிமா உலகம் ஏத்துக்கலைன்றது வருத்தத்துக்குறிய விஷயம். இதை இப்படியே நம்ம உபேந்திரன் சார் கிட்ட காட்டினா படமாக்குவார்ன்றது உறுதி.“ 

சிவராமன் நோட்டுப் புஸ்தகத்தை சம்பத்தின் கையிலிருந்து புடுங்கினான்.

“ஏண்டா சம்பந்து உபேந்திரன் சார் நம்மளையெல்லாம் பார்ப்பாரா?”

“அதுக்கு வழி இல்லாமயா உன் கிட்ட வருவான், இந்த சம்பத்து,” காலரை தூக்கி விட்டுக் கொண்டான். 

“சொல்லுடா லூசு, எப்படி அவரை அணுகறது,கேட் கிராஷ் பண்ணியா?”

“நோ, நோ, நவீனன்னு ஒரு கீபோர்ட் பிளேயர். அவன் என் ஃபிரண்ட்தான்.  ஏதோ ஒரு வகைல அவன் உபேந்திரன் சாருக்கு சொந்தம். உன்னைப் பத்தி அவன் கிட்ட பேசியிருக்கேன், நடிப்புல இன்ட்ரஸ்ட். பாக்க அஜீத்குமார் மாதிரி இருப்பான்னு அவனைப் பிடிச்சு இயக்குனரை நெருங்கலாம்.”

“நிஜமாவாடா? எனக்கு நடிக்க சான்ஸ் கிடைக்காட்டா கூட பரவாயில்லை. அப்பாவோட கனவு கொஞ்சம் நனவானா சந்தோஷமா இருக்கும்.”

“ம்ஹூம், உனக்கும் நடிக்க சான்ஸ் கொடுத்தா கதை கொடுக்கப் படும்.”

அன்னிக்கு சாயங்காலமே நவீனனை சந்தித்துப் பேசினர். நவீனன் உடனே உபேந்திரனுக்கு ஃபோன் செய்து விட்டு சகோதரர்களை இரவு 7 மணிக்கு மேல அவர் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனான். 

சிவராமன் தன் தந்தையின் சினிமா தோல்விகளைக் கூறினான்.

உபேந்திரன் தன் ஆரம்ப நிலையில் அவரை சந்தித்த ஞாபகம் இருப்பதாக கூறினார். “சரி நான் என்ன செய்யணும்னு எதிர் பாக்கறீங்க?”

“அப்பாவோட ஒரு கதையை சாஃப்ட் காபியா லேப்டாப்ல கொண்டு வந்திருக்கேன். நீங்க படிச்சுப் பாருங்க.”

“ஓகே; பலவேசம் செட்டியார் முதலீட்ல நான் அடுத்த படம் ஃபாரின் லொகேஷன்ல  பண்ற பிளான் இருக்கு. கதையை கொடுத்துட்டுப் போங்க. எனக்கு கதை பிடிக்கணும், பணம் போடற செட்டியாருக்கும் பிடிக்கணும். எல்லாம் சரிப்பட்டு வந்தா மேற்கொண்டு பேசலாம்.”

சம்பத்,”இன்னொரு வேண்டுகோள், என் அண்ணன் சிவராமனுக்கு நடிக்க ஒரு ஓபனிங் நீங்கதான் கொடுக்கணும்.”

“ஹா,ஹா”னு, சிரித்த உபேந்திரன், “உன் அண்ணன் நல்ல ஹீரோ மாதிரிதான் தெரியறார், அதை அப்பறம் பாப்போம்.”

உபேந்திரன் அன்று இரவு உணவருந்திய பின் இந்தக் கதை ஞாபகம் வந்தது. சரி பாப்போம்னு அசிரத்தையாகதான் படிக்க ஆரம்பித்தார். 

படிக்க ஆரம்பித்தவுடன் சாய்ந்து உக்காந்திருந்த உபேந்திரன் நிமிர்ந்து உட்கார்ந்தார். சினிமா பார்ப்பது போல எப்படி இவ்வளவு அழகாக எழுத முடிகிறது இந்த மனுஷனால். ஏன் இவருக்கு சினிமால சான்ஸ் கிடைக்கலைனு வியப்பாகவே இருந்தது.

உபேந்திரனுக்கு அந்தக் கதையின் தாக்கத்திலிருந்து வெளி வர கொஞ்ச நேரம் பிடித்தது. என்ன செய்யறோம்ன்றது புரியலை, அந்த அகாலத்தில் செட்டியாருக்கு ஃபோன் பண்ணினார்.”அருமையான கதை கிடைச்சிருக்கு முதலாளி, ரொமான்ஸ்,லைட் ஹ்யூமர்,வெவ்வேறு அழகான லொகேஷன்ல நடக்கற மாதிரி கிரிப்பிங் கதை.”

“சரி நீங்க படிச்சு உங்களுக்கு பிடிச்சிருந்தா செட்டில் பண்ணிடுங்க”.

அடுத்த ஃபோன் நவீனனுக்கு.”டேய், அந்த கதை பார்ட்டியை காலைலயே கூட்டிட்டு வாடா.”

நவீனன் தன் பங்குக்கு சம்பத்துக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டான்.

மறுநாள் நிகழ்வுகள் ஒரு ஃபார்மாலிடிதான். 

உபேந்திரன்,”உங்க அப்பாவோட கதை இப்போதைய எங்க தேவைக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு. இதை உபயோகம் பண்ணிக்கறோம். என்ன எதிர் பார்க்கறீங்க?” 

“சார் பணம் தேவைதான்;  ஆனா எங்கப்பா பெயர் வரணும் அது முக்கியம்.”

“உங்க அப்பா பேரு எப்படி வரணும்?

“கிருபாசுந்தர் (சோழவந்தான் சுந்தரம்).”

“சரி, கொஞ்சம் இருங்க, ஒப்பந்தத்தை முடிச்சிட்டே போயிடலாம்.”

சம்பத்,”அப்படியே அண்ணனோட ரோல் விஷயம்னு,” இழுத்தான்.

“கண்டிப்பா இந்தப் படத்துலயே ஒரு சின்ன ரோலாவது கொடுக்கறேன்; அப்பறம் அதை வச்சு முன்னுக்கு வரது அவர் கையிலதான்.”

வக்கீல் வந்தார், அக்ரிமென்ட் பேப்பரோட.”அட்வான்ஸ் பணம் வாங்கிக்கங்க. 2 லட்சம் செக், அப்பறமா செட்டியார் கிட்ட பேசிட்டு படம் ஆரம்பிக்கறப்ப ஃபைனல் செட்டில்மென்ட் வச்சிக்கலாம்.”

சந்தோஷமா டீலிங் முடிஞ்சது. செக் அப்பா பேரில் வாங்கிக் கொண்டார்கள். 

உபேந்திரன்,”நாளைக்கு தினசரி பேப்பர்லயே பட அறிவிப்பு வரும்.”

சுந்தரம் தன் வாழ் நாளில் இத்தனை பெரிய தொகை பார்த்தது இல்லை. பணத்தை விட தன் கதை விலை போனது மட்டற்ற மகிழ்ச்சி. சிவாவையும், சம்பத்தையும் இறுக அணைத்து கண்ணீர் விட்டார். சுந்தரத்தின் மகிழ்ச்சியைப் பாத்து அலமேலுவுக்கும் நெஞ்சம் பூரித்தது.

மறுநாள் பேப்பரில் அரைப்பக்க விளம்பரம். 

உபேந்திரன் பெருமையுடன் வழங்கும்,”கன்னி வேண்டுமா” பிரம்மாண்டமான திரைப் படம்;  திரைக் கதை – “கிருபா சுந்தர் (சோழவந்தான் சுந்தரம்);  இசை இசைமேதை மேகநாதன்;  உங்கள் அபிமான நடிகர் நடிகைகளுடன் புதுமுகம் சிவராம் அறிமுகம். படப்பிடிப்பு வெளி நாடுகளில். இதற்கான பூஜை தினம் விரைவில் அறிவிக்கப் படும்.  

இந்த அறிவிப்பை பாத்தாள் அலமேலு கண்களில் நீர் வழிய வழிய.  அந்த தையல் மெஷின் டகடகனு ஒடிக் கொண்டிருந்தது. 

பாரதியின் பாடல் கணீரென டி.வி.ல இருந்து வந்தது “கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும். “ 

(WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு)

******

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன