
“காலிங் பெல் சத்தம் கேக்கறது, யாருன்னு போய் பாருங்கோ” என்று கௌரி சமையலுளிருந்து குரல் கொடுத்தாள். சிவராமன், காதில் ‘இயர் ஃபோனை’ மாட்டிக்கொண்டு ‘யூ ட்யூப்’ல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அவர் காதில் காலிங் பெல் சத்தம் விழவில்லை, அவருடைய மனைவி சமையல் அறையிலிருந்து சொன்னதும் விழவில்லை. மறுபடியும் பெல் சத்தம் கேட்கவே கௌரி சிவராமனை பார்த்து “அதை மாட்டிண்டுட்டா பக்கத்துல வந்து குண்டு போட்டாக்கூட காதில விழாதே” என்று சொல்லிக் கொண்டே போய் கதவை திறந்தாள். கௌரியின் மாட்டுப்பெண் ஸ்ரீமதிதான் வந்திருந்தாள். இவள் இந்த டைமுக்கு வீட்டிற்கு வர மாட்டாளே என்று யோசித்துக்கொண்டே “அட என்ன விஷயம், இவ்வளவு சீக்கிரமா திரும்பி வந்துட்ட, உடம்புக்கு ஒண்ணுமில்லயே” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, இன்னைக்கு ஓவர்சீஸ் கால் கேன்சல் ஆயிடுத்து, அதான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அவளுடைய ரூமுக்கு போய் விட்டாள்.
ஸ்ரீமதியும் ரகுவும் காலையில் ஒன்றாக கிளம்பிப் போவார்கள். முக்காவாசி நாள் திரும்பி வரும்பொழுது சேர்ந்துதான் வருவார்கள். ஸ்ரீமதியோட ஆபீஸ் வர வழியில இருக்கிறதுனால, ரகு அவளையும் அப்படியே பிக்அப் பண்ணிப்பான். இன்னிக்கு ஸ்ரீமதி சீக்கிரம் கிளம்பி வந்து விட்டாள் . ஆனால் அவள் முகம் சரியில்லையே, கண்ணெல்லாம் வேற லேசா கலங்கின மாதிரி இருக்கு , என்ன காரணமோ தெரியலியே என்று நினைத்துக்கொண்டே “காஃபி சாப்பிடறயாம்மா, கலக்கட்டுமா” என்று கேட்டாள்.
“வேண்டாம்மா, இப்போ குடிக்கணும் போல இல்லை, வேணும்னா நான் அப்பறமா கலந்துக்கறேன்” என்று ஸ்ரீமதி உள்ளேயிருந்தே பதில் சொன்னாள்.
கௌரிக்கு புரிந்துவிட்டது, ஏதோ பிரச்சனை என்று, இல்லாவிட்டால் அவள் இந்த மாதிரி இருக்க மாட்டாள். ஸ்ரீமதி பொதுவாக வந்தவுடனே, எத்தனை மணிக்கு வந்தாலும் அரை கப் காஃபி குடிப்பாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் சாப்பிடவும் செய்வாள். கௌரி கூட கிண்டல் பண்ணுவாள் “காஃபி என்ன உனக்கு அப்பிடைசரா” என்று . கௌரிக்கு தெரியும் ஸ்ரீமதி மனதில் எதுவும் நிற்காது, இரவு எல்லோரும் சாப்பிட்டப்புறம் சமையல் ரூமை க்ளீன் பண்ணும் பொழுது மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விடுவாள் என்று .
ஸ்ரீமதிக்கும் ரகுவிற்கும் கல்யாணம் ஆகி நான்கு வருடம் முடிந்து விட்டது. ஸ்ரீமதி அவளுடைய அப்பா அம்மாவிற்கு ஒரே பெண், ரகுவும் கௌரி சிவராமனுக்கு ஒரே பையன். இரண்டு பேர் குடும்பமும் சென்னைதான். ஸ்ரீமதி அப்பப்போ அவளுடைய வீட்டுக்கு போய் தன்னுடைய அப்பா அம்மாவை பார்த்து விட்டு வருவாள். அவளுடைய அப்பாவுக்கு போன வாரம் கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று அவளுடைய அம்மா ஃபோன் பண்ணி இருந்தாள். ஆஃபீஸ் வேலை அதிகமா இருந்ததால் அவளால உடனே போக முடியவில்லை. ஓவர் சீஸ் கால் கேன்சல் ஆனதால் இன்றைக்கு போயிருந்தாள். அவளோட அப்பாவின் உடம்பைப் பற்றி பேசிவிட்டு கொஞ்ச நேரத்துலேயே அவளோட அம்மா எப்பவும்போல் ஆரம்பித்து விட்டாள்.
“ஸ்ரீமதி, அந்த சுபாஷிணி சொன்ன டாக்டரை நீங்க ரெண்டு பேரும் போய் பார்த்தேளா இல்லையா”
“இல்லம்மா, போகணும், ரகுக்கு இயர் எண்ட் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு. கொஞ்சம் ஃப்ரீ ஆனப்புறம்தான் அப்பாயின்ட்மென்ட் வாங்கணும்”.
“ஒரு நாள் லீவ் போட்டுண்டு போக முடியலையா. உங்களுக்கெல்லாம் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு தெரியல. வாழ்க்கைல சம்பாதிச்சா எல்லாம் ஆயிடுத்தா?”.
“அம்மா, மாத்தி மாத்தி டாக்டர்கிட்ட போய் காமிக்கிறதுல என்ன பிரயோஜனம். இது வரைக்கும் மூணு டாக்டர்கிட்ட போயிட்டு வந்தாச்சு. முதல்ல போன டாக்டர் மூணு மாசம் மருந்து கொடுத்தா, அப்புறமும் எதுவும் ஆகலைன்னா அடுத்த கட்டம் யோசிக்கணும்னு சொன்னா. மத்த ரெண்டு டாக்டரும் என்ன சொன்னா, ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை, எல்லாமே நார்மலா இருக்குன்னுதானே சொன்னா”.
“எல்லாம் நார்மலா இருக்குங்கற, ஆனா ஒண்ணும் ஆகலியே. அப்படின்னா அந்த முதல்ல சொன்ன டாக்டர் மாதிரி, அடுத்த ஸ்டெப் என்ன எடுக்கணும்னு யோசிக்க வேண்டாமா? எல்லாத்துலேயும் போடறாளே இப்பல்லாம் “செயற்கை முறை கருத்தரிப்பு”ன்னு, தெருவுக்கு தெரு திரும்பற இடத்திலெல்லாம் “கருத்தரிப்பு மையம்”னு வந்திருக்கு. அங்க போய் பார்க்கலாம் தானே? அதுக்கு நிறைய செலவாகும்னு உங்காத்துல பார்க்கறாளா? நான் வேணும்னா அப்பா கிட்ட சொல்லி பணம் கொடுக்க சொல்றேன்”.
“அம்மா, யாராவது உன்கிட்ட வந்து செலவை பத்தி பேசினாளா, நீ பாட்டுக்கு என்னவெல்லாமோ பேசிண்டு போறியே. யாரும் பணத்துக்கு பார்க்கல. மனசுக்கு தோணினதெல்லாம் பேசாத. நீதான் சொன்னியே, பெரியம்மாக்கு இப்படித்தான் லேட்டாச்சு, கல்யாணம் ஆகி எட்டு வருஷத்துக்கப்புறம் பாலாஜி பொறந்தான்னு. அப்போ வீணா ஏன் இப்படி கவல படறே” என்று கொஞ்சம் குரலை உசத்தி பதில் சொன்னாள் ஸ்ரீமதி.
“கவல படாம எப்படி இருக்க முடியும். அந்த காலக் கட்டம் வேற, இந்தக் காலம் வேற. அந்தக் காலத்தில இப்போ இருக்கிற மாதிரி மருத்துவ வளர்ச்சி இருக்கல. என்னமோம்மா சொல்றதை சொல்லிட்டேன், மத்தபடி இது உங்க லைஃப்; என்ன முடிவு பண்ணனுமோ அதை பண்ணிக்கோங்கோ” என்று ஸ்ரீமதி அம்மா கண் கலங்கியபடி சொன்னாள் .
“அம்மா, கவல படாதமா, எல்லாம் நல்ல படியா நடக்கும். ஸ்வாமி இருக்கார், அவர் பார்த்துப்பார்” என்று சொல்லிட்டு ஸ்ரீமதி கிளம்பிட்டாள்.
ஸ்ரீமதிக்கு எதுக்காக இன்றைக்கு அவளுடைய அம்மா வீட்டுக்கு போனோம்னு என்று நினைத்தாள். இன்னிக்குன்னு இல்லை, எப்பப் போனாலும் இந்த சப்ஜெக்ட்லதான் பேச்சு முடியும். ஸ்ரீமதியோட அப்பா எப்பவுமே ரொம்ப பேசமாட்டார். கல்யாணத்துக்கு முன்னேயும் அவர் ஸ்ரீமதிகிட்ட ரொம்பலாம் ஆசையா பேசமாட்டார். அதுக்காக அவளிடம் ஆசை இல்லைன்னு அர்த்தமில்லை. அது அவரோட நேச்சர். ஆனால் அம்மா அவருக்கும் சேர்த்து வைத்து பேசுவாள். ஸ்ரீமதிக்கு உள்ளுர கோபம் வந்தாலும், அதை அடக்கிண்டு அம்மாவை சமாதானப்படுத்தி விட்டு வருவாள்.
டாக்டர்கிட்ட போகலாம்னு சொல்ற பொழுதெல்லாம், ரகு ஒரு வார்த்தை சொல்லாமல் தன்னோட ஒத்துழைத்தது, ரகுவோட அம்மாவும் அப்பாவும் தன்னிடம் எவ்வளவு ஆதரவாக இருப்பது என்பதெல்லாம் பற்றி ஸ்ரீமதி நினைத்துப் பார்த்தாள். இதுநாள் வரைக்கும் ரகுவோட அப்பாவோ இல்லை அம்மாவோ குழந்தையைப் பற்றி பேசினதே இல்லை. எப்பவாது ஸ்ரீமதி அதை நினைத்து மனது கலங்கி இருக்கும் பொழுது அவர்கள் தான் இவளுக்கு சமாதானம் சொல்லுவார்கள். தான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கோமென்று ஸ்ரீமதி நினைத்துப் பார்த்தாள்.. உண்மையை சொல்லணும்னா ஸ்ரீமதி தன்னோட வீட்டுல இருந்ததோட இந்த வீட்டில் தான் ரொம்பவே ஃப்ரீயாக இருப்பாள். சிவராமனும் கௌரியும் ரகு பிறக்கிறதுக்கு முன் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டனர். அது ரகுவின் கல்யாணத்திற்கு பிறகு ஸ்ரீமதி மூலமாக நிறைவேறி உள்ளது, அவளை தங்களுடைய சொந்த பெண் மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள்.
ஸ்ரீமதி அவளுடைய அம்மாவிடம் “ஸ்வாமி இருக்கார், அவர் பார்த்துப்பார்” என்று சமாதானம் பண்ணிவிட்டு வந்தாலும், அவளால தாங்க முடியல, ஏன் ஸ்வாமி இப்படி சோதிக்கிறார் என்று.. அதைப்பற்றி அவள் நினைத்து கொண்டு வந்ததன் வெளிப்பாடுதான், ஸ்ரீமதி கௌரியிடம் இன்று காண்பித்தது .
கௌரி எதிர்பார்த்த மாதிரி கொஞ்ச நேரத்திலேயே ஸ்ரீமதி நார்மல் ஆகிவிட்டாள். ரகுவும் வந்த பிறகு எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர். பாத்திரத்தை எடுத்து போட்டுக்கொண்டே ஸ்ரீமதி கௌரியிடம், தான் இன்னிக்கு அம்மா வீட்டிற்கு போனதை சொன்னாள்.
“அம்மா, இன்னிக்கு அப்பா அம்மாவை பார்க்க போனேன்”.
“போன வாரம், அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு அம்மா ஃபோன் பண்ணி இருந்தாளே, இப்போ எப்படி இருக்கார்”.
“இப்போ நன்னா தேவல. வைரல் ஃபீவர்னால ரொம்ப வீக்கா இருக்கார். வாய்க்கு எதுவும் பிடிக்க மாட்டேங்கிறதாம் , ஒண்ணுமே சாப்பிட மாட்டேன்கிறாராம்”.
“வைரல் ஃபீவர்ன்னாலே அப்படித்தான் இருக்கும். ஒரு வாரத்துக்கு ஒண்ணும் இறங்காது. ஆளை தள்ளிடும்”.
“அம்மா எப்பவும் போல இன்னிக்கும் குழந்தையைப் பத்தி பேசினா, ஏன் இன்னும் அந்த சுபாஷினி சொன்ன டாக்டர்கிட்ட போகலைன்னு கேட்டா. நான் சொல்லிட்டேன், ரகுக்கு இயர் எண்ட் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு. ஃப்ரியானப்புறம்தான் அப்பாயின்ட்மென்ட் வாங்கணும்னு சொல்லிட்டேன்”.
“அதுக்கு என்ன சொன்னா” .
“ஒரு நாள் லீவ் போட்டுண்டு போக முடியலியான்னு திட்டினா. அடுத்த ஸ்டெப் என்ன எடுக்கணும்னு யோசிக்க வேண்டாமா?
“செயற்கை முறை கருத்தரிப்பு”ன்னு எல்லாத்துலயும் போடறானே, அத நாங்க பார்க்க மாட்டேங்கிறோமாம், அப்படி இப்படின்னு ஒரேடியா அங்கலாய்த்தா. அம்மா, நீ எதுக்கும் கவல படாதே, ஸ்வாமி பார்த்துப்பார்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”.
“அம்மாவை குறை சொல்லாதே. பாவம் அவளோட ஆதங்கம் உன்கிட்ட கொட்டறா. நீ மனச போட்டுக் கொழபிக்காத. கடைசியா பார்த்த ரெண்டு டாக்டர்ஸும் என்ன சொன்னா? எல்லாமே நார்மலா இருக்கு எதுக்கும் கவல படாதேங்கோன்னுதானே சொன்னா. ஸ்ட்ரெஸ் இல்லாம இருங்கோன்னு உங்க ரெண்டு பேருக்கும் அட்வைஸ் பண்ணி இருக்கா. நமக்கு குழந்தை இன்னும் இல்லைன்னு நினைக்கிறதே ஸ்ட்ரெஸ்ஐ அதிகப் படுத்தும்ன்னு சொன்னாளா இல்லையா?. போதாக் குறைக்கு உங்களோட ஆஃபீஸ் பிரச்சினைகள் வேற. வெள்ளைக்காரன் அவன் எந்த டைமுக்கு தூங்கணுமோ கரெக்டா நன்னா தூங்கிடுறான். அதுக்கப்புறம் நீங்க தூங்கிற டைமுக்கு முழிச்சிண்டு உட்கார்ந்துண்டு உங்க எல்லாரையும் வேல வாங்கறான். இந்த மாதிரி கண் முழிச்சு டெய்லி வேல பண்ணிண்டு இருக்கிறதும் ஒரு வித ஸ்ட்ரெஸ்தான்” என்றாள் கௌரி.
“அதுக்கு என்னம்மா பண்ண முடியும் , சம்பளம் கொடுக்கிறதே அவன் சொல்ற வேலையை பண்ணத்தானே” என்று சொல்லிக்கொண்டே ஸ்ரீமதி அவளுடைய ரூமுக்கு போய் விட்டாள்.
ஸ்ரீமதி சொன்ன மாதிரி ரகுவிற்கு இயர் எண்ட் வேலை ரொம்பவே அதிகமாக இருந்தது. வாரத்தின் ஐந்து நாட்களும் ராக்கூத்துதான். சனி ஞாயிறு முழுவதும் தூக்கம்தான். இப்படியே மூன்று மாதம் ஓடிவிட்டன. ஒரு நாள் ஸ்ரீமதியின் அம்மா திடீரென்று வந்தாள். ஸ்ரீமதியின் அம்மா எப்பொழுதாவது வருவாள். ஆனால் எப்பவுமே அது ஸ்ரீமதியுடைய லீவ் நாட்களாகத்தான் இருக்கும். அதுவும் முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் வருவாள். இந்த மாதிரி ஸ்ரீமதி இல்லாத நேரத்தில், அவள் வேலைக்கு சென்ற வேளையில், முன்கூட்டியே சொல்லாமல் வந்திருப்பது இதுதான் முதல் தடவை. ஒரு வேளை ஸ்ரீமதிகிட்ட ஃபோன் பண்ணி சொல்லி இருப்பாளோ, இல்லை பக்கத்தில் யார் வீட்டுக்காவது போய்விட்டு அப்படியே இங்கும் வந்திருப்பாளோ என்று யோசித்துக்கொண்டே கௌரி கதவைத் திறந்தாள்.
“வாங்கோ வாங்கோ, என்ன திடீர்னு? ஸ்ரீமதிகூட நீங்க வருவேள்னு சொல்லவேயில்லை. சொல்ல மறந்துட்டா போல இருக்கு. இந்த பக்கம் ஏதாவது வேலையா வந்தேளா? சாப்பாடு ஆச்சா, என்ன சாப்பிடறேள்? என்று கௌரி அடுக்கடுக்காய் கேள்வி கேட்டாள்.
கௌரிக்கு உள்ளுக்குள் கொஞ்சம் நடுக்கம், இந்த மாமி இப்படி சொல்லாம கொள்ளாம வந்திருக்காளே, என்ன பேசப் போகிறாளோ, என்னக் கேள்வி கேட்பாளோ, ஸ்ரீமதி வேற வீட்டில இல்லையே, தனியாக எப்படி சமாளிக்க போறேனோ என்ற கவலை அவளைப் பற்றிக்கொண்டது.
கௌரிக்கு ஸ்ரீமதியோட அம்மா அப்பா பெயரில் நல்ல மரியாதை உண்டு. அவர்கள் ரொம்ப நல்ல மாதிரித்தான். ஆனால் இந்த குழந்தை விஷயத்தில் ஸ்ரீமதியோட அம்மா கொஞ்சம் வேறு மாதிரி நடப்பதால் கௌரி கொஞ்சம் பயந்திருந்தாள்.
“சாப்பிட்டுத்தான் கிளம்பினேன். நான் இங்க வரப்போறேன்னு ஸ்ரீமதிக்கே தெரியாது. நான் சொல்லல. உங்க கிட்ட தனியா பேசணும்னுதான் நான் அவள் ஆஃபீஸ் போயிருக்கிற டைமாப் பார்த்து வந்தேன்”.
தான் பயந்த மாதிரியே குழந்தையைப் பற்றி பேசத்தான் ஸ்ரீமதியோட அம்மா வந்திருக்கிறார் என்று கௌரிக்கு புரிந்துவிட்டது.
“பிள்ளையாரப்பா எந்த பிரச்சினையும் ஆகக்கூடாது” என்று வேண்டிக்கொண்டே “சொல்லுங்கோ மாமி, என்ன விஷயம்? என்று கௌரி ஸ்ரீமதி அம்மாவிடம் கேட்டாள்.
“இத பாருங்கோ மாமி, நான் ஸ்ரீமதிகிட்ட சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன். உங்க பையன் கிட்ட ஓரளவுக்குத்தான் என்னாலே பேசமுடியும். ஆனா அவா ரெண்டு பேரும் குழந்தை விஷயத்துல ரொம்பவே “ஈசி கோயிங்”ஆக இருக்கா. வயசு ஏறிண்டே இருக்கு ரெண்டு பேருக்கும். காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்க வேண்டாமா? என்று ஸ்ரீமதி அம்மா எடுத்ததுமே கொஞ்சம் உரத்த குரலில் ஆரம்பித்தாள்.
“மாமி, அவா ரெண்டு பேரும் குழந்தை விஷயத்துல நீங்க சொல்ற மாதிரி அப்படி எல்லாம் “ஈசி கோயிங்”கா இல்லை. நாம சொன்னோன்னுதானே அவா இது வரைக்கும் மூணு டாக்டர்ஸ் கிட்டப் போய் கன்சலட் பண்ணியிருக்கா. அவாளுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும்னு நாம எல்லாரும் ஆசபடறோம் . அதுகளும் குழந்தைக்காக ரொம்பவே ஏங்கிறதுகள். மத்த குழந்தைகள் பண்ற மாதிரி இவா ஒன்னும் “ப்ளானிங்” அது இதுனெல்லாம் பண்ணலையே. மாமி, கவல படாதேங்கோ. எல்லாம் ஸ்வாமி பார்த்துப்பார். அவருக்கு தெரியும் எப்போ கொடுக்கணும்னு. நாம யாருக்கும் ஒரு கெடுதலும் பண்ணல, அதுனாலே நிச்சயம் கடவுள் நல்லதுதான் பண்ணுவார். என்ன கொஞ்சம் டிலே பன்றார், அது நமக்கு கஷ்டமா இருக்கு, கடவுளோட கணக்கு என்னன்னு நமக்கு புரியல அவ்வளவுதான்” என்று கௌரி ஸ்ரீமதி அம்மா கிட்ட சமாதானமாக சொன்னாள்.
“இதையேத்தான் “ஸ்வாமி பார்த்துப்பார், ஸ்வாமி பார்த்துப்பார்”ன்னு சொல்லி சொல்லியே ஸ்ரீமதி என் வாயை மூடறா. நீங்களும் அதையே சொல்றேள். கடவுளாலே நமக்கு வழியைத்தான் காமிக்க முடியும் . நாமதான் அதை பின்பற்றி போகணும். நானும் ஸ்ரீமதிகிட்ட பல தடவை சொல்லிட்டேன். அவளும் ரகுவும் ஏதாவது ஒரு பெஃர்டிலிட்டி க்ளினிக் போய் காமிக்கறதுக்கு. ரெண்டு பேரும் கேட்க மாட்டேன்கிறாளே. எனக்கு தெரிஞ்சு மூணு நாலு பேருக்கு ‘டீ நகர்ல’ இருக்கிற டாக்டர் மஞ்சுளா பெஃர்டிலிட்டி க்ளினிக்ல சக்ஸஸ் ஆயிருக்கு. அதுல ரெண்டு பேருக்கு ரெட்டை குழந்தைகள் பிறந்திருக்கு தெரியுமா . நம்ப என்ன நிலைமைல இருக்கோம்னு, போய் காமிச்சா தானே தெரியும், “ஸ்வாமி கொடுப்பார், ஸ்வாமி கொடுப்பார்ன்னா” , என்ன ஜனக மஹாராஜாக்கு கொடுத்த மாதிரி வீட்டுத் தோட்டத்துல அவரேவா வந்து குழந்தையை கொடுப்பார். வழியைத்தான் அவர் உங்களுக்கு காமிச்சு கொடுப்பார். அந்த வழியில நாம தான் போகணும். நானும் எத்தனை தடவை சொல்ல முடியும், ரெண்டு பேரும் ஒரு நடை போய் கன்சல்ட் பண்ணுங்கோன்னு. அங்க போய் கன்சல்ட் பண்றதுக்கு ஒரு வேளை நீங்க ஏதாவது சொல்லுவேள்ன்னு ஸ்ரீமதி நினைக்கிறாளோன்னு என மனசுக்கு தோன்றது. நீங்கதான் அவா ரெண்டு பேரையும் அந்த க்ளினிகுக்கு போறதுக்கு சொல்லணும். நீங்க ரகுகிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கோ” என்று ஸ்ரீமதியோட அம்மா பொரிந்து தள்ளினாள்.
“மாமி கவல படாதேங்கோ. அவா ரெண்டு பேருக்கும் அவ்வளவு ஒண்ணும் வயசாகலை . எனக்கு தெரிஞ்ச சில பேருக்கு நாப்பது வயசுல கூட நார்மலா, எந்த சிகிச்சையுமே இல்லாம குழந்தை பிறந்திருக்கு. அதுக்காக நான் அந்த வயசு வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு சொல்ல வரல. உங்களுடைய ஆதங்கம் எனக்கு நன்னாவே புரியறது. நானும் அவா ரெண்டு பேருகிட்டையும் பேசறேன். அவா ரெண்டு பேரையும் கன்வின்ஸ் பண்ணி நீங்க சொன்ன க்ளினிக்குக்கு போக சொல்லறேன். கடவுள் சீக்கிரம் கண்ண திறந்தால் தேவலை. நல்லது நடக்கும்னு நம்புவோம், நம்மளை கடவுள் கை விடமாட்டார்” என்று சொல்லி சமாதானம் செய்து ஸ்ரீமதியோட அம்மாவை அனுப்பி வைத்தாள்.
சிவராமன், கௌரிக்கும் ஸ்ரீமதியோட அம்மாவுக்கும் நடந்த சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டு இருந்தார். ஸ்ரீமதியோட அம்மா கிளம்பி போனவுடன் சிவராமன் “கௌரி, அந்த மாமி சொல்றதிலேயும் ஒரு பாயிண்ட் இருக்கு. ஐந்து வருஷங்கிறது கம்மி பீரியட் இல்ல. நீ என்னதான், ரகுவும் ஸ்ரீமதியும் “பிளானிங்’லாம்” பண்ணலைன்னு சொன்னாலும், எல்லாரும் பண்ற தப்பைத்தான் இவாளும் பண்ணி இருக்கா . ஆரம்ப நாள்ல கொஞ்சம் வருஷம் ஃபிரியா இருக்கணும்னு நினைக்கிறது, பின்னாடி குழந்தைக்காக ஏங்கறது. நீ அந்த மாமி சொன்ன மாதிரி ஸ்ரீமதிகிட்ட எடுத்துச் சொல்லு, நானும் ரகுகிட்ட பேசறேன். ரெண்டு பேரும் அந்த டாக்டர் மஞ்சுளாகிட்ட போய் கன்சல்ட் பண்ணிட்டு வரட்டும்” என்று கௌரியிடம் சொன்னார்.
ஸ்ரீமதி அன்று ஆஃபீசிலிருந்து வந்த உடன் கௌரியின் முகம் எப்பவும் போல் சுரத்தாக இல்லாமல் வாடி இருப்பதை பார்த்தாள். கௌரி தினமும் ஸ்ரீமதி ஆஃபீசிலிருந்து வந்தவுடன் “ஒரு வாய் காஃபி கலக்கட்டுமா” என்று கேட்பாள். இன்றைக்கு கேட்கவில்லை . ஏதோ நடந்திருக்கு இல்லை கௌரிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்க வேண்டுமென்று ஸ்ரீமதிக்கு புரிந்துவிட்டது. ஸ்ரீமதி, கௌரியிடம் “அம்மா, என்ன தலவலியா, ஏன் என்னமோ மாதிரி இருக்கேள்? உடம்புக்கு முடியலையா? என்று கேட்டாள் .
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் சாதாரணமாத்தான் இருக்கேன்” என்று கௌரி சுவாரஸ்யமில்லாமல் பதில் சொன்னாள்.
கௌரியின் உதடு ஒன்று சொல்கிறது, மனது வேறு சொல்கிறது என்று ஸ்ரீமதிக்கு தெரிந்தது. கௌரியால் ரொம்ப நேரம் எதையும் மனதிற்குள் வைத்திருக்க முடியாதென்று ஸ்ரீமதிக்கு தெரியும், அதனால் இப்போ ஒன்றும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தாள். ஸ்ரீமதி எதிர்பார்த்த மாதிரி, சமையல் ரூம் க்ளீன் பண்ணும் பொழுது கௌரி மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.
” ஸ்ரீமதி, இன்னைக்கு மத்தியானம் உங்க அம்மா வந்திருந்தா”
“அப்படியா, ஆச்சரியமா இருக்கு, அம்மா சொல்லாம வரமாட்டாளே, அதுவும் ஒர்கிங் டேல. நான் இன்னிக்கு கார்த்தாலே ஆபீஸ் போகும் பொழுது கூட ஃபோன் பண்ணினேனே, அப்பா உடம்பு எப்படி இருக்குன்னு கேட்கிறதுக்கு, அப்போகூட இங்க வரதப்பத்தி சொல்லவே இல்லையே. இங்க பக்கத்துல எங்கேயாவது வந்தாளாமா? என்று ஸ்ரீமதி கேட்டாள் .
“இல்லை. என் கூட பேசணும்னுதான் வந்தாளாம்”
“என்னவாம், நிச்சயம் குழந்தைப்பத்தி பேசத்தான் வந்திருப்பா. நானும் ரகுவும் எவ்வளவு தடவை சொன்னாலும் அந்த டாக்டர் மஞ்சுளாகிட்ட கன்சல்ட் பண்ண மாட்டேன்கிறோம்னு, அத பத்திதானே பேசினா?
“ஆமாம் . உங்க ரெண்டு பேரையும் அந்த டாக்டர் கிட்ட போறதுக்கு கன்வின்ஸ் பண்ண சொன்னா. நிறைய தடவை உன்கிட்ட சொல்லிட்டாளாம், நீ காதுலேயே போட்டுக்க மாட்டேங்கிறேயாம். ரகுகிட்டயும் ஒரு மாதிரி சொல்லி பார்த்துட்டாளாம். ஆனா எந்தப் பயனும் இல்லையாம் . எப்படியாவது உங்க ரெண்டு பேர் கிட்டேயும் பேசி அங்க போறதுக்கு வழி பண்ண சொன்னா”
“நீங்க என்ன சொன்னேள்? .
“வேற என்ன சொல்ல முடியும், ஸ்ரீமதி. நான் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் பேசறேன்னுதானே சொல்ல முடியும். இங்க பாரு ஸ்ரீமதி, நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதே. அம்மா சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்யறது. அஞ்சு வருஷம் ஆயிடுத்து. மத்த வியாதிக்கு நாம ஒரு டாக்டர் கிட்ட போய் சரியாகலேனா என்ன பண்ணறோம், அடுத்து ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போறோமா இல்லையா? அது மாதிரிதானே இதுவும் . ஒரு தடவை உங்க அம்மாவுடைய திருப்திக்காக அந்த டாக்டர் மஞ்சுளா கிட்டப்போய்த்தான் கன்சல்ட் பண்ணுங்கோளேன்” என்று கௌரி கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னாள்.
“அம்மா, டாக்டர் மஞ்சுளா கிட்ட போறது, மத்த வியாதிக்கு போற ஸ்பெஷலிஸ்ட் மாதிரி இல்லை. அந்த டாக்டர் நடத்தறது ஒரு “செயற்கை கருத்தரிப்பு மையம்”. அது என்ன “செயற்கை”? பிறக்கிற குழந்தை என்ன செயற்கை குழந்தையா? இந்த மாதிரி பேரு வெச்ச க்ளினிக்குக்களை கண்டாலே எனக்கு எரிச்சல் வருது” என்று கொஞ்சம் சுள்ளென்று ஸ்ரீமதி பதில் சொன்னாள் .
“புரியறது ஸ்ரீமதி. எனக்கு நன்னாவே புரியறது. உங்க அம்மாவை மனசுல வெச்சிண்டுதான் நான் அந்த டாக்டர் கிட்ட போகறதுக்கு சொல்றேன். அப்பாவும் ரகுகிட்ட பேசறேன்னு சொல்லி இருக்கா. சீக்கிரமா ரெண்டு பேரும் ஒரு நல்ல முடிவை எடுங்கோ” என்று சொல்லிவிட்டு கௌரி ஹாலுக்கு சென்று விட்டாள்.
ரகுவும் ஸ்ரீமதியும் அவர்களுக்குள் பேசி முடிவு எடுக்க இரண்டு வாரம் ஆயிற்று . அவளுடைய அம்மா சொன்ன அதே டாக்டர் மஞ்சுளாவுடைய பெஃர்டிலிட்டி க்ளினிகிக்கிற்கு சென்றனர். அந்த க்ளினிக்கில் கூட்டம் நிறையாகவே இருந்தது. நல்ல கை ராசி டாக்டர் என்று அங்கே வந்தவர்கள் சொன்னார்கள். அந்த க்ளினிக்கில் டிரீட்மென்ட் எடுத்துக்கொண்டு பிறந்த குழந்தைகளின் ஃபோட்டோ ஆங்காங்கே இருந்தது. அதில் ரெட்டை குழந்தைகளின் ஃபோட்டோக்களும் பல இருந்தன. ஸ்ரீமதியின் வயது ஒத்தவர்கள் மற்றும் கொஞ்சம் வயதில் மூத்தவர்கள் என்று எல்லோரும் தங்களுடைய முறைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
டாக்டர் மஞ்சுளா ரொம்பவே கனிவாக பேசினாள் . சில டெஸ்ட்ஸ் எழுதி கொடுத்தாள் . ரகுவை அதே சென்டரில் வரும் ஒரு ஆண் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கிக்கொண்டு கன்சல்ட் பண்ண சொன்னார் டாக்டர் மஞ்சுளா. ஒரு அசிஸ்டன்ட் டாக்டர், இந்த செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) இருக்கும் பல கட்டங்களை ரகுவிற்கும், ஸ்ரீமதிக்கும் விவரித்தாள். IVF சிகிச்சைக்கு முன் எடுக்க வேண்டிய பரிசோதனைகள், கருமுட்டையை வலுவூட்டுவதற்கு எடுக்க வேண்டிய மருந்துகள், கருமுட்டை சேகரித்தல், விந்தணு சேகரித்து அதில் தகுதியானதை தேர்ந்தெடுத்தல், லபோரட்டரியில் உயிரணுவையும் கருமுட்டையும் ஒன்று சேர்த்தல், கருவை வளரச் செய்தல் மற்றும் கருப்பைக்குள் செலுத்துதல் என்ற IVF சிகிச்சை முறைகளே அந்த அசிஸ்டன்ட் டாக்டர் விவரமாக விவரித்தாள்.
இந்த சிகிச்சை முறைக்கான செலவினங்களையும் ரகுவும் ஸ்ரீமதியும் அந்த அசிஸ்டன்ட் டாக்டரிடம் கேட்டறிந்தனர். இந்த சிகிச்சை முறை நிச்சயமாக சாமான்ய பட்டவர்களுக்கு அல்ல என்று அவர்கள் இருவருக்கும் தோன்றியது.. ஆனாலும் காத்திருப்போர் பலரைப் பார்க்கும் பொழுது நிச்சயம் அவர்கள் தனது சக்திக்கு மீறித்தான் இந்த சிகிச்சை முறைக்கு நிர்பந்தப் படுத்தப்பட்டிருப்பார்கள் , எல்லாம் குழந்தை என்கிற வரத்திற்காக, என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.
டாக்டர் மஞ்சுளா அவர்கள் க்ளினிக்கில் நடந்த மிகவும் சிக்கலான குழந்தை பிறப்புகள் பற்றியும், அதை அவர்கள் எதிர்கொண்ட முறைகளைப் பற்றியும் அழகாக விளக்கினார்.
இந்த சிகிச்சை முறையின் வெற்றி விகிதம் பற்றிய புள்ளி விவரங்களை டாக்டர் மஞ்சுளா இருவருக்கும் பகிர்ந்தார். அது ஸ்ரீமதிக்கும் ரகுவிற்கும் நிறையவே நம்பிக்கை தரும் விதமாக இருந்தது.
டாக்டர் மஞ்சுளா அறிவுரைப்படியும் ரகுவின் ஆண் டாக்டர் அறிவுரைப்படியும், இருவருக்கும் டிரீட்மென்ட் தொடங்கியது. விந்தணுவும் கருமுட்டையும் வலுவூட்டுவதற்காக பட்டை பட்டையாக மருந்துகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டன. அவர்கள் இருவருடைய சேர்ப்புக்கு நாட்கள் குறிக்கப்பட்டன, நேரங்கள் சொல்லப்பட்டன. அவர்களுக்கு எல்லாமே இயந்திரகதியாக இருந்தது. எந்த நிகழ்வு ஒரு ஆணிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் சுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டுமோ, அந்த நிகழ்வு இப்பொழுது அவர்களுக்கு ஒரு பெரும் சுமையாக தெரிந்தது..
முதல் கட்டத்தில் சக்ஸஸ் கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட டிரீட்மென்ட்க்கு செல்ல வலியுறுத்தப்பட்டனர். ஸ்ரீமதிக்கு தொடர்ச்சியாக தினமும் இன்ஜெக்ஷன் போடப்பட்டன. அடுத்தடுத்த கட்டங்களை கடக்கும் பொழுது ஒரு வித சோர்வு இருவரையும் ஆட்கொண்டது. ஏதோ என்ன என்று தெரியாத, வெளியே மீள முடியாத புதை குழியில் மாட்டிக் கொண்டது போல் இருவருக்கும் தோன்றியது . டாக்டர் மஞ்சுளா இது வரைக்கும் நடந்த சிகிச்சை முறைகளை ஒரு கட்டத்தில் ஆய்வு செய்துவிட்டு, மறுபடியும் தன்னுடைய கனிவான குரலில் “அன்பாஃர்டுநேட்லி இந்த முறை சக்ஸஸ் கிடைக்கவில்லை.. இந்த மாதிரி ஆகறதும் சகஜம்தான். ரெண்டு மூனு மாசம் பிரேக் எடுத்துக்கோங்க. சில பேர் இந்தப் பீரியட்லேயே நார்மலாவும் கன்சிவ் ஆயிர்க்காங்க. அப்படி எதுவும் ஆகலைன்னா, சில புரோட்டோக்கால்ஸ் சேஞ்ச் பண்ணிப் பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் ” என்று கூறி விட்டு சென்று விட்டாள். அசிஸ்டன்ட் டாக்டர் உடனே மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு நாளில் வர முடியுமா என்று கேட்டுவிட்டு அப்பாயிண்ட்மென்ட் குறித்துக் கொண்டாள்.
ஸ்ரீமதிதான் ரொம்பவே நொறுங்கிப் போயிருந்தாள். அதை வெளியே தெரியாமல் இருக்க ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள். நாட்கள் கடந்து போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக மன ரணமும் ஆறிவிடுமென்ற நம்பிக்கையில் வீட்டில் யாரும் நடந்த சிகிச்சையைப் பற்றி பேசவேயில்லை. முக்கியமாக ஸ்ரீமதியின் அம்மா, கடைசியாக அந்த டாக்டர் மஞ்சுளா க்ளினிக்கில் பார்த்ததுடன் சரி, அதற்கு அப்புறம் அவள் வீட்டிற்கும் வரவில்லை. இரண்டு வாரத்தில் ஸ்ரீமதியும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாள். வழக்கம்போல் ரகுவும் ஸ்ரீமதியம் ஒன்றாக கிளம்பி ஆஃபீஸ் செல்லத் துவங்கிவிட்டனர்.
இப்படியே இரண்டு மாதம் ஓடிவிட்டது. ஸ்ரீமதியும் ரகுவும் குழந்தை விஷயமாக அடுத்து என்ன செய்ய தீர்மானித்துள்ளார்கள் என்று கௌரிக்கு புரியவில்லை. அதைப் பற்றி அவர்களிடம் கேட்பதற்கும் கௌரி சங்கடப் பட்டாள். “குழந்தை பிறப்பது என்பது, ஊர் உலகில் எல்லோருக்கும் சகஜமாக நடக்கிற விஷயம், ஏன் இவர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை, இவ்வளவு கஷ்டபட வேண்டியுள்ளது. வேண்டாத தெய்வமில்லை, போகாத கோவில் இல்லை, படிக்காத ஸ்லோகம் இல்ல, சொன்ன எல்லா பரிகாரங்களும் செஞ்சாச்சு, ஆனாலும் அந்த பகவான் கண்ணையும் காதையும் இறுக்க மூடிண்டு இருக்கான். அவன் கல்லா இருக்கிற மாதிரி அவன் மனசும் கல்லா இருக்கு. ஆனா என்ன, திருப்பி அவன் கால்லதான் சரணடைய வேண்டிருக்கு. வேற வழி?. இப்பல்லாம் ஸ்ரீமதிக்கும் ரகுவிற்கும் குழந்தை பாக்கியம் கொடுன்னெல்லாம் ஸ்வாமி கிட்ட கேட்கிறதே இல்லை. சில சமயம் கேட்டு என்ன ப்ரயோஜனம்னு தோனும், சில சமயம் அவருக்கு தெரியாதா எப்போ கொடுக்கணும்னு நினைக்க வேண்டியிருக்கு, ஏன் கேட்டு கேட்டு எதிர்பார்ப்பை வளர்த்துக்கணும்” என்று மனதுக்குள் புலம்பியவண்ணமே, ஒரு முடிவுக்கு வந்தவளாக கௌரி ஸ்ரீமதியை கூப்பிட்டாள்.
“ஸ்ரீமதி, குழந்தை விஷயமா அடுத்து என்ன பண்றதா நீயும் ரகுவும் தீர்மானிச்சிருக்கேள். அந்த டாக்டர் மஞ்சுளா சொன்ன மாதிரி மூணு மாசத்துக்கு அப்புறம் அவாகிட்டேயே திருப்பி போகப்போறேளா, இல்ல பார்த்துண்டு செய்யலாம்னு இருக்கேளா?” என்று கௌரி கேட்டாள் .
“அம்மா அதை பத்தி நாங்க ஒண்ணும் டிசைட் பண்ணல. என்ன பண்றதுன்னும் புரியல” என்று பதில் சொன்னாள்.
“ஸ்ரீமதி, எனக்கு மனசுல பட்டத சொல்லட்டுமா. உங்க அம்மா சொன்னதுக்காகவும், அவளுடைய மனசுக்காகவும்தான் நான் உங்க ரெண்டு பேரையும் அந்த மஞ்சுளா டாக்டர்கிட்ட போகறதுக்கு கட்டாயப் படுத்தினேன். எனக்கு அதில் துளிக்கூட இஷ்டமேயில்ல. என்னை கேட்டா இந்த மாதிரி தெருக்குத் தெரு ஒரு கருத்தரிப்பு மையம்னு ஒரு க்ளினிக் வருவதற்கு காரணமே, நம்மளோட லைஃப் ஸ்டைல் தான். எதை பிடிக்கப் போறோம்னு தெரியாமலயே எல்லாரும் ஓடிண்டு இருக்கோம். டெஸ்டினேஷன் எது, யாருக்குமே தெரியாது. நம்மள சுத்தி இருக்கிறவா எல்லாரும் ஓடறா. நாமும் ஓடறோம். ஓடியாகணும் , இல்லைன்னா ரேஸ்ல பின் தங்கிடுவோம், அப்படின்னு நாம நினைச்சிண்டு இருக்கோம். என்ன பண்ண முடியும், இதுதான் இப்பொழுதைய உலக நியதி இதோட ரிசல்ட், எல்லாரும் எப்பொழுதும் ஸ்ட்ரெஸா இருக்கோம். . குழந்தை பிறக்க டிலே ஆகறதுக்கு முக்கியமான காரணம் இந்த ஸ்ட்ரெஸ்தான்னு நான் படிச்சிருக்கேன் . அந்த ஸ்ட்ரெஸ்ஸை கழட்டி எறியணும். நாமதான் அதுலேந்து விடுபடறதுக்கு என்ன வழின்னு பார்க்கணும். நான் ஒண்ணு சொல்றேன் ரெண்டு பேரும் கேப்பேளா? நீயும் ரகுவும் ஒரு பத்து நாளைக்கு ஏதாவது ஒரு நல்ல இடத்துக்கு, எல்லாத்தேயும் மறந்துட்டு போயிட்டு வாங்களேன். ஏன் நீங்க ஹனி மூனுக்கு போன இடத்துக்கே திருப்பி போங்களேன் . இப்போ இருக்கிற மாதிரி கல்யாணமான புதுசுல உங்களுக்குள்ள புரிதல் இருந்திருக்காது. இதை செகண்ட் ஹனி மூன்னு நினைச்சிண்டு போங்கோ. பத்து நாளும் எதைப் பத்தியும் யோசிக்காம எந்த ஸ்ட்ரெஸும் இல்லாம ஒரு சுதந்திரப் பறவை மாதிரி என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ. நேத்திக்குத்தான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமானமாதிரி நினைச்சுக்கோங்கோ. நாம எல்லாரும் எதிர்பார்க்கிற விஷயம் நிச்சயமா நடக்கும்” என்று ரொம்ப நீளமாக பேசிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“நீங்க சொல்றதும் சரிதான். நானும் ரகுகிட்ட சொல்றேன்” என்று ஸ்ரீமதி பதில் சொன்னாள் .
“சொல்லறேன்னு சொல்லாத. செய். அது இதுன்னு காரணம் சொல்லி தள்ளிப்போடாம சீக்கிரமாப் ப்ளான் பண்ணுங்கோ. அவன் ஏதாவது ஆஃபீஸ், அது இதும்பான், அவன எப்படியாவது தள்ளிண்டு போறது உன் சாமர்த்தியம்”.
“சரிம்மா, நிச்சயமா ப்ளான் பண்ணறோம்மா” என்று சொல்லிட்டு ஸ்ரீமதி சென்றுவிட்டாள்.
சிவராமனுக்கு இரவு பால் கொடுத்துவிட்டு, தான் ஸ்ரீமதிக்கு சொன்ன ஸஜ்ஜெஷனைப் பற்றி கௌரி சொன்னாள். அவரும் அதை ஆமோதித்தார்.
“ஆமாம், இந்த வயசு குழந்தைகள் எல்லாம் ஒரே மாதிரி கஷ்டப் படறதுகள். கல்யாணம் பண்ணிக்கும் பொழுது ரெண்டு பேரும் வேலைக்கு போகிற மாதிரி இருக்கணும்னு பார்க்கிறது, அப்புறம் அந்த ரெண்டு வருமானத்தையும் கணக்கு பண்ணி லாங் டெர்ம் கமிட்மென்ட்க்கு போறது. அப்புறம் வேலையை விட முடியாம கஷ்டப்படறது . இப்படியே இவா எல்லோருடைய வாழ்க்கையும் எப்பவுமே ஸ்ட்ரெஸ்டாதான் இருக்கு. வேண்டாம்னு விட்டுட்டு வரவும் முடியாது. ஒரு வித “கோல்டன் கேஜ்”தான் இவா எல்லாருடைய வாழ்க்கையும் ” என்று சொல்லி சிவராமன் வருத்தப்பட்டார்.
ஒரு மாதம் கழித்து ரகுவும் ஸ்ரீமதியும் நைய்னித்தால் போகலாம் என்று ப்ளான் பண்ணினார்கள். அவர்கள் ஹனி மூனுக்கு சென்ற இடமும் நைய்னித்தால்தான். அங்கு மாத்திரம்தான் வேறு எங்கும் செல்வதற்கு ப்ளான் செய்யவில்லை. டெல்லி வரைக்கும் ஃபளைட்டில் போய்விட்டு அங்கிருந்து நைய்னித்தாலுக்கு ட்ரெயினில் போகிறமாதிரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளம்புவதற்கு முன் “இங்க பாருங்கோ நீங்க ரெண்டு பேரும் என்ஜாய் பண்ணப் போறேள், அங்கேயும் போய் இங்க இருக்கற மாதிரி ஆளுக்கு ஒரு மூலைல இந்த மொபைல வச்சுண்டு உட்காராதேங்கோ. என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த ஸ்மார்ட் ஃபோனும், லேப்டாபும் ஒரு பெரிய ‘ஸ்ட்ரெஸ் கிரியேட்டர்ஸ்’. அதை எடுத்துண்டு போகாதேங்கோ. மொபைல் ஃபோன் ஃபோட்டோ எடுக்க வேணும்னு சொல்லாதேங்கோ. வேணும்னா தனியா கேமரா இருக்கு அத எடுத்துண்டு போங்கோ. ஒரு இடத்துக்கோ கோவிலுக்கோ போனா எல்லாரும் அங்க மொபைல வெச்சிண்டு ஃபோட்டோவும் வீடியோவும் எடுக்கறதுலேதான் குறியா இருக்கா. போன இடத்தை ரசித்து என்ஜாய் பண்ற மாதிரியே இருக்காது. அப்பாவுடைய பழைய நோக்கியா ஃபோன் இருக்கு. போன வாரம் கூட ரகு அதுல சிம் போட்டு பார்த்தான். நன்னாவே வேலை செய்யறது. நிறைய நேரம் சார்ஜ் வேற நிக்கும், இன்னும் சொல்லப்போனா இந்த ஃபோன்லாம் மாதிரி இல்ல., அதுல பேசறது க்ளாரிட்டியோட காதுல விழறது. நீங்க ஊருக்கு போய்ச்சேர்ந்தேளா, கிளம்பிட்டேளான்னு, தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு ஃபோன் வேணும், அதுக்கு அந்த நோக்கியா போறும்” என்று கௌரி சொன்னாள் .
கௌரி சொன்ன மாதிரி, லேப்டாபும் ஸ்மார்ட் ஃபோனும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. ரகு தன்னுடைய ஆஃபீஸ் குரூப்க்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு அந்த நோக்கியா ஃபோனை எடுத்துக் கொண்டான்.
பத்து நாள் போனதே தெரியவில்லை, இப்பதான் அவர்கள் கிளம்பிப் போன மாதிரி இருந்தது கௌரிக்கு. இன்றைக்கு சாயந்திரம் திரும்ப வேண்டும். சிவராமன்தான் பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை ரகு ஃபோனுக்கு ட்ரை பண்ணிக் கொண்டு இருந்தார். ஃபளைட் ஒரு மணி நேரம் டிலே, இப்பொழுதுதான் லேண்ட் ஆனதாம். அவர்கள் ரெண்டு பேரும் வீட்டுக்கு வருவதற்கு பதினோரு மணி ஆகிவிட்டது. நல்ல வேளை அடுத்த நாள் சண்டே, ஆஃபீஸ் இல்லை என்று கௌரி நினைத்தாள். அவர்கள் ரெண்டு பேர் முகத்தில் களைப்புக்கு மீறி ஒரு வித மலர்ச்சி இருப்பதை கௌரியால் உணர முடிந்தது. ஸ்ரீமதிக்கு இந்த பத்து நாளில் அவர்கள் பார்த்தது, பேசினது, சாப்பிட்டது எல்லாவற்றையும் அன்னி நைட்டே கௌரியிடம் சொல்லிட வேண்டுமென்று பார்த்தாள். கௌரிதான் “எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம், இப்போ ரெண்டு பேரும் தூங்கப் போங்கோ” என்று துரத்தி விட்டாள். அடுத்த நாள் ஸ்ரீமதி எழுந்ததிலிருந்து நாள் முழுக்க முழுக்க நைனித்தால் ட்ரிப் பற்றி, அவர்கள் அங்கு பார்த்தது, அங்கு நடந்தவை பற்றித்தான் பேசிக்கொண்டே இருந்தாள். கௌரிக்கு நிறைவாக இருந்தது.
திங்கள் கிழமையிலிருந்து இருவருக்கும் வழக்கம் போல் ஆஃபீஸ். அதே ரொட்டீன். இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது.
அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்ரீமதியும் ரகுவும் வழக்கத்துக்கு மாறாக ரொம்பவே சீக்கிரம் எழுந்துவிட்டார்கள். ரகு காலையிலேயே எங்கேயோ கிளம்பிப் போனான். ஸ்ரீமதி கையில் ஃபோனுடன் கொஞ்சம் பதற்றத்துடன் இங்கும் அங்குமாக போய்க் கொண்டு இருந்தாள். கௌரிக்கு ஒண்ணும் புரியவில்லை. கொஞ்ச நேரத்தில் ஸ்ரீமதிக்கு ஃபோன் வந்தது, அந்தப் பக்கத்தில் ரகுவாகத்தான் இருக்க வேண்டுமென்று கௌரிக்கு தோன்றியது. ஸ்ரீமதி அடுத்த நிமிஷம் கௌரியை வந்து கட்டி பிடித்துக்கொண்டு “அம்மா, டெஸ்ட்ல பாசிட்டிவ்ன்னு ரிப்போர்ட் வந்துருக்காம், இப்பதான் ரகுகிட்டேந்து போன் வந்தது. நேத்திக்கே அந்த கிட் வெச்சு டெஸ்ட் பண்ணினேன். பாசிட்டிவ்ன்னு வந்தது. எதுக்கும் லேப்ல கொடுத்து டெஸ்ட் பண்ணிடலாம்னு தோணித்து” என்று ஒரு சந்தோஷம் கலந்த அழுகையோட சொன்னாள்.
கௌரியின் கண்களில் மள மளவென்று கண்ணீர் அருவியாக கொட்டியது. அவளால் பேச முடியவில்லை. நெஞ்சு அடைப்பது போன்று அவளுக்கு இருந்தது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு ஸ்ரீமதியிடம் “அம்மாடி ஸ்ரீமதி, சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்க. போய் ஸ்வாமிக்கும் பெரியவாக்கும் நமஸ்காரம் பண்ணு. அப்பறமா அம்மாக்கு இந்த நல்ல விஷயத்த முதல்ல சொல்லு, ரொம்ப சந்தோஷப்படுவா” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் சர்க்கரையை எடுத்துக்கொண்டு சிவராமனிடம் ஓடினாள், “வாய திறங்கோ, உங்களுக்கு சுகர் இருந்தாலும் பரவாயில்ல, இந்தாங்கோ ஒரு பொட்டு சக்கரை, நல்ல நியூஸ், நம்ம ஸ்ரீமதி பேமிலி வேய்ல இருக்கா, கங்காராசுலேட் பண்ணுங்கோ” என்று அழாத குறையாக சொன்னாள்.
இந்த நாளுக்காக எல்லோரும் எவ்வளவு ஏங்கிருப்போம் என்று நினைத்து நினைத்து கௌரிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. இவ்வளவு நாள் இந்த குழந்தைகளை, ஏன் எங்களையும் கூட, சுற்றி இருக்கும் மக்கள் எவ்வளவு வார்த்தைகளாலே வருத்தி இருக்கிறார்கள். அவர்கள் எதுவும் கெடுதலாக சொல்லவில்லை, நல்ல வார்த்தைகள் தான் சொன்னார்கள். ஆனா அந்த நல்ல வார்த்தைகளும் இந்தக் குழந்தைகளுடைய மனதை எப்படி பாதிக்கும்னு யாருமே யோசிக்கவேயில்லை. கல்யாணமாகி மூணு மாசத்துலேந்து “ஏதாவது விசேஷம் உண்டா” என்று கேட்கிறது.. விசேஷம் இருந்தா சொல்லத்தானே போறோம். இது என்ன மூடி மறைக்கக் கூடிய விஷயமா? கல்யாணம் ஆகி ஒண்ணு ஒண்ரை வருஷம் ஆயிடுத்துன்னா “என்ன ப்ளானிங்கா”ன்னு கேக்கறது. இதைக் கேட்டா, அந்த மாதிரி ‘ப்ளானிங்’லாம் பண்ணாம இருக்கிற குழந்தைகள் மனசு எவ்வளவு பாடு படும். அப்புறம் ஏதாவது விசேஷத்துக்குப் போன பொழுது , வயசுல பெரியவர்களை நமஸ்காரம் பண்ணினால் போதும், உடனே “அடுத்த வருஷம், கையில ஒரு குழந்தையோட வரணும்னு” சொல்லறது, நாங்க நமஸ்காரம் பண்ணினா “அடுத்த வருஷதுக்குள்ள பேரனோ பேத்தியோ வரணும்’ன்னு சொல்லறது. நல்ல ஆசீர்வாதம்தான், இல்லைன்னு சொல்லல. அதை அவா மனசுக்குள்ள நினைச்சிண்டு ஆசீர்வாதம் பண்ணட்டுமேன்னுதான் சொல்லறேன். இது குழந்தை இல்லைங்கிறதை குத்திக் காண்பிக்கிறமாதிரித்தானே அந்தக் குழந்தைகளுக்கு தோன்றும். ஆசீர்வாதம் பண்றவா அந்த நோக்கத்தோடு சொல்லலை, அது எனக்கு நன்னாவே தெரியும், ஆனாலும் குழந்தைகளுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கு இல்லையா, அதையும் யோசிக்கணும்னு சொல்லறேன். அடுத்து கேக்காமயே “இந்த டாக்டர்கிட்டப் போங்கோ, அந்த க்ளினிக்குக்கு போங்கோ’ன்னு சஜஸ்ட் பண்ணறது. இப்போ எல்லா விஷயமும் ‘கூகுல்’க்கு அத்துபடி, குழந்தைகளுக்கு நல்ல மேச்சுரிட்டி இருக்கு. எல்லா விஷயமும் அவளாலே அலசி ஆராய்ந்து முடிவு எடுத்துக்க முடியும். அவாளுக்கு என்ன எப்போ பண்ணனும்னு நன்னாவே தெரியும். இது அவாளோட வாழ்க்கை. இதை எல்லாரும் புரிஞ்சிக்கணும். நல்ல எண்ணத்துல சொல்றதுகூட குழந்தைகள் மனசை எவ்வளவு பாதிக்கும்னு உணரணும். இதையெல்லாம் கௌரிக்கு உறக்க கத்தி தன்னுடைய சொந்தபந்தங்கள், சுற்று வட்டாரங்கள், ஏன் இந்த உலகத்துக்கே சொல்லவேண்டும் போல இருந்தது. இதை நினைத்துக் கொண்டே எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்று “கர்ப்பரக்ஷாம்பிகைக்கு” வேண்டிக் கொண்டு முடிந்து வைத்தாள் கௌரி.

Oh, Super story. Very nicely brought out.Attitude of the elders on newly married couples and their longing for child vividly described. Apt solution suggested.Glad that the family’s goal achieved.
Yes, today’s atmosphere at the office when both are employed, gives more stress to their mind and that they lead a machine life though with all luxuries. Understandably,this must not be there and they have to take breaks regularly without the disturbance of office, mobile etc.,for free mind without any form of stress.
By the by, personally I am against these fertility clinics which has been neatly covered in the story.
The sequence of the story, conversations neatly brought out without hurting anybody.
VERY NICE
Oh, Super story. Very nicely brought out.Attitude of the elders on newly married couples and their longing for child vividly described. Apt solution suggested.Glad that the family’s goal achieved.
Yes, today’s atmosphere at the office when both are employed, gives more stress to their mind and that they lead a machine life though with all luxuries. Understandably,this must not be there and they have to take breaks regularly without the disturbance of office, mobile etc.,for free mind without any form of stress.
By the by, personally I am against these fertility clinics which has been neatly covered in the story.
VERY NICE
சார், மிகவும் நல்ல கதை. படிப்பதை அறவே விட்டு விட்ட நான், வெகு நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்து விட்டேன். அருமை.
அனுஷா
அருமையான ஆழமான நெஞ்சைத் தொடும் கதை.இந்தக் கதையில் உள்ள அதே நிலையில் தான் நாங்களும் இருக்கிறோம்.
நல்ல கருத்துடன் முடிவு. தங்கள் எழுத்துக்களை படித்துவிட்டு உடனுக்குடன் என்னிடம் பகிர்ந்து விடுவார்கள். தங்கள் மகனும் நன்கு எழுதுகிறார். நன்கு வளர்த்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் .
ராஜசேகர் ( கௌரி மிஸ் )
மிகவும் நன்றாக எழுதியிருக்கிறாய் நண்பா …
இன்றைய சூழ்நிலையில் தம்பதியரின் மன நிலை எப்படி உள்ளது என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறாய் ….
நல்ல கதை ஓட்டம் …
இறுதியில் இயற்கையே வென்றது …
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ….
Sir very nice storey for the present younger generation couples and good lesson for the elderly people for there comments and advise to the couples.
However the story fails to highlight the morality of fertility centers and cheating the people.
Very best 👌
Lovely You have really brought out today’s problem which most working couples are undergoing.
Well written
Interesting Indeed. Well Crafted Positive Narratives of a So Coordinated Parents Inlaws & Daughter/ Daughterinlaw(as if a Real Incident) Arousing Curiosity in the Readers
of Problems faced by Working Couple amidst Inlaws Parents & Relatives/Society at Large. 👍😃👆🏻
Interesting Indeed. Well Crafted Positive Narratives of a So Coordinated Parents Inlaws & Daughter/ Daughterinlaw(as if a Real Incident) Arousing Curiosity in the Readers
of Problems faced by Working Couple amidst Inlaws Parents & Relatives/Society at Large. 👍😃👆🏻