
“இந்த முதலாளிக்கு நம்ம சிரமம் தெரியமாட்டேங்குதே. அடிவாரத்தில் இருக்குற சந்தைக்குப் போய்த் தினமும் வாழைக்குலை வாங்கிட்டு வரணும்னு சொல்றாரு. மலை உச்சியில் இருக்கிற புள்ளையாரை கும்பிட வரும் ஜனங்களுக்குப் பழங்கள், தேங்காய் விற்று புழைக்கிறவரு முதலாளி. எனக்குச் சம்பளம் என்ன தர்ராரு? இந்த ஓட்டை சைக்கிளைப் பன்னிரண்டு வருசமாக ஒட்டிக்கிட்டு இருக்கேன். புதுசு வாங்கிக்கொடுங்கன்னு சொன்னா, நவண்டுகிடாரு. பெடலை மிதிச்சி மூட்டு வலி உசுரை எடுக்குது.”
புலம்பிகிட்டே வண்டியை மிதிச்சி மலையேற்றத்துல ஒட்டிக்கிட்டு வந்த கணேசனை, எதிர் வழியிலே வந்து கொண்டு இருந்த ராமன் பேச்சுக்கொடுத்தான். “கணேசா , விஷயம் தெரியுமா, உங்க முதலாளியோட டிவிஸ் கீழே சாஞ்சி, முதலாளி கால் அடிவாங்கியிருச்சு. மருத்துவர் வண்டி ஆறுமாசத்துக்கு ஒட்டக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரு.”
குலையை கடையில் ஓரமாகக் கணேசன் வைக்கவும், முதலாளி பேச ஆரம்பிச்சார்.
“கணேசா, இனிமே தேங்காய் மூட்டையும் சேர்ந்து நீ தான் மலைக்குத் தூக்கிகிட்டு வரணும். “
திகிலோடு கணேசன் பார்க்கவும் –
“பயப்படாதேடா – நம்ம டிவிஸ் வண்டியை எடுத்துக்கோ. பெட்ரோல் போட்டுச் சாமான்களை வாங்கிப்போடு. நமக்கு இனி முடியாது. சம்பளம் இரண்டாயிரம் கூட்டி வேற தர்றேன். “
புள்ளையாரை கையெடுத்து கும்பிட்ட கணேசன், டிவிசை தொட்டு முத்தமிட்டான்.
