ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 45

நெஞ்சிலோர் நண்டு – சுதாகர் கஸ்தூரி (சுவாசம் பதிப்பகம், சென்னை600127. ஈமெயில்: swasam.publications@gmai.com)

“மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட ஓர் ஆணின் அனுபவக் குறிப்புகள்” என்ற அட்டைப்படக் குறிப்பு, இப்புத்தகத்தில் உள்ள செய்திகளை சுருக்கமாகத் தெரிவிக்கிறது. ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

ஒரு நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவருக்கு நுரையீரல் புற்றுநோய் (Stage IV) – அவருடைய அனுபவம், வாழ்க்கையின் அர்த்தம், மரணம், மருத்துவம் என ஒரு சுயசரிதைபோல் எழுதப்பட்ட புத்தகம் “When Breath Becomes Air”. மிகவும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட நூல் – எழுதியவர் மருத்துவர் பால் கலாநிதி. புத்தகம் முடிக்கப்பட்டு வெளியானபோது, அவர் உயிருடன் இல்லை.

அமரர் திரு கா.ஶ்ரீ.ஶ்ரீனிவாசாச்சாரியின் பேரன் திரு விஜய் சந்தானம் அவர்களுக்கு அவரது நாற்பத்தோராம் ஆண்டு மூளை வாதத் தாக்குதல் (Stroke) வந்தபோது அதனை அவர் எதிர்கொண்ட விதமும், மீண்டு வந்த மன உறுதியும் “My Stroke of Luck” புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரோக்கை எதிர்த்து போராடிய ஒரு சாமானியன், எழுத்தாளராக மாறிய வரலாறு அது.

‘கேன்சர்’ என்ற பெயரைக் கேட்டாலே அதிரும் மனிதர்களுக்கு, தைரியம், மன உறுதி, போராடும் உள்ளம், குடும்பம், நண்பர்கள் எனப் பலவும் உதவி செய்ய, மார்பகப் புற்று நோயிலிருந்து மீண்டு வந்த ஒரு சாமானியனின் வாழ்க்கை அனுபவங்களே, “நெஞ்சிலோர் நண்டு”. நல்ல படிப்பு, வேலை, பக்தி, குடும்பம், திறமையான எழுத்து, மாற்றி யோசிக்கும் திறன் என எல்லாம் நிறைந்த திரு சுதாகர் கஸ்தூரி, தனது மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்டு போராடி வெற்றி கண்ட உணமை வரலாறுதான் இந்தப் புத்தகம்.

நோயினைக் கண்டறிந்தது முதல், பரிசோதனைகள், அறுவைச் சிகிச்சை, மருந்துகள் – கீமோ தெரப்பி – கதிரியக்கம் (Radiation), ஹார்மோன் சிகிச்சை என ஒவ்வொரு நிலையிலும் அவர் எதிர்கொண்ட சவால்கள், மன உளைச்சல்கள், பக்க விளைவுகள், மருத்துவர்கள், செவிலியர்களின் அன்பும் கருணையும் கொண்ட பணி, டாட்டா மருத்துவ மனையின் சூழலும், சிறப்பான சேவையும் என முழுமையான ஒரு டைரிக் குறிப்பு இந்த நூல்.

ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வுக் கட்டுரை போலில்லாமல், புற்றுநோய் பற்றிய ஒரு புரிதலும், அதை அனுபவிப்பவர் மற்றும் அவருக்குச் சேவை செய்பவர்களின் வலியையும், ஆத்மார்த்தமான நண்பர்கள், உறவினர்களின் புரிதலும், ஒத்துழைப்பும் கொடுக்கும் மன உறுதியையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். தன் உடல் மற்றும் மன வேதனைகளை மறைக்காமல், அவற்றை அவர் எதிர்கொண்ட விதத்தை விளக்கியுள்ளார். புற்று நோய் என்றவுடன், ‘அடுத்தது என்ன?’ ‘நோயாளிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் நாம் எப்படி உதவி செய்யலாம்?’ என சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்கிறார் சுதாகர் கஸ்தூரி.

80 களில் அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் நான் வேலை செய்த போது இருந்த சிகிச்சை முறைகளிலிருந்து புதிய பரிமாணங்களில் பல புதிய சிகிச்சைகளும், பார்வைகளும் விரிந்து, இன்று மிகவும் முன்னேறியிருக்கிறோம் என்ற ஒற்றைச் செய்தியை, இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்கிறேன்.

நேர்மறை சிந்தனைகள் (“நாம பிஸியா இருந்தா கேன்ஸர் சோம்பேறியாகிவிடும்”), கூட்டுப் பிரார்த்தனை, எம்ஜிஆர், சிவாஜி காலத்து உற்சாகப் பாடல்கள், (மார்பகப் புற்றா? ஆண்களுக்கும் வருமா? என்று திகைத்துப் போனவரிடம், “மாமி, நான் எம் ஜி ஆர் மாதிரி, ஆயிரத்தில் ஒருவன்” என்கிறார்.), சிந்தனைச் சிதறல்களைக் குறைக்கும் ‘ஜர்னலிங் உத்தி’, அறிவியல் ரீதியான நல்ல ஆவணப் படங்களைப் பார்த்தல், எதிர்மறைப் பேச்சுக்களையும், செய்திகளையும் தவிர்த்தல், பிற புற்றுநோயாளிகளுடன் தன் அனுபவங்களைப் பகிர்தல் போன்ற பல நல்ல வழிகாட்டும் செய்திகள் – சுதாகர் தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார். வள்ளுவனின் ‘இடுக்கண் வருகால் நகுக’ என்பதை வாழ்க்கையில் கடைபிடிப்பது எப்படி என்பதை இப்புத்தகம் சொல்லாமல் சொல்கின்றது.

மனித நேயம் வழிந்தோடும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளை இப்புத்தகம் முழுவதும் காண முடிகிறது.

வயோதிக மனைவி, கணவன் இருவருக்கும் புற்றுநோய் – சிகிச்சைக்கு வந்துள்ளார்கள். “நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர், அவ்வளவுதான். ராஞ்சியிலிருக்கும் பையனுடன் (காதல் திருமணம்) அதிக தொடர்பு கிடையாது. நாங்கதான் எங்களைப் பார்த்துக்கறோம்” என்கிறார் முதியவர். மேலும் அவர், “எனக்கு அதிகப் பிரச்சினை இல்லை. அவளுக்கு டார்கெட்டட் தெரபி. கஷ்டப்படுகிறாள், பாவம்” என்கிறார். இந்த வாத்ஸல்யமும், அதனடியில் புரளும் வலியும், வேதனையும் நம்மைத் தாக்குகின்றன. வாசிக்கும் நம் வயிற்றிலும் ஏதோ ஒன்று சுருண்டு நம்மை அழுத்துகிறது.

“நமக்கு இரு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, இறப்பது. மற்றொன்று வாழ்வது. அந்த மறுவாழ்விலும் இரு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, விரக்தியையும் வேதனையையும் வெளியே காட்டிக்கொண்டு பரிதாபமாக வாழ்வது. மற்றது, புதிய உறுதியையும் நம்பிக்கையையும் கொண்டு வாழ்வைச் சீரமைப்பது – இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில்தான் இருக்கிறது” என்பது take home message!

புத்தகத்தின் கடைசி சாப்டர் (19) ஒரு நிமிடம்…! 7 கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் – இப்புத்தகத்தின் சாரத்தைப் பிழிந்து கொடுக்கின்றது.

வாசித்து, சிந்தித்து, சரியான வழியில் செயலாற்ற வேண்டிய சிறப்பான வழிகாட்டி நூல் – தன் துயரிலும் சமூகத்திற்கு ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், சுதாகர் கஸ்தூரியை இன்னும் ஒரு நூற்றாண்டு நலமாக வாழவைக்கும் என்றே நான் நம்புகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன