
இடுப்பில் இருந்த குடத்தை தோளுக்கு மாற்றின தேவானை,” கோமதியக்கா! விசயம் தெரியுமா? சம்முகம் பொண்ணு கஸ்தூரியை, படிக்க விருதுநகர் பள்ளிக்கூடத்திலே சேர்க்க போறாளாம்! சமஞ்சு ஒரு மாசம் கூட ஆகலை டவுன் பஸ் ஏறிப் போய்ப் படிக்கப் போறதாம். நாள பின்ன ஏதும் தப்பு தண்டா ஆயிடும்; என்ற பயம் அத்துப் போச்சு. காலம் கெட்டுக் கிடக்கு” என்று நீட்டி முழங்கினாள்.
கோமதியக்கா,” ஆமாண்டி! பொட்ட புள்ளை படிச்சு கவுனரா; ஆகப் போகுது? ஆக்கிப் போட்டு, வீட்டுக்கடங்கி இருந்தாக்கத்தான்; அவ அத்தைக்காரி, தன் பையன் முத்தரசுக்குக் கட்டுவா”. என்றாள். அவர்களை ஏளனமாகப் பார்த்த கமலம்,” அத்தைக்காரி நகை நட்டு இல்லாமல் கட்டுவாளா? நம்ம மாதிரி குடிகார புருசனே கதின்னு அவ இருக்கணுமா? படிச்சு மேலே வந்தாக்கத்தான் வரப்போற காலத்துல பொம்பளை பிள்ளைங்க நாட்டுலே பிழைக்க முடியும். தெரிஞ்சுக்கோ. அதுதான் அவங்களுக்கு மரியாதை. அவள பெத்தவங்களுக்கு இல்லாத கரிசனம், உமக்கெதுக்கு? ஊர் வம்பை உழக்கால அளக்காம அடிபம்ப்பில் தண்ணி அடிச்சோமா; வீடு போய்ச் சேர்ந்தோமான்னு, இருங்க”என்றாள்.
