
வரிசையாக வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண குடங்களால் அந்தச் சாலையே குடங்களால் போடப்பட்ட சாலைபோல் தோற்றமளித்தது. அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியான மன்னார் சாமி இவர்கள் ஊர் நெடுஞ்சாலை வழியாகப் புதூருக்கு தன் கொழுந்தியாளின் கல்யாணத்துக்காகப் போகிறார் என்று கேள்விப்பட்டு தான் அவர் காரை மறித்துத் தங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை பற்றிச் சொல்லக் கூடி இருக்கிறார்கள். அந்த ஊர் பெரியவர் பெரியசாமிக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வர, உடனே பரபரப்பாகக் கூடியிருந்த ஜனங்களிடம் ஓடி வந்தார். “நாம இங்க மறியல் செய்கிறோம் என்று கேள்விப்பட்டு மந்திரி பக்கத்து ஊர் நெடுஞ்சாலை வழியாகப் புதூருக்கு போறாராம். “எல்லாரும் ஓடியாங்க. நம்ம ஊர் குளத்துக்குக் குறுக்கால போய்ப் பக்கத்து ஊரு நெடுஞ்சாலைல அவர் கார வழிமறிப்போம் ” என்றார் பெரியசாமி பரபரப்பாகப் பெண்கள் இடுப்பில் குடங்களை வைத்துக் கொண்டு வறண்டு கிடந்த குளத்தின் வழியாக ஓட்டமும் நடையுமாகப் பக்கத்து ஊரு நெடுஞ்சாலையை அடைந்தார்கள்.இந்தக் கும்பலில் கடைசியாக வந்து சேர்ந்து கொண்ட ராக்காயி ரோஸி பொன்னி மூவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இடுப்பில் குடத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். பொன்னியை ஒட்டி அவளுடைய நாலு வயது மகள் தேவி நின்றுகொண்டிருந்தாள். தூரத்தில் கார் வருவதைப் பார்த்துப் பெரியசாமி “எல்லாம் அப்படியே குடத்தோட குந்திக்குங்க” என்று உத்தரவு பிறப்பித்தார். மந்திரி மன்னர் சாமி தாலி எடுத்துக் கொடுக்காமலேயே முகூர்த்த நேரம் தவறவிடாமல் கொழுந்தியாளின் கல்யாணம் நடந்துவிட, மந்திரி வேறு வழியின்றி தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த ஜனங்களின் குறைகளைக் கேட்கக் காரை விட்டு இறங்கினார்.
176 words
