ஜி ஏ பிரபா/பைத்தியம்

      “இந்தப் பைத்தியத்தையும்  எதுக்கு கூட்டியாந்தே?”-செல்வி.

      “வூட்ல யார் இருக்காங்க?”

அலுப்புடன் கூறினாள் ராஜி.       

      இவள் அருகில் மலங்க, மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் சிறுமி.

  அறிவும் வளரவில்லை. சரியான பேச்சும் வரவில்லை. எல்லோரும் பைத்தியம் என்றுதான் கிண்டல் செய்வார்கள்.

   புருஷன் இல்லை. பெத்த குழந்தையும் அரைகுறை. வாழ்க்கை சலிப்பாக இருந்தது ராஜிக்கு.

       குழாடியில் நாலைந்து பேர் இருந்தார்கள். தெருக் குழாயில் தினசரி ஒருமணி நேரம் தண்ணீர் விடுவார்கள். அதுதான் குடிக்க, சமைக்க.

    சரசு, ராஜி, செல்வி மூவரும் தண்ணீர் பிடித்துவிட்டு கூலி வேலைக்குச் செல்ல வேண்டும்.

     “.நான் போய் முதலாக வரிசைல குடத்தை வைக்கறேன்”

சரசு வேகமாக முன்னால் சென்றவள். குழாயடியில்  தேங்கி நின்ற சேற்றுத் தண்ணீரில்  மடாரென்று வழுக்கி விழுந்தாள்.

     “வேகமா ஓடினியே! விளுந்தியா”- செல்வி சிரிக்க, அங்கிருந்தவர்களும் சிரித்தார்கள்.

   அதற்குள் சிறுமி ஓடிச்சென்று சரசு எழ உதவினாள். தண்ணீர் எடுத்து அவள் மேலிருந்த சேற்றைக் கழுவினாள்.

      குடத்தை வரிசையில் வைத்தாள்.

.     “ராஜி இந்தப் பைத்தியத்தை ஓரமா உக்கார வை. எங்கினாச்சும் அதுவும் விளுந்து வைக்கப் போகுது”-செல்வி.

    “யார் பைத்தியம்?”- திரும்பி நிதானமாகக் கேட்டாள் ராஜி.

     அவள் குரலில் பெருமை் இருந்தது.

 123 வார்த்தைகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன