
****
“கமலி! சீக்கிரம் வா.. வெயிலுக்கு முன்னால போய்த் திரும்பிடலாம்”
மல்லியும் வீரம்மாவும் காலிப்பானைகளுடன் வந்து அழைத்தார்கள்.
கமலி பானையுடன் வெளியே வந்தாள். கூடவே மகள் பூரணி.
நாலு கிலோமீட்டர் தள்ளி ஊருக்கு வெளியே வறண்டு போன ஆற்றின் நடுவிலிருந்த ஊற்றுக் கிணற்றில் இறங்கி, தண்ணீர் ஊற ஊற இரைத்துப் பானையில் ஊற்றி. ஒரு பானை நிரம்பவே பிரயாசைப் பட வேண்டும்.
நான்கு பானைகளையும் நிரப்பிவிட்டுக் கிளம்பும்போது மல்லி மற்ற இருவரிடமும் காதில் எதோ கூறினாள்.
“பூரணி! தண்ணிப் பானைகளைப் பாத்துக்கோ… நாங்க அதோ அந்தக் குட்டிச்சுவர் பின்னாலே ஒதுங்கிட்டு வந்துடறோம்” என்று மூவரும் சென்றார்கள்.
பெண்கள் மூவரும் திரும்பி வந்து பார்க்கும்போது பூரணியைக் காணாமல் பகீரென்றது.
“பூரணீ..!”
“பூரணீ…!”
“பூரணீ…!”
“நான் இங்கேருக்கேன்..!”
கிணற்றுக்குள்ளிருந்து சத்தம் வந்தது.
பதற்றத்துடன் எட்டிப் பார்த்தார்கள். தண்ணீரை எடுத்துப் பானையில் நிரப்பிக்கொண்டிருந்தாள் பூரணி.
கமலி இறங்கி பூரணியை மேலே ஏற்றி விட்டுப் பானையுடன் மேலேறினாள்.
“என்னாச்சு?”
“மாடு கன்னுங்க வந்து தண்ணி கேட்டதுங்கம்மா. தாகம் எல்லாருக்கும் ஒண்ணுதானே?
கொடுத்தேன். நீங்க வர்றதுக்குள்ள இந்தப் பானையை ரொப்பி வெச்சிடலாம்னு தான் கிணத்துல இறங்கினேன்”
மகளை அணைத்துக் கொண்டாள் கமலி
**
(126 வார்த்தைகள்)

நல்ல நீதியை சொல்லும் குட்டிக் கதை அருமை லீலா மா