
“மீனாட்சி! ஒரு விஷயம் தெரியுமா?”
ஆற்றங்கரையில் குடத்துடன் வந்திருந்த கோமளா, மீனாட்சி, சகுந்தலாவைப் பார்த்தவுடன் கேட்டாள்.
“என்னக்கா விஷயம்?”
“ சகுந்தலா! நேத்து நம்ம ஊர்லே ஒரு சாவு ஆச்சே, தெரியும்தானே?”
“ஆமாக்கா! பாவம்! அந்தக் குமாருக்கு 35 வயசுதான் இருக்கும். அவன் பெண்டாட்டி வசந்திக்கு 31 வயசுதான் ஆகுதாம். லாரி டிரைவரா வேலை பார்க்குற மனுஷனுக்கு இப்படியா திடீர்னு மாரடைப்பு வரணும்? அந்த வசந்திக்கு 3 வயசிலே ஒரே ஒரு பையன். அவ ஸ்கூல் டீச்சரா வேலை பார்க்கிறதாலே எப்படியோ சமாளிச்சுக்கலாம்.”
“சகுந்தலா! நம்ம ஊர்லே புருஷன் செத்தா தாலியறுத்து, பொட்டை அழிச்சு, தலை நிறைய வச்சிருக்கிற பூவை எடுத்துட்டு, கண்ணாடி வளையல்களை உடைச்சி அலங்கோலம் பண்ணுற வழக்கம் இருக்கில்லே. அதைப் பண்ணக் கூடாதுன்னு அந்தக் குமார் வசந்திகிட்டே சத்தியம் வாங்கியிருந்தானாம். அதனாலே நான் பண்ண மாட்டேன்னு வசந்தி கட் அண்டு ரைட்டா சொல்லிட்டாளாம்.”
“ஏம்மா! நீயே ஞாயத்தை சொல்லு. நாம பிறந்தப்ப இருந்து பொட்டு பூ வச்சு, வளையல் போட்டுட்டு வர்றதை புருஷன் செத்துப் போயிட்டாருன்னு ஏன் விடணும்?”
கோமளாவுடன் வந்திருந்த மகள் நர்மதாவின் கேள்வி பொட்டில் அறைந்தது போல இருந்தது.
