
பாரதி பாஸ்கர், ராஜா பட்டிமன்ற விவாதத்திற்கு ஈடாகப் பட்டிணப்பாக்கக் கடற்கரை மணலில் எஸ்தரும் மேரியும் போட்டி போட்டு மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வெவ்வேறு விதமான மீன்களாதலால் அடிபிடில்லாம் வராம ஆனா சூடான வசவுகளுக்கு நடுவில் வியாபாரம் நடந்தது. மேரி வித்துட்டுப் போனபிறகு எஸ்தர் காட்டில மழை. கூட நூறு ரூபாய் லாபம் கிடைச்சுது. சந்தோஷமாகக் கடையைக் கட்டினாள். இன்னிக்கு முருங்கக்கா சாம்பார் வச்சு மச்சானை அசத்திப்பிடுவோம்னு காத்துக் கிட்டிருந்தாள்.
புருஷன் ராபர்ட் ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோக்கு நிறைய செலவிருக்கே, யார்ட்ட கடன் வாங்கன்னு ரெண்டு நாளா யோசிச்சிட்டிருந்தான். இன்னிக்கு விசிலடிச்சபடியே ஜாலி மூட்ல வந்தான். ருசிச்சுச் சாப்பிட்டான். அப்படியே எஸ்தருக்கு அழுத்தமா ஒரு முத்தம் குடுத்தான். ‘சரி, இன்னிக்கு ராத்திரி தூங்கினாப்லதான்’ எனச் சிரித்துக் கொண்டாள். ‘என்ன ஐயா மூடு ஜிவ்னுருக்கு’ எனச் சீண்டினாள். “ஆட்டோ ரிப்பேர் சரி பண்ணிட்டேன்; மேரிக்கா காசு குடுத்தா. சின்ன வயசிலிருந்தே ஒன்னுவிட்ட சித்தப்பா மகன்னு பாக்காம சொந்தத் தம்பிபோலப் பாசம் வச்சிருக்கிறா” என உணர்ச்சி வசப்பட்டான் ராபர்ட். சரி, இனிமே மேரிட்ட சண்டை போடக்கூடாதுன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டா எஸ்தர்.
ஆனா அடுத்தநாளும் போட்டியும் வசவும் நீடிக்கத்தான் செய்தது.
(131 வார்த்தைகள்)

👌