
சுவர் முழுவதும் உப்புக்காற்றால் சிதைந்து போயிருந்தாலும், அந்த ஓவியம் மட்டும் உயிர்ப்புடன் இருக்கிறது.
சுற்றுலா சென்ற இடத்தில், அம்மக்களின் உடை அணிந்து, அவர்களின் வியாபாரக்கூடத்தில் மீன்களுக்கும், சிப்பிகளுக்கும் மத்தியில் நானும் அம்மாவும் அமர, அப்பா அதை ஓவியமாக வரைந்தார்.
அன்று அதை என் அம்மாவின் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார்.
ஓவியத்தில்
நான் சின்னப்பெண்ணாக மஞ்சள் நிற உடையில் அம்மாமீது சாய்ந்திருக்கிறேன்.
மாலுமியான அப்பாவுக்குக் கடல்மீதும், ஓவியத்தின் மீதும் அளவு கடந்த காதல்.
திடீரென்று ஒரு நாள் கடலில் ஏற்பட்ட புயலில், அவர் காணாமல் போனார் என்றார்கள் .
நான் இப்போதும் இந்த ஓவியத்தைப் பார்த்து அப்பாவிடம் பேசுவேன்.
சில சமயங்களில் ஓவியத்தில் இல்லாத அப்பா. உள்ளிருந்து எங்களிடம் பேசத் தொடங்குவது போன்ற பிரமை ஏற்படும்.
நான் அவரைத் தேடும் நேரமெல்லாம். அப்பா எங்கோ தொலைவில் ஒரு கடற்கரையில் ஓய்வெடுப்பதாய் தோன்றும்.
காலங்கள் உருண்டாலும், ஓவியம் சிதைந்தாலும், அப்பாவின் நினைவுகள் மட்டும் ஈரமணலாய் நிலைத்திருக்கிறது.
‘கடலே! என் அப்பாவை எங்கிருந்தாலும் தேடிக் கொண்டுவா’ என்ற அதே கோரிக்கையுடன்.. மீண்டும் செல்கிறேன் கடற்கரைக்கு!
120
