
ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தின் கீழே, ஒரு சிறிய பேப்பரில் “Sold Out – 500 Dollars” என்று எழுதியிருந்ததைப் படித்த மீனா பெருமூச்செறிந்தாள்.
அந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தவர்களும் அவள் சார்ந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மீன் விற்றுக்கொண்டிருந்த அவளுடைய அழகைக் கண்ட ஒரு விளம்பரப் படப்பிடிப்பாளர், அவளை வைத்து ஒரு விளம்பரப் படம் எடுத்தார். அந்தப் படம் அவளைப் புகழின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவளுடைய பின்னணி தெரிந்திருந்தும், அவளுடைய அழகுக்காகவே ஒரு சிறு தொழிலதிபர் அவளைத் திருமணம் செய்துகொண்டார்.
ஓவியம் சொல்லும் சோகமும், அந்த வாழ்க்கை முறையும் அவளுக்குப் புதிதல்ல. அவள் வாழ்ந்து கடந்த வலி அது.
ஆனால் அங்கே சோகமாக இருந்த ஒன்று, இங்கே பணமாகி இருந்தது!
ஒரு காலத்தில் வாழ்வின் சுமையாக இருந்தது, இப்போது ஒருவருடைய கலைப்பொருளாகி விற்கப்பட்டிருக்கிறது.
வாழ்வின் நகைமுரணான இரண்டு எல்லைகள் — ஒன்று வலியைச் சுமக்கிறது; மற்றொன்று அந்த வலியை விற்றுப் பணம் சம்பாதிக்கிறது
104
