பானுமதி கண்ணன்/கடற்கரை காதல்

மணி 12. பெரும்பாலான மீன்கள் விற்றுத் தீர்ந்து விட்டது. அவரவர் வீட்டுக்குழம்புகளில் கொதித்துக்  கொண்டிருக்கும்.

“போலாமா?” என்றாள் பொன்னி. மிச்சத்தைச் சாயந்தரம் வித்துக்கலாம்.”

“இன்னும் கொஞ்சநேரம் பாக்கலாம்கா!” என்றாள் செல்வி.

பொன்னிக்கு ஆச்சரியமாக இருந்தது.  இருவரும் சகோதரிகள். பொன்னிக்குத் திருமணமாகி விட்டது.செல்விக்கு இல்லை. ரெண்டு நாளாகவே செல்வி ஏதோ முகவாட்டத்தோடு இருப்பதை கவனித்திருந்தாள் பொன்னி.

“என்னாச்சு செல்வி? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்றாள்.

செல்வி சட்டென்று கண்ணீரை உகுத்து விட்டாள்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தர் கார்ல வந்து நண்டு வாங்கிட்டுப் போனார்கா. நல்ல சேப்பா அழகா இருந்தார் எங்கிட்ட பிரியமா பேசினார். “எறா இருக்காமா?”ன்னார். “நாளைக்குக் கட்டாயம் கொண்டாறேன் சார்”னேன். விலை ஜாஸ்தியா இருந்தாலும் ரெண்டு நாளா ரெண்டு கிலோ எறா அவருக்காகக் கூடைக்கு அடில மறைச்சு வெச்சுக் கொண்டாறேன். அவருக்காகன்னா சும்மாவே கூடக் குடுத்துடுவேன். ஆனா அவர் வரவே இல்லை கா!

பொன்னி கலங்கிய கண்களோடு தங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏழைகளுக்கு எல்லாம் உயர்ந்த இடத்தில் காதல் வரலாமா என்ன?

119 words

One Comment on “பானுமதி கண்ணன்/கடற்கரை காதல்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன