நானே நானா யாரோ தானா – கீதா ஆர்

கொந்தளிக்கும் மனதுடன் மீன் கூடைகளுடன் அமர்ந்திருந்தாள் ஜாஸ்மின்.

“மார்த்தாதான் வந்து சொன்னா. மாறு வேஷத்துல வந்துருக்க,  என்னைய பார்க்கணும்னு சொன்னன்னு….இப்ப எதுக்கு வந்த? ஆளுங்க வந்தா பிரச்சனையாகிடும்” – ஜாஸ்மின் வெடித்தாள்.

மேரி அமைதியாகக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளது தோற்றமும் மௌனமும் ஜாஸ்மினை உறுத்தியது.

“5 வருசமா எங்க போயிருந்த? எல்லாரும் நீதான் சேவியர கொன்னுட்டு ஓடிட்டன்னு பேசினப்ப அப்பாவும் அம்மாவும் நானும் பட்ட வேதனை ஆறலை.”. மனம் துடித்தது.

மேரி மெதுவாகத் திரும்பி ஜாஸ்மினின் கரங்களைப் பற்றினாள்.

“கொலைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்பா அம்மாவுக்கு என் உணர்வுகள் புரியாது. என் உடம்புக்குள்ள ஒரு பெண் தினமும் செத்துச் செத்து பொழைச்சதை யாரும் புரிஞ்சுக்கல…”

ஜாஸ்மின் திகைத்தாள்.

“உன் அண்ணன் மைக்கலேதான். மாறின அடையாளத்தோட மேரியா நிக்கிறேன். நீ அம்மா அப்பாகிட்ட புரியவைப்பன்னு நம்பி வந்தேன்.”

ஜாஸ்மினின் அதிர்ச்சி விலகவில்லை. நம்பவும் முடியவில்லை. ஆனால் அவளுள் இருக்கும் பெண்மை மைக்கேல் மேரியாக மாறியிருந்ததை மெதுவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியது. மேரியின் கரங்களை ஜாஸ்மின் அழுந்தப் பற்றினாள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன