
பிறந்தநாளுக்குக் கணவன் அளித்த பரிசைப் பார்த்த ஓவியா அதிர்ந்தாள்..”இந்தப் படத்தை எங்கே வாங்கினீங்க?” படபடத்தாள். இடத்தைச் சொன்னதும் குறித்துக் கொண்டாள்.
மறுநாள் கணவனை அலுவலகம் அனுப்பிவிட்டு, அந்தக் கண்காட்சி நடக்கும் இடத்துக்குப் பறந்தாள். மனதில் இனம்தெரியாத மகிழ்ச்சி.
இரட்டைப் பிறவிகளான ஓவியாவும் காவியாவும் ஓவியம் வரைவதில் நிபுணிகள். இருவருமாக, பத்து வயதில் வரைந்ததுதான்
இந்த ஓவியம். குடும்பத்துடன் ஹொகனைக்கல்லுக்கு சுற்றுலா சென்ற சமயம், நடந்த விபத்தில், பாறைகளில் மோதி, ஓவியாவுக்குத் தலையில் அடிபட்டு நினைவிழந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்தாள்.
மூன்று மாதம் கழித்து நினைவு திரும்பியதும் இவள் சொன்ன முகவரிக்கு அழைத்துச்சென்றார், இவளைக் காப்பாற்றிப் பிழைக்க வைத்தவர். அங்கே இவள் குடும்பம் இல்லை. கடைசியில் அவரே தன் மகளாக ஓவியாவை வளர்த்து, திருமணமும் நடத்திவிட்டார். இதோ கணவனளித்த இந்தப் பரிசு, அவளைக் குடும்பத்தினருடன் சேர்க்கப்போகிறது.
உள்ளே போய்த் தேடினாள். அதோ அங்கே, அச்சு இவளே போல், ஒரு பார்வையாளரிடம் பேசுவது….”காவியா” இன்ப அலறல் கிளம்பியது அவளிடமிருந்து.
இந்த ஓவியமே, உடன்பிறப்பு இருக்குமிடத்தைக் காட்டித்தரும் என்ற காவியாவின் எண்ணம் மெய்யாச்சு. அன்பின் சங்கமம் அங்கே.
124 வார்த்தைகள்

மிக மிக அருமை 👌