
கடற்கரையில் மீன்கள் நிரம்பிய கூடைகளுடன் அமர்ந்திருந்தனர் கெழுத்தியும் ஆரோக்கியமும்.
“காலையிலேயே கடக்கரையில வந்து நிக்கிற மரக்காயர்ட்ட மீனை வித்துடலாம்னா ஏஜென்ட்ட தான் கொடுக்கணுமுனு என் புருஷன் சொல்லிட்டு போயிடுது, “என்றாள் கெழுத்தி.
“சரக்கு அடிக்கப் போற அவசரம். வேறன்ன!” என்றாள் ஆரோக்கியம்
“ஏஜென்ட் எப்ப வந்து நாம வீடு போய்ச் சேர்றது” என்று அலுத்து கொண்டாள் கெழுத்தி.
“ஏஜென்ட்ட கடன் வாங்கினால் மீன அவன்ட்ட தான் கொடுக்கணும்னு சட்டம்போல. ஒரு நாள்போல நம்ம ரெண்டு பேரும் ஏஜென்ட்க்கு காத்து கிடக்கிறது ரோதனையா போச்சு” என்றாள் ஆரோக்கியம்.
“ஒரு ஆத்திரம் அவசரம்ன்னா ஏஜென்ட் தானே கடன் தரான்”
“அதுக்காக அடிமாட்டு விலைக்குத் தானே கொடுக்க வேண்டியதாருக்கு”
“புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பி கிட்டு இருக்கும். நல்லவேளை காலையில் பள்ளிக்கூடத்துல டிபன் போட்டுடறாங்க. இத்தனை நாளு காலையில மீனை வித்துட்டு அரக்க பறக்க ஓடிப் பிள்ளைகளுக்கு டிபன் பண்ணி கொடுத்து அனுப்புறது பெரும்பாடா இருந்தது”
“வெயில் ஏறுது. நெத்திலிய எடுத்துக் காய போடணும். மழை வர மாதிரி இருக்கு”
“நெத்திலி படும்போது மழை வரத் தான் செய்யும். நாமதான் சூதானமா பார்த்து எடுத்து வைக்கணும்”
தூரத்திலே ஏஜென்ட் வருவது பார்வையில் பட்டது.
130
