புத்தகப்புழு/நாறும்பூநாதன்

R Narumpu Nathan

” ஒங்க கிட்ட ஒன்னு கேக்கணும் சார் “
முடி வெட்டிக் கொண்டிருந்த பெருமாள்
என்னிடம் கேட்டார்.
( முடி வெட்ட அங்கன என்ன இருக்கு எனக் குறுக்கு கேள்வி எதுவும் கேட்காமல் மேலே படிக்கவும்).

” கேளுங்க…”

” அடிக்கடி ஒங்க பேரு பேப்பர்ல வருதே..
நீங்க கதையெல்லாம் எழுதுவீகளோ..”

” ரொம்பல்லாம் எழுதல..ஏதோ கொஞ்சம் எழுதுவேன்.. ஏன்..என்ன விசயம்”

” நீங்க எழுதுன பொஸ்தகம் இருந்தா கொடுங்களேன்..விலைக்கு வேண்ணாலும் வேங்கிக்கிடுதேன்..

எனக்கு புஸ்தகம் படிக்க ரொம்ப பிடிக்கும் சார் “
ஆச்சரியமூட்டினார் பெருமாள்.

” சின்ன வயசுலேயே டவுண் மார்க்கெட் ல இருக்கற லைபரேரிக்கு போயி காமிக்ஸ் புக்கு,ராணி எல்லாம் வாசிப்பேன்.

அப்புறம் ராணி முத்துல வர்ற நாவல்லாம் படிப்பேன்..சின்னப் பத்து வரைதான் படிச்சிருக்கேன்..அதுக்கு மேலே படிக்க வைக்கல வீட்டுல..வசதியெல்லாம் ரொம்பக் கெடையாது…பின்னால கத்தி போடணுமா சார்? “

” வேண்டாம்.. நீங்க சொல்லுங்க”

” சாண்டில்யன் னு ஒருத்தரு நல்லா எழுதுவாரு..படிச்சிருக்கீகளா..அப்புறம், சுஜாதா..லட்சுமின்னு ஒரு அம்மா கூட எழுதுவாங்க..எல்லாம் படிப்பேன்.

இப்பமும்கூட பழைய புத்தகக் கடைல ஏதாச்சும் வாங்கிட்டுப் போயி படிப்பேன்..
ஏன் வீட்டுக்காரி ” அப்படி என்னத்த உத்து உத்து ப் படிக்கீக..அப்புடி என்ன இருக்கு அதுல ” ம்பாள்.

இல்லேன்னா, மொளகா வாங்கிட்டு வாங்க ன்னு கடைக்கு வெரட்டுவா..
எனக்கு அச்சலாத்தியா இருக்கும்.. வாரத்துல ஒருநாளு லீவு..அதுல நிம்மதியா
ஒக்காந்து படிக்க வுடுதாளான்னுட்டு மொட்டை மாடிக்குப்போயி படிப்பேன்..
சொவரோரமா சாஞ்சு ஒக்காந்தமானிக்கு படிக்குறது பிடிக்கும்..
புதன்கிழமை தான் எனக்கு ரொம்ப பிடிச்ச நாளு..
சோறு தண்ணியில்லாமக்கூட படிப்பேன் சார்..

ஏம்பயல ஐடிஐ படிக்க வச்சேன்..ஏதோ வேலைக்குப்போறான்..அவன்பாட்டைப் பாத்துக்குவாம்..நம்ம தொழிலுக்கு வரலைங்கறதுல ஒரு திருப்திதான்..
அவனும் சமயத்துல கேப்பான்

” ஏம்ப்பா..எப்பம்பாத்தாலும் பரிச்சைக்குப் படிக்குற மாரி படிச்சிட்டே இருக்கே “ம்பான்..
என்னத்த சொல்ல…?படிக்குறது எனக்கு புடிக்கும்..சினிமாக்கு எப்பமாச்சும் போவேன்..

அவரை அதிசயமாய்ப் பார்த்தேன்.

2 Comments on “புத்தகப்புழு/நாறும்பூநாதன்”

  1. நெல் தமிழ் மணக்கும் ஒரு நல்ல கதை
    இந்த மாதிரி மனிதர்கள் பலர் நெல்லையில் இருக்கிறார்கள்

Comments are closed.