கோவிந்தனின் கதை/யாழினிமுனுசாமி

இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.

ஆசிரியர் ஒரு கணக்கு நடத்திவிட்டு அடுத்த கணக்கை மாணவர்களைப் போடச் சொன்னால், முதல் ஆளாகப் போட்டுக் கொண்டுபோய் நிற்பான். அவ்வளவு வேகமாகக் கணக்கைப் புரிந்துகொண்டு போடுவான்.பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கணிதத்தில் 98 மதிப்பெண்கள் எடுத்தான்.

ஆனால் ஆறு ஏழு முறை எழுதியும் அவனால் ஆங்கிலத்தில் 35 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சிப் பெற முடியவில்லை. விளைவு ? மேற்கொண்டு படிக்க முடியாமல் ஊரிலேயே விவசாய வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

எப்போதாவது என்னைப் பார்க்க நேர்கையில்,” நீ தப்பிச்சிட்டடா!” என்று ஏக்கப்பெருமூச்சு விடுவான்.

ஆங்கிலம் என்பது அந்நிய மொழி . மற்ற பாடங்களில் 35 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என்பதைப் போலவே ஆங்கிலத்திலும் 35 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமலிருந்திருந்தால் கோவிந்தன் இன்று கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பான்.

கிராமப்புற மாணவர்கள் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பில் அதிகம் தோல்வி அடைவது ஆங்கிலப் படத்தில்தான். அத்தோடு அவர்களின் படிப்பும் முடிந்து விடுகிறது. மேற்படிப்புக் கனவும் கலைந்து விடுகிறது.

அந்நிய மொழியான ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற 20 மதிப்பெண்களோ, 25 மதிப்பெண்களோ எடுத்தால் போதும் என்று எந்த ஆட்சியாளர்களாவது சட்டம் கொண்டு வந்திருந்தால் பல இலட்சம் தமிழ்மாணவர்களின் மேற்படிப்புக் கனவு கலைந்திருக்காது.

பல லட்சம் கோவிந்தன்கள் மேற்படிப்புப் படித்து அவர்கள் விரும்பிய வேலையில் சேர்ந்திருப்பார்கள்.கோவிந்தனைப் போல் ஆங்கிலத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல இலட்சம் பேர் உண்டு. கோவிந்தன் கணக்கில் புலி என்றால் மற்றவர்கள் அறிவியலிலோ தமிழிலோ வரலாற்றிலோ புலியாக இருப்பார்கள்.

அவர்களெல்லாம் மேற்படிப்புப் படிக்க முடியாமல் போகக் காரணமாக இருப்பது இந்த அந்நிய மொழியான ஆங்கிலமே!இனியாவது இவ்விசயத்தில் கல்வியாளர்களும் அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.-

One Comment on “கோவிந்தனின் கதை/யாழினிமுனுசாமி”

  1. மிக நுட்பமான விமர்சனம் இது. நம் கல்விமுறை விளிம்பு மக்களை, உழைப்பவர்களை விலக்கி வெளியே நிறுத்தும் வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆங்கிலப் பாடம் ஒரு சான்று.

    நீங்கள் சொல்வது போலவே என் நண்பன் ஒருவன் கணக்கிலும் கணக்குப் பதிவியலிலும் அபார ஆற்றல் கொண்டவன். இளங்கலையில் அவனோடு விடுதியில் தங்கியிருந்த 20, 25 மாணவர்களில் அவன் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றான். அவனுக்கு ஆங்கிலப் பாடம் குறித்த ஓர் அச்சம் இருந்தது. அதனால் அவன் முதுகலை போகவில்லை.. இப்போது ஊரில் செய்தித்தாள் போட்டுக்கொண்டு இருக்கிறான்..

    ஆங்கிலப் பாடத்தையும் தேர்ச்சிக்கான அளவுகோல்களில், பாடங்களில் ஒன்றாக மாற்றாமல் இருந்திருந்தாலோ நீங்கள் கூறுவது போல் ஆங்கிலப் பாடத்தின் குறைந்தளவு தேர்ச்சி மதிபெண்களாக 20 அல்லது 25 என்று இருந்திருந்தாலோ மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் குறித்த ஓர் அச்சமோ சுமையுணர்வோ ஏற்பட்டிருக்கா. நீங்கள் சொல்லும் தீர்வின்படி நம் கல்வித்திட்டம் அமைந்திருந்தால் மாணவர் பலரும் தயக்கமின்றி உயர்கல்வி கற்றிருக்க முடியும் என்பதோடு ஆங்கில மொழியறிவும் எத்தகைய மனத்தடைகளும் இன்றி மாணவர்களுக்கு இயல்பாக வாய்த்திருக்கும்.

    இனிவரும் காலங்களிலாவது இது தொடர்பிலான தங்களின் நெறிகாட்டுகை நடைமுறைக்கு வரவேண்டும்..

    நன்றிகள் தோழர்..

Comments are closed.