கம்பனைக் காண்போம்—12/வளவ. துரையன்


வெள்ளமும் கள்குடித்தவரும்

வெள்ளமானது கள்ளைக் குடித்தவரைப் போல இருந்தது என்கிறான் கம்பன்.

                ஈக்கள் வண்டோடு மொய்ப்ப வரம்பு இகந்து
    ஊக்கமே மிகுந்து உள்தெளிவு இன்றியே
    தேக்கு எறிந்து வருதலின் தீம்புனல்
    வாக்குதேன் நுகர் மாக்களை மானுமே                [22]
    [வரம்பு=எல்லை; வாக்கு=வார்க்கும் கள்]

கள் குடிப்பவரை மக்கள் என்று கூறாமல் மாக்கள் அதாவது விலங்குகள் என்கிறான். வெள்ளத்தை ஈக்களும் வண்டுகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லை கடந்து ஊக்கம் மிகுந்து ஆனால் உள்ளே தெளிவில்லாமல் ஓடி வருகிறது. அந்த இனிய வெள்ளம் தேக்கு மரங்களை வீசி வருகிறது. கள் குடித்தவரும் ஈக்கள் வண்டுகள் மொய்க்கக் கிடக்கிறார்கள். அவர்கள் தம் குலம், குணம், பதவி முதலிய எல்லைகளைக் கடந்து, உற்சாகம் பெற்று ஆனால் மனத்தில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் ஆதலால் வெள்ளம் கள்குடித்தவரை ஒத்திருந்ததாம்.