
“ஜாய்ஸு! இன்னிக்கிக் கடலுக்குப் போய்த் திரும்புனவங்க எல்லாருக்குமே மீன் நெறையக் கெடைச்சதாலே நமக்கும் விக்கிறதுக்கு கூடை மீனு சல்லிசான வெலையில கெடைச்சுது. ஆனாலும் ஒம்மொகத்துல சந்தோஷமே தெரியலையே!”
“எங்கண்ணன் சூசையும் கடலுக்குப் போயி மூணு நாளாச்சு பாத்திமா! அவங்களுக்கும் இப்படித்தானே நெறைய மீன் கெடைச்சிருக்கும்? ஆனா ஏன் இன்னும் திரும்பல?”
“அதோ, ஜோசப்பண்ணன் படகு வருது. அவருகிட்டே விசாரிக்கலாம்.”
“ஜோசப்பண்ணே! எங்கண்ணனைப் பாத்தீகளா?”
“ஆமாம்மா. வந்துகிட்டிருக்காங்க. அவருக்கு வலம்புரி சங்கு, பெரிய மீனுகளும் கிடைச்சிருக்கு. உங்கப்பா ஆசைப்பட்டமாதிரி இந்தத் தடவை சூசைக்குக் கல்யாணம் பண்ணிரலாம்.”
“ஆமா. நாங்க பொண்ணு கூடப் பாத்து வச்சிருக்கோம்.”
பாத்திமாவின் முகம் வாடியது.
“அப்படியா, ஜாய்ஸு! எந்த ஊரு பொண்ணு?”
“இதே ஊருதான்.”
“உங்கண்ணனும் சம்மதிச்சிட்டாரா?”
“சம்மதிக்காமலா? அவர் ரொம்ப நாளா ஆசைப்பட்ட பொண்ணாச்சே!”
பாத்திமாவின் கண்களில் கண்ணீர் முட்டியது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“நாளைக்கு எங்கண்ணனுக்குக் கல்யாணம் பேசப் பொண்ணு வீட்டுக்குப் போறதாலே நான் யாவாரத்துக்கு வரமாட்டேன்.”
“அப்போ நான் மட்டும் தனியா வரணுமா?”
“கல்யாண பொண்ணே இங்க வந்துட்டா நாங்க யாரப் போய்ப் பாக்குறதாம்?”
வெடுக்கென்று திரும்பினாள் பாத்திமா.
“ஆமா. எங்கண்ணன் மனசுல நீதான் இருக்கே.”
(125 வார்த்தைகள்)
