
” யக்கோவ், என்ன உம்முனு இருக்கே, இன்னிக்கும் மாமாவோடு சண்டையா?” என்று கேட்டாள் செல்லாயி.
“அடி நீ வேற, அது தான் பொழுதுக்கும் சாராயக் கடையில் குடியிருக்குதே. என் மகள் அமுதாவின் மேல் படிப்புபற்றித் தான் யோசனை ,” என்று பதில் சொன்ன ராசாத்தியும், செல்லாயியும் மீன் விற்பனை செய்ய வந்த இடத்தில் பார்த்துப் பேசி நட்பாகி தினமும் அங்கு மனசு விட்டுப் பேசி ஆறுதல் அடைவது வழக்கம்.
” நம்ம அமுதாக் குட்டி நல்லாப் படிக்குது. புத்தகம், சீருடை, காலை, மதிய இலவச சாப்பாடு என அரசுப் பள்ளியில் எல்லா சலுகையும் கிடைக்குது.”
“அரசுப் பள்ளியும் இப்போ தனியார் பள்ளி மாதிரிப் படிப்பு நல்லா இருக்குக்கா “
“அங்கே வேலை செய்யும் ஒரு டீச்சர் சொன்னாங்க, இந்த வருஷ ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடத்தைப் பெறுபவர்களுக்கு மேற்படிப்பு படிக்க அரசாங்கம் உதவி செய்யும்னு.”
“நீ வேணா பாரு நம்ம பிள்ளை அமுதா படிச்சு முடிச்சு இந்த ஊருக்கே ஒரு கலெக்டராகவோ , டாக்டராகவோ, ஆசிரியராகவோ வரப்போகுது.”
“அப்போ நீ மீன் விற்க வராமல் போனாலும் என்னை மறந்துடாதேக்கா.” என்றவளை, ” உன் வாக்கு அப்படியே பலிக்கட்டும் செல்லாயி” என்று சந்தோஷமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் ராசாத்தி.
140
