
பைக்கை நிறுத்திவிட்டு வசூல் பேகை முதுகுக்கு தள்ளிவைத்துச் சற்றே கடற்கரை காற்றுடன் அளவளாவினான்.
அலைபேசியில் அழகான காட்சிகளாகப் பதிவு செய்தான்.
கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த மீனவப் பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி படம் பிடித்தான்.
“இதென்ன சின்னச் சின்னதா?”
“அது நெத்திலி, கத்திரிக்கா பலாக்கொட்டை போட்டுக் குழம்பு வச்சு நாலு நாள் சாப்பிடலாம்” என்றாள் சிறிய பெண்.
“நாலு நாளா?”
“கெடாது சார், நாளாக நாளாக டேஸ்ட்டு அள்ளும்”
“துளித் துளியா இருக்கே, இது?”
“அது அயிர கருவாடு. மசாலா போட்டுப் பொறிச்சா சிப்ஸாட்டம் மொறுமொறுன்னு உள்ள போவும்”
“ஓ… உறிஞ்சு வச்சிருக்கே இதென்ன கருவாடு?”
“அது மாசி, தொக்கு செஞ்சு இதமா சாப்பிடலாம்”
“விதவிதமா சொல்றியே பாப்பா, தினமும் கருவாடு சாப்டுவியா?”
“அய்ய, அதுக்கு சின்னதில இருந்தே கவிச்சி ஆவாது, சாப்ட்டதே இல்ல” என்றாள் பெரிய பெண்.
“அப்றம் எப்டி இவ்ளோ அழகா சொல்றாங்க” என்றான் ஆச்சரியமாக.
“பொழப்புதான், தோ… நம்மூரு வேகாத வெயில்ல நீ ஷூ போட்டுட்டு சுத்தலையா, அதுபோலதான்” என்றாள் அவள்.
112
