
14-8-26 மாலை அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள்
கள்ளப் புன்னகை
உன் கேள்வியின் பொருள்
எனக்குப் புரிந்து விட்டது.
விடையையும் சொன்னேன்.
உனக்கு விளங்கவில்லை.
தேர்வறையில் அங்குமிங்கும்
பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய்.
கூட்டத்தைவிட்டுப் பிரிந்த
ஒற்றைக் கருப்பு வாத்துபோல
அலைகிறாய் மனத்துள்ளே.
இங்கே போடமாட்டார்கள்
எனத் தெரிந்தும் யாசிக்கும்
இரவலனா நீ?
ஒரு கல்லைக் குளத்தில் எறிந்தால்
உருவாகும் நூறு வட்டஙக்ள் போல
நீ உருவாக்கிக் கொள்கிறாய்.
தெளிவான ஓடையினடியில்
தெரியும் கூழாங்கல் போல
என் பதில் தெரிந்தும்
கள்ளப்புன்னகை புரிகிறாய்.
எத்தனை நாள்கள் நடிப்பாய்?
காலம் கண்களை மூடிக்கொண்டு
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
2.
அதுவே போதும்
என் தோழனே!
நான் உன்னை
வானத்தை வில்லாக
வளைக்கச் சொல்லவில்லை.
மணலை மெல்லியதொரு
கயிறாகத் திரிக்கச்
கூறவில்லை.
என் கடைக்கண்ணிற்கு
மாமலையும் கடுகென்றாயே
அந்த மாமலையைத்
தோளில் தூக்கிச்
சுமக்குமாறு நான்
வற்புறுத்தவில்லை.
நான்
தானாக அழும்போது
ஆறுதலாய்ச் சாய
உன் தோளில்
கொஞ்சம் இடம் கொடு.
உன் ஒற்றைவிரலால்
என்
கண்ணீரைத் துளியைத்
துடைத்துவிடு.
அதுவே போதும்
3.
கண்ணி வலை
நான் காத்திருக்கிறேன் இங்கே
கடங்காரா! சீக்கிரம் வாடா!
ஓடிவந்து கட்டிக்கொள்ளடா!
உதட்டோடு உதடு வைத்து
ஒட்டிக்கொள்ளடா.
பசலை படர்ந்த
மேனியைப் பார்வைத் தீ
கொண்டு அணைத்து
ஆறுதல் படுத்துடா.
பொருள்வயிற் பிரிவு
என மொழிந்து சென்றாயே!
பொறுத்துக் கொண்டேன்
இங்கிருக்கும் பொருளை
மறந்துவிட்டு நீ
தேடும் பொருள்கொண்டு
போகம் துய்க்க முடியுமா?
நீ வரும் வழியெல்லாம்
என் விழித்தாமரைகள்
பூத்துக் கிடக்கின்றன.
வரும்போது மிதிக்காமல் வா.
அவை கூடக் கோபம் கொண்டு
உன் கால்விரல்களைக்
குத்திக் கிழிக்கக்கூடும்.
நாளை வருவேன்
எனச்சொல்லிச் சென்றாயே
நாளை என்பது
உன் நாள்காட்டியில்
மாதத்தைக் காட்டுமா?
வா! வா!என் கண்களில்
கண்ணி வலை வைத்துள்ளேன்.
கண்ணாளனைக் கட்டிப் போடுவதற்கு
4.
அக்காக்காரி
ஆடுகளைக் கவனமாக
அங்குமிங்கும் பார்த்து
மேய்த்துக் கொண்டிருக்கிறாள்
அக்காக்காரி.
அடிக்கடி ஆடுகளை
எண்ணிச் சரிபார்ப்பாள்.
ஆடொன்று காணோம்
என்று வீடு திரும்பினால்
அப்பா தோலை உரிப்பார்.
அதுவும் புல்லிருக்கும்
இடம்பார்த்து
ஆடுகளின் வயிறு நிறைய
மேய்க்க வேண்டும்.
வேப்பமர நிழலில்
தொங்கும் தூளியில்
தம்பிப் பாப்பாவையும்
ஒரு கண்ணால் கவனமாய்ப்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிணுங்கினால் ஆட்ட வேண்டும்.
அம்மா களைஎடுக்க
அவசராமாய்ப் போயிருக்கிறாள்.
அவள் வரும்வரையில் இவன்
அழாமல் இருக்க வேண்டும்.
ஏகப்பட்ட கவலைகள்.
இவற்றுக்கிடையே
ஒரே ஒரு மகிழ்ச்சி.
அதோ வருகிறதே
ரயில் வண்டி
அதைபார்த்துக்
கை ஆட்டுவதுதான்.
5.
வேதனையில் வளமை
ஒரு கையில்
சாப்பாட்டுக்கூடையுடன்
தோளில் புத்தகச் சுமையுடன்
போகும் சிறுவனைக்
குடை பிடித்துப்
போகும்படி மழை
தொல்லைப்படுத்துகிறது.
நடைபாதைக் கடைகளில்
விரித்துவைத்த
பொருள்களுக்கு
அவசர அவசரமாகப்
போர்வை போட்டுத்
தூங்க வைக்கிறார்கள்.
படுத்துக் கிடக்க
வேதனையுடன் பூட்டியிருக்கும்
கடையைத் தேடுகிறது
தெருநாய்.
எதைப்பற்றியும் கவலைப்படாத
எருமை மழையில்
நனைவேன் என்று
அடம் பிடிக்கிறது.
நேற்றுக் கதிர்பிடித்த
பயிருக்கு இது நல்லது
என மகிழ்கிறான்
மாரிசாமி
