சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்

14-8 2026 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்து அளித்த கவிதைகள்

(1)

எளிமையின் முரண்

எளிமையான கேள்விகள் எழும்ப;
பதில் அளிப்பது சிக்கலாகிறது.

ஒரு வார்த்தை பதில்கள்
இன்னமும் கடினம்!
ஆம்; இல்லை!
வேண்டும்; வேண்டாம்!
சரியா; தவறா?
மெய்யான பொய்யா?

எதிர்பாரா நேரத்தில்
எதிர்பாரா நோக்கில்;
ஒற்றைச் சொல்
பதிலை நோக்கி
கேட்கப்படும் கேள்விகள்
நம்மை நகர்த்த
நாம் குழம்புகிறோம்!
சிந்தனையில் மயக்கமோ தயக்கமோ இல்லாததினால் அல்ல;
தெளிந்த மனம் சொல்கிறது;
இப்போது எடுக்கும்
முடிவு;
சரியா; தவறா?

(2)

கட்டாந்தரையில் ஒரு சோலை

கட்டாந் தரையில்
ஒரு சோலை

விழைவின் அழைப்பு!
உழைப்பின் சிரிப்பு!

சிவப்பும்,மஞ்சளும்,
வெள்ளையும், ஊதாவுமாக;

பசுமை செடியில்
கொற்றவை முகம்:
விண்மீனென வெண்மை பூக்கள்:
மனம் கொண்ட
மங்கையின் நினைவு வரும்…

  1. விடுதலை

விடுதலை கிடைத்தது, இன்றெனுக்கு
அமெரிக்க விமான நிலையத்தில்:

காலி மனத்தின்
வெற்று புன்னகை;
மனம் தொடா
நன்றி நவிலல்;
புரியாத அமெரிக்க ஆங்கிலம்;
நித்தம் நித்தம்
நிலையில்லா பணி பயம்;
விசா மறுப்பின் திகில்;
சுழலில் தவிக்கும்
என் நாட்டு இளையோரின் துயரிலிருந்து!

போதைப்பொருளில் சிக்கிய அமெரிக்க
இளைஞர்களின் சிதைவு;
அன்றாடம் துப்பாக்கி வன்முறை;
ஒற்றைப் பெற்றோரின் அவலம்;
பல்கலைக்கழக மாணவர்களின் கடன் சுமை;
தோல்வியைத் தாங்க திடமில்லா
அமெரிக்க இளையோரின்
மன உளைச்சலில் இருந்து;
எனக்கு விடுதலை!

தாய் மண்ணே!
வணக்கம்!
தாயகம் திரும்பும்
பெற்றோரின்
மனம் அழுத்தம்
சொல்லும் பாடம்;
பாருக்குள்ளே நல்ல நாடு!
அவரவர்க்கும்,
அவருடைய நாடே!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன