மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்

14-8 2026 அன்று விருட்சம், இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதைகள்

1.

வாழ்த்துகிறோம் வாராய்.

புவியாள ஆசை கொண்டு
பூமிக்கு
எவரும் வருவதில்லை.
கவியாள
நீ வந்தது மட்டும் உண்மை.

ஓரிடத்தில் பிறந்து வேரிடத்தில்
வளர்ந்தும்
உனை விடாத வறுமையை
விரட்ட
பட்டணம் பார்த்து வந்தாய்.

கதைதான் எழுதுவேன்
என்றாய்
இல்லை எழுது பாடல்
என்றார்
ஏடெடுத்து நின்றாய்.

சொல் அடுக்கிச் சந்தம்
சேர்த்து
தட்டினில் ஏந்தி நின்றாள்
வெகு
நாளாய் காத்திருந்த
கவிமகள்.
உச்சிமலைத் கூடாம்
சங்கத்துத்
தேனெடுத்தாய், சொல்
அதில்
தோய்த்து பாட்டு தந்தாய்.

குழந்தை மனம் உனக்கு,
கேட்டவர்க்கு
இல்லை என்று சொல்ல
மாட்டாய்.

எவர்மனம் நோகவும் பேச
மாட்டாய்.
மண்ணாசை, பொன்னாசை
உனக்கு
இல்லவே இல்லை.

ஏமாற்றுவார் இவரெனத்
தெரிந்தும்
ஏமாறுவாய், உள்ளதெலாம்
போனாலும்
செல்வமகள் உனை மீட்டு
விடுவாள்.

மாட்டுவண்டி போகாத
ஊருக்கும்
உன் பாட்டு வண்டி
போனது.
தொட்டில், கட்டிலிட்டு ,
காடுவரை
பாடி வருகிறாய்.

நூறு வயது உனக்குத் தர
ஆசை
காலனுக்கு, நீயோ
அரைசதம்
தொட்டதே போதுமென
வானகம்
சென்று விட்டாய்.

காலத்தைக் கணித்தவனே.
கவியரசே,
எத்தனையோ பாட்டு வரும்.
ஆனால்
உனைப் போல் எழுத
என்றும்
எவரும் வரமாட்டார்.
வாழிய
உன்புகழ் வையம் அளந்து
என்றே
வாழ்த்துகிறோம் வாராய் !.

  1. சாரல் மழை.

கோடை வெயில் வாட்டும்.
செடிகொடி,
புல்பூண்டு, மரம் எங்கும் வீசும்
அனல்.

காற்றும் கூடக் கனன்று
மலைப்பாம்பின்
பெருமூச்சென வெப்பத்தை
உமிழும்.

வனம் உலாவும் விலங்குகளும்
வறண்ட
ஓடைகண்டு தாகத்தால்
தவிக்கும்.

அசையும், அசையாப் பொருள்
எல்லாம்
ஒரே உணர்வாய் மழைதனை
வேண்டும்.

வானில் கார்மேகங்கள் அவசர
ஆலோசனைக்
கூட்டம் நடத்தி முதல் தவணை
அனுப்பும்.

சிலுசிலுவெனச் சாரல்மழை
பூவின்
தூவலாய்ச் சிதறும். வீசும்
மண்வாசனை.

பெருமழை வருமெனக் கட்டியம்
கூறும்,
தழுவும் தென்றலில் வையம்
குளிரும்.

சாரல் மழைபோல் ஒருசில
உறவும்
நட்பும் அமைவது உண்டு.

  1. சொல்லத்தான் நினைக்கிறேன்.

பேருந்து நெரிசலில் முட்டி
மோதித்
தள்ளி
ஏறுபவரிடம்,

உணவகத்தில் இலையில்
கரண்டியைத்
தட்டித் தட்டிப் பறிமாறுபவரிடம்,

சாலையில் கண்ட இடத்தில்
துப்புவோர்,
பழத்தோல் வீசுபவரிடம்,

இரண்டாம் வகுப்பில் குளிர்சாதனப்
பெட்டியில்
தேனீர்,உணவருந்தி ,
எஞ்சியதை
அங்கேயே அடுக்கி
வைப்பவரிடம.,

இருசக்கர வாகனத்தில்
மின்னல்
வேகம் கூட்டி உயிர்பலி
வாங்குவோரிடம்

சொல்லத்தான்
நினைக்கிறேன்
நானும்
பொதுநலன் கொஞ்சம்
பாருங்களேன்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன