ஜி.பி.சதுர்புஜன்/சிநேகம்

 முதுகுவலி என்றால் மூட்டை தூக்குபவர்களுக்கும் வண்டி இழுப்ப வர்களுக்கும்தான் வரும் என்னும் காலம் போய் இப்போது கம்ப்யூட்டர்களைக் கட்டிக் கொண்டு அழும் ஐடி துறையினருக்குத்தான் என்று எங்களைப் போன்றவர்களுக்குத் தலைவிதி என்றாகிவிட்டது. வேலைக்குச் சேர்ந்த ஓரிரு வருடங்களாகவே அவ்வப்போது அணைந்தெரியும் பல்பு போல முணுக் முணுக்கென்று வந்தபோது அசட்டையாக இருந்து விட்டேன். அப்புறம், பல வருடங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் டெட்லைன்களைத் துரத்திக் கொண்டே உடல்நலத்தைக் கோட்டை விட்டு விட்டேன். இப்போது ஐம்பதில் நுழையும்போது உடம்பை அக்கு வேறு ஆணிவேராக கழற்றிப் போட்டால் தேவலை என்று தோன்றுகிறது. அப்பப்பா..... அப்படி ஒரு வலி.
ஃபேமிலி டாக்டர், ஸ்பெஷலிஸ்ட் என்று எல்லாம் பார்த்து, ஃபிசியோதெரபி செய்து, உட்கார்ந்து பணிபுரியும் நாற்காலியை மாற்றி, அவ்வப்ப்போது உடலை வளைத்து நிமிர்த்தி, வலி மாத்திரைகளை வேளைக்கொன்று விழுங்கி என்று எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. கேஸ் முற்றி ஆபரேஷன் கீபரேஷன் என்று முதுகெலும்பைக் குடைவதற்கு  முன்னால் வந்த ஞானோதயம்தான் இந்த கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் ஆயுர்வேத மருத்துவம்.

மாலதி மாமிதான் சொன்னார். இந்த மாதிரி மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் சரியாகக் கேட்கும் என்று. அனுபவம் பேசும்போது கேட்கத்தானே வேண்டும் – அதுவும் வலி உயிரே போகும்போது ?
இரண்டு வாரச் சிகிச்சைக்காகப் புக் செய்து வந்து சேர்ந்து விட்டோம் கோட்டக்கல்லுக்கு. ஓடிக் கொண்டிருக்கிறது – பிழிச்சல், பஞ்சகர்மா என்று ஏதேதோ ஆயுர்வேத மொழியில் சொல்கிறார்கள். காலை 11 லிருருந்து 12:00 மணி வரைதான் ஒவ்வொரு நாளும் சிகிச்சை. மற்ற நேரமெல்லாம் ஃப்ரீதான். அதனால் ஓய்வு நேரத்தைத் தவிர கேன்டீன், மாலை பூங்காவில் நடைப்பயிற்சி மற்றும் அங்கே இருக்கும் பெஞ்ச்களில் உட்கார்ந்து ஓய்வெடுத்தல், அப்புறம் இங்கேயும் அங்கேயும் நடத்தல் என்று ஜாலியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜாலியாக என்றா சொன்னேன் ? ஆமாம், அது எனக்கல்ல – என் கூட வந்த மனைவி மகதிக்குத்தான். நான் தனியாகவே வருகிறேன் என்று சொன்னாலும் அவள் விடுவதாக இல்லை. இதை ஒரு வெகேஷன் போல மாற்றிக் கொண்டு விட்டாள். என்னைவிட அவள்தான் சுறுசுறுப்பாக இந்தக் கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையின் எல்லைக்குள் சுற்றிச் சுற்றி வருகிறாள்.
அப்பப்பா என்ன கரிசனம், என்ன அரட்டை ! நானும் என் வலியும் வைத்தியமும் என்று சும்மா இருக்க, அவள் அங்கே வந்திருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து அளவளாவிக்கொண்டிருந்தாள்.
“மேடம் ! எவ்வளவு நாளாச்சு நீங்க இங்கே வந்து ? இதுதான் முதல் தடவையா ? என்ன பிராப்ளம் உங்களுக்கு?” என்று கேட்க வேண்டியது தான் தாமதம்; அவர்களும் லொட லொடவென்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். நான் வேறு வழி இல்லாமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நான் பெங்களூரிலிருந்து வந்திருக்கேன்” -இது ஒரு சாய்ந்து சாய்ந்து நடக்கும் 50 வயதுக்காரி.
“ஓ பெங்களூரா ! நாங்க சென்னைதான்…. ஆனா பெங்களூர்ல முன்னாடி இருந்திருக்கோம். ரொம்ப வருஷம் முன்னாடி ! திப்பசந்திராவிலே…. இவருக்கு அந்த ஊர்ல வேல அப்ப….!”
இது மகதியின் சுய வாக்குமூலம்.
“அப்படியா….அப்ப நீங்கக் கன்னடமெல்லாம் பேசுவீங்களா?”
“இல்ல சொல்ப மாடி, சொல்ப ஹோகி, சன்னா கிதாரா -இந்த மாதிரி சொல்லிச் சமாளிக்க மட்டும்தான் தெரியும்…ஒரு லாங்குவேஜை கத்துக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை !”
“பேசிக்கிட்டே இருந்தா வந்துடும்….”.
“அது சரி ! இப்போ பெங்களூர்ல எங்க இருக்கீங்க ? எப்படி இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க ?”
டொம்லூரில் இருக்கோம். நான் ஒரு ஸ்கூல் டீச்சர். ஐ டீச் இங்கிலீஷ். எனக்கு நிறைய தமிழ் கலீக்ஸ், ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க…. அவங்கள் கிட்ட பேசிப் பேசித் தமிழ் ஃப்ளூயன்டா வந்துருச்சு”.
“சூப்பர்… உங்களுக்குப் பசங்க இருக்காங்களா ?”
மகதி மேலும் விசாரணையை முடுக்கினாள்.
“டூச்சில்ட்ரன். பையன் யு எஸ் ல ஃபிலிம் புரொடக்ஷன் டெக்னாலஜி கோர்ஸ் படிக்கிறான். பொண்ணு கனடாவில் மாஸ் கம்யூனிகேஷன் படிக்கிறா…. நான், என்னோட ஹஸ்பண்ட். அவரு சாட்டர்ட் அக்கவுண்டன்ட். எங்க மாமனார் – மூணு பேரும் வீட்டில இருக்கோம். மாமனாருக்கு 90 வயசுக்கு மேல் ஆயிடுச்சு…. இன்னும் அவரோட வயசுக்கு நல்ல ஹெல்த்தோடதான் இருக்காரு. நான் கூட அவர்கிட்ட சொல்வேன் – டாடி ! உங்க தூக்கத்துல, ஒன் ஹவர் எனக்குக் கொடுங்கன்னு !”
இருவரும் ஹாஹா என்று பெங்களூர்காரி சொன்னதைக் கேட்டுச் சிரித்தனர். இப்படி தொடர்ந்து வேறு வேறு விஷயங்களில் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டுத் தேன்குழல் போல் பின்னியது அவர்களுடைய சம்பாஷணை.
நான் கண்முன்னே எப்படி முன்பின் தெரியாத இரண்டு பேர் இப்படி தங்களைப் பற்றி முழுதாகத் திறந்து பேசி இணைய முடியும் என்பதைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டிருந்தேன்.
இப்படித்தான் கேன்டீனில் எங்கள் முன்னால் 50 வயது மதிக்கத் தக்க மனிதர் வந்து உட்கார்ந்தார். கரீம் தனது பெயர் என்றார். கனடாவில் செட்டில் ஆகிவிட்ட குஜராத்தி. டொராண்டோவில் தற்போது வசிக்கிறாராம். உண்மை வயது 62 என்று ஷார்ட்டும் டி-ஷர்ட்டும் அணிந்த அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை.
என்னுடன்தான் பேசத் தொடங்கினார் கரீம். ஆனால் மகதி அவரைப் பிடித்துக் கொண்டு விட்டாள். உரையாடல் ஆங்கிலத்தில் போனது.
“எவ்வளவு நாளாக டொரண்டோவில் இருக்கீங்க சார் ?”
“நவ் மோர் தேன் 20 இயர்ஸ்….பட் அதற்கு முன்னால் பல நாடுகளில் நான் வளர்ந்தேன்…. ஒர்க் பண்ணினேன்…. கடைசில எங்க ஃபேமிலி டொரண்டோவில் செட்டில் ஆயிட்டோம்.”
“என்ன ப்ராபளம் உங்களுக்கு?”
“கேன்சர். இரண்டு விதமான கேன்சர். எல்லாவிதமான ட்ரீட்மெண்ட்டும் அங்க எடுத்துகிட்டேன். அப்புறம் அவ்வளவுதான் – இனிமே ஒண்ணும் பண்ண முடியாது. யு ஹவ் டு கவுண்ட் யுவர் டேஸ் !” என்று கையை விரித்து விட்டார்கள். யார் மூலமாகவோ இங்கே வந்தா ஹெல்ப் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டேன்….”
“அப்படியா? கேன்சரை க்யூர் பண்றேன்னு சொன்னாங்களா இங்க ?”
ஆச்சரியத்துடன் கேட்டாள் மகதி. எனக்கும் பிரமிப்பாகத்தான் இருந்தது.
“இல்லை இல்லை…. க்யூர் பண்றேன்னு சொல்லல…. உங்களுடைய இம்யூனிட்டியை இம்ப்ரூவ் பண்றதுக்கான எல்லா சிகிச்சைகளையும் கொடுக்கிறோம். அப்புறம் உங்க அதிர்ஷ்டம் என்று சொல்லி இருக்காங்க….சரி, ட்ரை பண்ணலாமே…. ஐ ஹேவ் நத்திங் டு லூஸ் னு வந்தேன்!”
“ட்ரீட்மென்ட் எப்படி போயிட்டிருக்கு?”
“நல்லாத்தான் இருக்கு….இப்போ ஒரு வாரம் முடிஞ்சு போச்சு…. ஐ ஃபீல் ஸ்லைட்லி பெட்டர். இன்னும் ஒரு வாரம் இருக்கு!”
‘குட்! கேட்கவே சந்தோஷமா இருக்கு…. கனடா எல்லாம் பயங்கரமா குளிருமே.! உங்களுக்கு எப்படி இருக்கு ?”
மகதி கேள்விமேல் கேள்வி கேட்டாள். சரியாக மாட்டிக் கொண்டார் இந்தக் கரீம் என்று வெளியே சிரிப்பு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அவரை. இந்தப் பேச்சு – இது இப்போது முடியப் போவதில்லை.
“ஆமாமாம்… பயங்கர குளிர்தான்…. இவ்வளவு நாள் தாங்கின குளிர, இப்ப வயசானப்புறம் தாங்கிக்க முடியல….வருஷத்துல பாதி நாள் இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்துல வீடு எடுத்துத் தங்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். ரெண்டு ஊர்லேயும் இருக்கறாப்புல.”
“நல்ல ஐடியா கரீம் ! என்னோட வேற சில ஃப்ரண்ட்ஸ் அவங்க நாடும் இந்தியாவும்னு – அங்க சில நாள், இங்கே சில நாள்னு மாத்தி மாத்தி இருக்காங்க.”
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மகதியும் கரீமும் வெகுநாள் தெரிந்த நபர்களைப் போல் பேசிக்கொண்டிருந்தது மீண்டும் ஆச்சரியத்தைத் தந்தது.
இப்படி, ஒருவர் இல்லை, இருவர் இல்லை – இருந்த இரண்டு வாரங்களில் மத்திய பிரதேசத்திலிருந்து வந்த டாக்டர், இன்ஜினியர், கேரளாவிலிருந்து வந்த சேட்டன் சேச்சிகள், ஹைதராபாத்திலிருந்து வந்த பல மாமிகள் என்று தினம் இரண்டு பேர் என்று எத்தனையோ பேருடன் நெருக்கமான உறவில் சந்தோஷம் அடைந்த மகதியைப் பார்த்து எனக்குப் பொறாமையாக இருந்தது. ஏன் இங்கே வந்தாள் என்று புரிந்தது போலும் இருந்தது.
மீண்டும் ஊர் திரும்பும்போது மங்களூர் மெயிலில் உட்கார்ந்து கொண்டு கோட்டக்கல்லில் கரைந்த நாட்களையும் நடந்த விஷயங்களையும் அசை போட்டோம். இது ஒரு வித்தியாசமான அனுபவமாகத்தான் தெரிந்தது.
“அது சரி! நீ அந்தப் பங்களூர் அம்மா, கனடா கரீம், தெலுங்கு பாட்டி – இவ்வளவு பேரோட நெருக்கமா இருந்தியே… அவங்ககிட்ட இருந்து அவங்களோட மொபைல், வாட்ஸ்அப் இதெல்லாம் வாங்கிட்டியா ?”
நான் இப்படிக் கேட்டதும் மகதி விழுந்து விழுந்து சிரித்தாள்.
“மொபைலாவது, வாட்ஸ்அப் ஆவது ? ஊருக்குப் போனதும் நானும் மறந்திடுவேன், அவங்களும் மறந்திடுவாங்க….. எல்லாம் வெறும் ரயில் சினேகம்தாங்க !”
ஆழ்ந்த சிநேகங்களை மட்டுமே கொண்ட எனக்கு மகதியின் கூற்று புரியவே இல்லை.
உங்களுக்குப் புரிகிறதா ?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன