முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”தூசேறிய புத்தகம் “

“LE Bal des Livres” வாசலில், புத்தகங்களால் ஆன அந்த வளைவு அழகாய் இருந்தது.

உள்ளே பிரபல எழுத்தாளரின் புத்தகம். இரண்டே பக்கத்தில் சாதாரண எழுத்து _ ஆனால் விலை எண்ணூறு. மக்கள் கூட்டம் முட்டி மோதியது. பெயருக்காக வாங்கினார்கள். படிக்க அல்ல.

ஓரத்தில் ஒரு புத்தகம் மூலையில் தூசேறி ஒரு பெயர் தெரியாத எழுத்தாளர் தம் உயிரைக் கொடுத்து எழுதியது.ஐந்து வருடக் கண்ணீர் அதில் உறைந்திருந்தது. பசியை விற்று வாங்கிய மையால் எழுதியவன் அவன். யாரும் அறியாதவன்.இதை அச்சேற்றவே பதிப்பாளருக்கு ஆயிரம் முறை ஃபோன் செய்து அரங்கேற்றியவன் அவன்.

ஒரு கை அதைத் தொட்டது. “புது ஆளா?” என்று கேட்டுத் தூக்கி எறிய, அடியில் ஒளிந்தது அது.

இரவாகி, கடை அடைத்ததும்,  அந்தத் தூசேறிய புத்தகம் மூச்சு விட்டது. “நான் சுமப்பது கதையை அல்ல… என்னை எழுதியவனின் ஆன்மா” என்று விசும்பியது.

மற்ற புத்தகங்கள் மௌனமாக இதைக் கேட்டன. காலம் மட்டும் மௌனமாய்ச் சொன்னது: “முத்துக்கள் எப்போதும் ஆழத்தில்தான் இருக்கும்.”

112

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன