
நகரமுமல்லாத கிராமமுல்லாத அந்த இரண்டும் கெட்டான் ஊரில் அமைந்திருந்தது அந்தப் பழமையான நூலகம் நூலகத்தின் அமைப்பே வித்தியாசமாகக் காண்போரைக் கவர்ந்திழுக்கும். நூலகத்தின் முன் வாயில் வளைவு புத்தகங்களால் அமைக்கப் பட்டிருந்தது.
ஒரு விடுமுறை நாளின்போது ஒரு நடுத்தர வயது மனிதர் தன் ஆறு வயது மகளோடு உள்ளே நுழைந்தார்.
அந்தப் பெண்ணின் உடலில் ஓரு பரபரப்பு, விழிகளில் ஒரு பரவசம். “இதே நூலகம்தான்” அவள் உதடுகள் முணுமுணுத்தன.
“சார்!உங்களுக்கு எந்த மாதிரிப் புத்தகம் வேணும்னு சொன்னீங்கன்னா உங்களுக்குக் கைடு பண்ண வசதியா இருக்கும்.”
“எனக்கில்ல சார் என் பொண்ணுக்குத்தான்.”
“அப்போ காமிக், சிறுவர் மலர் புத்தகங்கள்தான்”.
“எனக்குப் பூபாலவர்மன் எழுதின சரித்திர நாவல்கள் வேணும்.”
சிறுமியின் வார்த்தைகள் நூலகரை திடுக்கிடச் செய்தது.
“பாப்பா.. அது பெரியவங்க படிக்கிற புத்தகங்களாச்சே.”
“நான் போன பிறவியில பூபாலவர்மன்ங்கிற பேர்ல நிறைய சரித்திர நாவல்கள் எழுதினேன். வீட்டில் சின்னதா ஒரு நூலகம் வெச்சிருந்தேன். நான் இறந்ததும் நான் உயிருக்குயிரா நேசிச்சஅத்தனை புத்தகங்களையும் இங்க குடுத்துட்டாங்க. அதையெல்லாம் வாங்கிட்டுப் போகத்தான் வந்தேன்.”
நாவல்களின் பெயரை மடமடவென அச்சிறுமி சொல்ல நூலகருக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா என்றே புரியாமல் தலை சுற்றியது.
(131 வார்த்தைகள்)
