சாந்தி சந்திரசேகரன்/புத்தகங்ளின் இடுகாடு.!

அந்தச் சேமிப்புக் கிடங்கில் கால் வைக்க முடியத அளவு வாசல்வரை புத்தகங்கள் ஆக்ரமித்து இருந்தன.

​கோடீஸ்வரர் நாகராஜனிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் இருந்தன. உலகின் பழமையான சுவடிகள் முதல் அழிந்த மொழிகளின் நூல்கள்வரை அவரிடம் இருந்தன.

​ஒருநாள் கட்டிடக்கலை வல்லுநரான கரிகாலனை அழைத்து, “வீட்டிற்குள் நுழைபவரெல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவு இந்தப் புத்தங்கள் அடுக்கப்பட, இதற்கான அறையைப் பிரம்மாண்டாமாக. கலைநயத்துடன் வடிவமைத்துக்கொடு. ” என்றார்.

​ஆச்சரியப்பட்ட கரிகாலன், “இவ்வளவு புத்தகங்களையும் படித்துவிட்டீர்களா சார்..?” என்றார்.

​நாகராஜன் பெருமிதம் பொங்க, சிறிது ஏளனத்துடன் “படிக்கவா? வாங்குவதோடு சரி! ஒரு புத்தகத்தைக்கூட நான் தொட்டதே இல்லை. யாரிடமும் இல்லாத இந்தச் சேகரிப்பை பார்த்து இங்கு வருபவர் பொறாமைப் பட வேண்டும், அது போதும். !” என்றார்.

​கரிகாலனின் மனம் வேதனையால் துடித்தது. மனித குலத்தின் பொக்கிஷங்களைச் சுயநலத்திற்காகச் சிறை வைத்திருப்பதை எண்ணிப் புழுங்கினான்.

“மேல.. தகதகன்னு ‘அறிவுப்பொக்கிஷம்’ ன்னு ஜொலிக்கிற மாதிரி எழுத்து பொறிச்ச்சிடுங்க” என்றார் நாகராஜன்.

​அமைதியாக அவரிடம் கரிகாலன் சொன்னார், “பார்வையாளர்களை மிரள வைக்கும் நூலகத்தை நான் வடிவமைக்கிறேன். ஆனால், வாசிக்கப்படாத புத்தகங்கள் அறிவின் பொக்கிஷங்கள் அல்ல சார்; இது வெறும் கைகள் தீண்டாத.. மனதை வருடாத.. புத்தகங்களின் இடுகாடு!”

​நாகராஜன் அதிர்ந்துபோய் நின்றார்.

140 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன