
”ஏடுகளின் உறைவிடம்” என்ற பழமையான புத்தகக் கடைக்குச் சென்ற ரிஷி, நிறைய பழைய புத்தகங்கள் தேடினான்.
கடை உரிமையாளர் அவனிடம், “இங்குள்ள புத்தகங்களில் மனிதர்களின் கனவுகள் மறைந்துள்ளன,” என்றார்.
”இங்க நிறைய பழைய புத்தகம் இருக்கு. அதில் எங்கம்மா எழுதிய புத்தகம் இருக்கான்னு பார்க்கணும். ‘அனாமிகா’ என்ற புனைபெயரில் எழுதிய பழைய கதைகளைத் தேடி வந்தேன்,” என்றான் ரிஷி.
உரிமையாளரும் மகிழ்ச்சியோடு,
“அது எழுதியது உங்க அம்மாவா? ரொம்ப சந்தோஷம்! அந்தக் கதைகள் நிறைய உள்ளன. நாளை அம்மாவை அழைத்து வா,” என்றார்.
அன்று வீட்டில், அவன் தந்தை அளித்த பட்டுப்புடவையை விடத் தான் தரப்போகும் பிறந்தநாள் பரிசே சிறந்தது அம்மாவுக்கு என ரிஷி கூறினான்.
”என்னடா சொல்ற? “
புடவை விலை பத்தாயிரம்!
“உனக்கு ஏது பணம்? என்ன வாங்கின? எப்படி வாங்கினே?” என்று கேட்டனர்.
”அதெல்லாம் நாளைக்கு நீங்களே பாருங்க,” என்றான்.
மறுநாள், அம்மாவைக் கடைக்கு அழைத்துச் சென்றான். தன் கதைகளையும் கட்டுரைகளையும் கண்ட தாய் மெய்சிலிர்த்தாள்.
”மீண்டும் எழுதுங்கள், நாங்களே அதை நூலாக வெளியிடுகிறோம்,” என உரிமையாளர் கூற, ரிஷியின் அம்மாவின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்தன.
124
