
(1)
காதில் வைத்தால் எடுப்பதில்லை
கவனம் எதிலும் அறவே இல்லை
காரியம் இல்லை வெட்டிப் பேச்சு
அலைபேசிக்கு உண்டு அறம்.
(2)
அவசரம் காக்க அவசியம் உதவும்
அவசியம் இன்றி ஆயிரம் கதை
பேசப் பேசப் பிரச்சினை பெருகும்
அலைபேசிக்கு உண்டு அறம்.
(3)
அளவாய்ப் பேசிட நிறைய நன்மை
அளவின்றிப் பேசத் தீமை அதிகம்
வீண்பேச்சு உறவை முறித்துச் சிதைக்கும்
அலைபேசிக்கு உண்டு அறம்.
(4)
வண்டி ஓட்டிப் பேசிப் போக
விபத்து வந்து வீணாய் மரணம்
வண்டி நிறுத்திட மனமே இல்லை
அலைபேசிக்கு உண்டு அறம்.
(5)
ஆயிரம் பேச்சில் ஐந்து விழுக்காடு
அவசரம் காட்டும் எண்ணிப் பார்க்க
மீதப் பேச்சு மிகைப் பேச்சே
அலைபேசிக்கு உண்டு அறம்.
