சுபாஷிணி ரமணன்/நினைவுப் பரிசு

அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் ஒரு அறையின்  நுழைவு வாயில் மட்டும் புத்தகங்களால் ஆக்கப் பட்டிருந்தது. அங்கு ப்ரெஞ்ச் எழுத்துகளில் எதோ எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் எங்குப் பார்த்தாலும் புத்தகங்களே அறையிலும் நிறைந்திருந்தன.

புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ப்ரதீப் நாராயணனிடம் கேட்டபோது புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது. ஆனால் அதில் ஏதோ சோகம் கலந்திருந்ததை அனைவரும் உணர்ந்தனர்.

விழாவிற்கு வந்திருந்த ஓர் இளைஞன், ஆறாம் சார்லஸ் மன்னர் நண்பர்களுடன் நடனமாடுகையில் ஏற்பட்ட தீ விபத்தைக்   குறிக்கும் வார்த்தைகள்  அவை என்றும், ‘தீ விபத்து நடன விழா’ என்று தமிழில் கூறலாம் என்றும்  விளக்கிக் கூறினான்.

விருந்து முடிந்ததும் ப்ரதீப் நாராயணன் அந்தப் புத்தக அறையைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். தான் ப்ரான்சில் இருந்தபோது நூலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை விரும்பியதாகவும், ஒரு நாள் தீவிபத்தில் புத்தகங்களோடு அவளும் எரிந்து விட்டதாகவும், அதற்குப் பிறகு அவர் அவளை மறப்பதற்காக  இந்தியாவுக்கு வந்து விட்டதாகவும், இத்தனை நாள் உழைப்பிற்குப் பிறகு   தன் அறுபதாவது வயதில் தான் அவளுக்குத் தன் நினைவுப் பரிசைத் தர முடிந்தது என்றும் கூறியபோது அனைவருக்கும் கண்கலங்கியது.

(123 வார்த்தைகள்)

2 Comments on “சுபாஷிணி ரமணன்/நினைவுப் பரிசு”

Comments are closed.