ஜெ.பாஸ்கரன்/பழைய புத்தகங்கள்!

‘காலம் மாறித்தான் போய்விட்டது’ மனதிற்குள் நினைத்துக்கொண்டார் முதியவர் மாணிக்கம். அந்தப் புராதன லைப்ரரியின் நூலகராக வேலை செய்த நாட்களை என்ணிக்கொண்டார்.

எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் புத்தகங்கள் இலட்சக் கணக்கில் பிரிவு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம். புத்தகமும் கையுமாக – கைபேசி வராத காலம் – எப்போதும் வாசகர்கள். நல்ல புத்தகங்களுக்கு வரிசையில் மாதக் கணக்கில் காத்திருக்கும் வாசகர்கள்!

‘வேகமாக ஓடும் காலம் இது; புத்தகம் வாசிக்க நேரமில்லை. கார் ஓட்டியபடி, வேறு வேலை செய்தபடி, இசை கேட்பதைப் போலப் புத்தகங்களைக் கேட்கலாம் – ஆடியோ புத்தகங்கள் வந்துவிட்டன. எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டதால், புதிய புதினங்கள், மின்னிதழ்கள், ஆடியோ புத்தகங்கள் லைப்ரரியில் உள்ளே அலமாரிகளை அலங்கரிக்கின்றன’ பெருமூச்சு விட்டார் மாணிக்கம்.

இன்றைய இளைஞர் கூட்டம் கைபேசி நேரம் போக, மீதி நேரமிருந்தால் புத்தகத்தைப் புரட்ட நினைக்கலாம் என்பதைப் புரிந்தவர் மாணிக்கம்.

லைப்ரரியைப் புதுப்பிக்கும்போது, ஒரு காலத்தில் பெருவாரியாக வாசிக்கப்பட்ட புத்தகங்கள், வளைவுடன் கூடிய வாயிலில்  தோரணம்போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, முனை மடங்கி, அட்டையிழந்து, பழுப்பேறிய புத்தகங்கள், இன்றைய இலக்கியத்தின் தூண்களாக வாயிலில் அடங்கியிருந்தன. அலட்சியமாகப் பழைய புத்தகங்களைத் தாண்டி உள்ளே செல்லும் இன்றைய தலைமுறையினரைப் பார்த்து, மனதிற்குள் வருந்தினார் முதியவர் மாணிக்கம்.

“இவற்றைத் தாண்டித்தான் உள்ளே உள்ள புதிய படைப்புகளைப் புரிந்துகொள்ள முடியும். இல்லையேல், அத்திவாரம் இல்லாத வீடுபோல ஆகிவிடும் இலக்கிய அறிவு. ”

இவரது ஆதங்கத்தை ஆமோதிப்பதுபோல, மேலிருந்து ஒரு பழைய இலக்கியப் புத்தகம் அவர் மடியில் வந்து விழுந்தது!

158

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன