
நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, கனவில் கூட! இப்படியொரு கடற்கரையில் அமர்ந்திருப்போம் என்று! சொர்ணா, செல்வி இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இரட்டையர்கள்போல் பிறந்ததிலிருந்து ஒன்றாய் வளர்ந்தவர்கள். மீன்பிடி குடும்பம். ஆண்கள் கடலுக்குச் சென்று விட, எல்லாப் பெண்களையும் போல் கருவாடு விற்பது தான் இருவரின் அன்றாட வாழ்க்கை. ஆறாம் வகுப்புவரை படித்ததே பெரிய விஷயம்! ஒரு மாத இடைவெளியில் திருமணம். ஒரே வருடத்தில் ஆளுக்கு ஒரு பிள்ளை. செல்லியும் சொர்ணாவும் ஒன்றாய் எடுத்த முடிவு பிள்ளைகளைப் படிக்கத்தான் வைக்க வேண்டும் என்பது. தினமும் கடற்கரையில் ஒன்றாய் மீன் விற்கும்போது இதுதான் பேச்சு. கண்ணனும் செந்திலும் நன்றாகப் படித்தார்கள். மேலும் மேலும் படித்தார்கள். நூறு மார்க், வகுப்பில் முதல் என்று உயர்ந்தார்கள். காலேஜ் மேல்படிப்பு வேலை என்று ஒன்றாகவே கைப்பிடித்து வளர்ந்தவர்கள் இதோ இன்று பெரிய வேலை கைநிறைய சம்பளம் என்று வாழ்கிறார்கள். அம்மாக்களைத் தங்கள் ஊருக்கு அழைத்து வந்து அழகு பார்க்கிறார்கள். இன்று வாரக் கடைசி.விடுமுறை. கண்ணனும் செந்திலும் அம்மாக்கள் இருவரையும் காரில் வெளியே அழைத்து வந்திருக்கிறார்கள். செல்லியும் சொர்ணாவும் பெருமையின், சந்தோஷத்தின் உச்சியில்! ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.இப்படி அமெரிக்காவில் பிளொரிடாவின் கடற்கரையில், டெட்டோனா பீச்சில் கைப்பிடித்து அமர்ந்திருப்போம் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
—–
