
நண்பன் இந்திரனின் புதுமனை புகுவிழாவிற்காகச் சென்ற கௌதமை இந்திரன் உற்சாகமாக வரவேற்று வீட்டைச் சுற்றிக்காட்டினான்.
“ இங்க பாரு. இந்த அறை முழுவதும் புத்தகங்கள்.” என்று பெருமையாகக் காட்டினான் ஏனென்றால் கௌதம் ஒரு புத்தகப் புழு. அடிக்கடி இந்திரன் அவனிடமிருந்து புத்தகங்களை இரவல் வாங்குவான். புத்தகங்களை ஆர்வத்தோடு பார்த்த கௌதம் புத்தகங்களுக்கிடையில் தென்பட்ட ஒரு பழைய புத்தகத்தையெடுத்துப் பார்த்ததும் அவன் கண்கள் சிவந்தன.
“ இந்திரா இந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கிட்டு நா எத்தனையோ தடவ கேட்டபோதும் ‘கொடுத்துட்டேன்’ னு பொய் சொன்ன இல்ல?”
“ சாரிடா ரொம்ப பிடிச்சுதனால திருப்பித் தர மனசு வரல”
“ பிடிச்ச புத்தகத்தோட கருத்தைப் புரிஞ்சிக்கலையே?”
“ என்ன கருத்து?”
“ நாம விரும்பற பொருளை முறையில்லாம அபகரிச்சா அந்தக் குற்ற உணர்ச்சி நாம பார்க்கற இடமெல்லாம் அந்தப் பொருளாவே அசிங்கமா காட்சியளிக்க செய்யும்” என்ற கௌதம் அந்தப் புத்தகத்தை வீசி எறிந்து விட்டு ஆவேசமாக வெளியேறினான்.
இந்திரன் குழப்பத்தோடு நிமிர்ந்தான். புது வீடு முழுக்க அசிங்கமாகப் புத்தகங்களாகத் தொங்குவதை பார்த்தான். கீழே கௌதம் விட்டெறிந்த “இந்திரனின் ஆயிரம் கண்கள்” என்ற புத்தகம் சிதறிக்கிடந்தது.
125 words
