எஸ்.எல். நாணு/ஏன் பிறந்தாய்?

”நீங்கக் கேட்கற “ஏன் பிறந்தாய்?” புஸ்தகம் பப்ளிஷ் ஆச்சான்னே தெரியலையே”

நான் வந்திருக்கும் நூற்றி பதினெட்டாவது கடை. இங்கேயும் அதே பதில்.

மனோதத்துவத்தைப் பற்றிய ஆய்வுக்கு என்னுடைய வழிகாட்டி அந்தப் புத்தகத்தைத்தான் சான்றாதாரத்துக்கு சிபாரிசு செய்திருந்தார்.

“எம்.ஆர். எழுதின அந்தப்புஸ்தகத்துல உனக்குத் தேவையான நிறைய விவரங்கள் கிடைக்கும்”

சென்னையின் சந்துபொந்துகளிலெல்லாம் தேடினேன். கிடைக்கவில்லை.

“வண்ணாரப்பேட்டைல சிகாமணி தெருவுல வாயில நுழையாத பேரோட ஒரு கடை இருக்கு. அங்க கிடைக்காத புக்ஸே கிடையாது.”

நண்பர் சொன்னதைக் கேட்டு அந்தக் கடைக்கு விரைந்தேன்.

வாசலிலேயே புத்தகங்கள் குப்பையாகச் சொருகப்பட்டிருந்தன.

உள்ளே சில புத்தகங்கள் கண்ணாடி அலமாரியில் அடுக்கப்பட்டிருந்தாலும் சுற்றியிருந்த மேஜைக்களில் பல புத்தகங்கள் கட்டுப்பாடு இல்லாமல் குவிந்திருந்தன.

அங்கிருந்த பெரியவரிடம் “ஏன் பிறந்தாய்?” புத்தகம்பற்றிக் கேட்டேன்.

அவர் ஆச்சர்யத்துடன் “ஏன் அந்தப் புஸ்தகம்?”

விவரம் சொன்னேன்.

”வாசல்ல விலைக்குப்போட புஸ்தகங்கள் குவிஞ்சிருக்கே. அதுல இருக்கும். நீலகலர் அட்டையோட குண்டு புஸ்தகம். முடிஞ்சா எடுத்துக்குங்க”

கிடைத்தது.

“சார். ரொம்ப நன்றி. என்ன விலை?”

“விலை போகலைன்னுதானே குப்பைல போட்டிருக்கேன்”

அவர் குரலில் விரக்தி.

அப்போதுதான் மேஜையிலிருந்த பெயர்ப்பலகையைக் கவனித்தேன்.

“எம்.ஆர்”

118

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன