
“அக்கா.. அக்கா..”
ராஜிக்கா வீட்டு வாசல்லருந்து அழைத்தேன்.
“உள்ளே வா வித்யா வேலையா இருக்கேன்”
குரல் மட்டும் வந்தது.
குழந்தையுடன் உள்ளே போனேன்.
“ஹை குட்டிமா எப்படியிருக்கீங்க?”
ராஜிக்கா தூரத்திலிருந்தே குழந்தையைக் கொஞ்ச,
“அக்கா இவளை இன்னைக்கு கொஞ்ச நேரம் பாத்துக்க முடியுமா?”
“நானா.. நான் எப்படி வித்யா”
தயங்கினாங்க.
“ஏங்க்கா நீங்க பாத்துக்குவீங்கன்னு நம்பித்தான் வந்தேன். எங்கம்மா வீட்டுக்குப் போய் அவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டுப் போகணும். அங்கெல்லாம் குழந்தையை எடுத்துகிட்டு போக வேண்டாம்னு பாக்கறேன்.”
“இல்ல வித்யா! எங்கிட்ட யாரும் குழந்தையைக் காமிக்கக் கூட பயந்துக்குவாங்க. நீ என்னடான்னா மணிக்கணக்கா பாத்துக்க சொல்றியே. உனக்கு என்னைப் பத்தி எதுவும் சென்டிமெண்ட்
கிடையாதா?”
விரக்தியா கேட்டாங்க.
“சென்டிமெண்டாவது, ஒண்ணாவது! இந்தாங்க இவளைப் பிடிங்க. அந்தக் கூடைல இவளுக்குத் தேவையான டிரஸ், பால் எல்லாம் இருககு. ரொம்ப அழுதான்னா எனக்கு கால் பண்ணுங்க.”
குழந்தையை அக்கா கையில் குடுத்துட்டுக் கிளம்பிட்டேன்.
அம்மா நல்லாதான் இருக்காங்க.
ராஜிக்காவுக்கு குழந்தையில்லாததால நேத்து பக்கத்து வீட்டு வளைகாப்புக்கு அவங்களை கூப்பிடலைன்னு அவங்க ஹஸ்பண்ட்கிட்ட சொல்லி ரொம்ப அழுதுகிட்டிருந்தாங்க.பாவம் அக்கா! குழந்தைங்கன்னா அவங்களுக்கு உயிர்
அவங்களைக் கொஞ்சம் கூல் பண்ணத்தான் பாப்பாவை அவங்ககிட்ட குடுத்துட்டு நான் ஷாப்பிங் வந்தேன்.
சேலம்.
