
“செல்லம்மா, உன் புருசன் இன்னைக்கு பட்டாளத்துலேருந்து வாராகன்னு சீவி முடிச்சுச் சிங்காரமா நிக்கயோ?”
“ஆமாம்கா! அவுகளுக்கு நான் இப்டி இருந்தாத்தான் புடிக்கும்!”
“அதுசரி, மத்த நேரத்துலயும் இப்படியே பளிச்சுனு இருந்தா நல்லாத்தான இருக்கும்! பரட்டைத்தலையும், கிழிஞ்ச சீலையுமா பைத்தியக்காரி மாதிரி இருப்ப!”
“அதுக்குக் காரணம் இருக்குக்கா. மத்தநாளுல இந்த வூட்டுல எல்லாரும் என்னை வேலைக்காரியா நடத்துவாக. இவுக வார நேரத்துல மட்டும் மனுசியா நடத்துவாக. இவுக இல்லாத நேரத்துல நல்ல சீலை கட்டி, பூ வைச்சாலே ஏதோ நான் ஆம்பிளைக்கு அலையறேன்னு நெனைச்சு ஆம்பிளைங்க குறுகுறுன்னு பாப்பாக. வூட்டுப் பொம்பளைங்க என்னை விரோதியாப் பாப்பாங்க. நான் கிறுக்கச்சி மாதிரி இருந்தாத்தான் இந்தப் பொம்பளைகளுக்கும் நிம்மதி! ஆம்பளைங்களும் சீண்ட மாட்டாங்க. இவுக வார இந்த ஒருமாசம் மட்டும் நான் மகாராணி!” செல்லம்மா முகத்தில் பூரிப்பு.
“அட, இதுக்குப் பின்னால இப்படியொரு கதை இருக்கா?”
“நான் நெனைச்சா, வீட்டைவிட்டு வெளியவந்து தனிச்சு நின்னு எம்புள்ளைய வளக்க முடியும்! நாங்க இங்க நல்லா இருக்கோம்கிற நெனப்புல தான் எம்புருஸன் நிம்மதியா நாட்டுக்காக ஒழைக்காக. நாம வூட்டுக்காவது ஒழைப்போமேன்னு தான் வாய மூடிக்கிட்டு கெடக்கேன்! அத்தோட எம்புள்ளைக்கும் ஒறவுகளெல்லாம் வேணுமேக்கா!” அவள் கண்களில் லேசான கலக்கம்.
செல்லம்மாவை நெனைச்சால் சுப்பக்காவுக்குப் பிரமிப்பாக இருந்தது. இவ புருஷன் மட்டுமல்ல, இவளும் தியாகி தான்!
