ருக்மணி வெங்கட்ராமன்/அதிர்ஷ்டம்!இல்லையா

அதிர்ஷ்டமா! இல்லையா?
—————-++——-

“பாக்கியம்.! உன் வீட்டுக்காரருக்கு அடி பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காராம். பக்கத்து வீட்டு அக்கா ஆஸ்பத்திரியில பாத்து உன் நெம்பர் கொடுத்துவிட்டு வந்திருக்காம்”

“நான் என்ன செய்வேன்? அக்கா புள்ளையை பார்த்துக்க நான் போய் பார்த்துட்டு வர்றேன்.”

பாக்கியம் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலையில் இருந்தாள். அந்தக் கம்பெனியை மூடி விட்டனர். தற்சமயம் வேலை இல்லை.

வேகமாக ஓடினாள். ‘அவனால பிரயோஜனம் எதுவும் இல்லை. இருந்தாலும் புள்ளைக்கு அப்பனாச்சே.’ என்று மனசுக்குள் நினைத்தாள்.

எங்கே என்றுக் கேட்டுக் கொண்டே ‘எமெர்ஜென்சி’ வார்டுக்கு வந்தாள்.
“பாக்கியம்.! “என்று அழுதவனை சமாதானம் செய்தாள்.

நல்ல வேளை. எதுவும் பெரிசா இல்லை. இரண்டு நாட்களிவ
வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள்.

“அக்கா.! அவரை இட்டாந்துட்டேன்.” என்றுக் கூறி விட்டு குழந்தையை தூக்கிச் செல்ல வந்தாள்.

“நான் சொல்றேன் என்று தப்பா நினைக்காதே. ஆடி வெள்ளிக் கிழமை பையன் பொறந்தா இப்படித் தான் கஷ்டம் வரிசை கட்டிக் கொண்டு வரும். பேசாமல் யாருக்காவது தத்து கொடுத்துடு. உனக்கு வேலை போயிடுச்சு. இப்ப புருஷன் அடிபட்டு கிடக்கிறான். ” என்றாள்.

“என்ன பேசறீங்க? அவன் அப்பன் குடிச்சுட்டு எங்கயாவது விழுந்துட்டு வந்ததற்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?
உபயோகமே இல்லாத அவன் இருந்தா என்ன? போனால் தான் என்ன? எனக்கு வேற வேலை கிடைக்கும். எதையாவது சொல்லி குழந்தையை வாங்கலாம் என்று பார்க்கறீங்களா?” என்றுக் கூறிக் கொண்டே குழந்தையை வெடுக்கென்று வாங்கிக் கொண்டு வந்தாள்.

இதைக் கேட்ட கணவர் வெட்கித் தலை குணிந்தான்.

தபால்காரர் பாக்கியம் பெயரில் வந்தக் கடிதத்தைக் கொடுத்தார்.
பாக்கியத்திற்கு அரசாங்க வேலை நியமண கடிதம்.

“அக்கா.! இப்ப சொல்லு என் பையன் அதிர்ஷ்டமா இல்லையா? இந்த மாதிரி பேசுவதை இனி செய்யாதீங்க.”
என்றுக் கூறினாள்.

ருக்மணி வெங்கட்ராமன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன