
“அம்மா பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம்.லால்குடிக்குப்போய் நான் பார்த்திட்டு சாயந்திரமாதிருச்சி வரேன் .அதுவரை நந்துவை நீ பார்த்து க்கிறியா?” என்று பக்கத்து வீட்டுக்கு புதிதாய் குடி வந்த விமலாவிடம்கேட்டாள் சரோஜா.
விமலாவுக்கு மூன்று வயது நந்து சில மணிநேரங்கள் தன்னுடன் இருக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி..
ஆனால் அது சில நிமிஷங்களில் காணாமல் போக ஆரம்பித்தது.
நந்துவின் சேட்டை தாங்க முடியவில்லை. கண்ணாடி ஜன்னலில் பந்தை தூக்கி எறிவதும் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அங்கிருந்த பீங்கான் பொருட்களை கீழே தள்ளி உடைப்பதும் ,சாப்பிடக் கொடுப்பதை கீழே இறைப்பதும், விமலாவின் மொபைல் போனை கொடுக்கச் சொல்லி அடம்பிடிப்பதும் கொடுக்க மறுத்தால்உரக்க அழுவதுமாக லூட்டிஅடித்துக் கொண்டிருந்தான்.
விமலாவிற்கு எப்போதடா சரோஜா வருவாள் என்று ஆகிவிட்டது.
மாலை 5 மணிக்கு சரோஜா வந்ததும் நந்து அவள் மேல் தாவி ஏறிக் கொண்டான் .
“நந்து செய்த லூட்டியை சொல்ல விமலா நினைப்பதற்குள்….
“சமத்தா இருந்தியா நந்துக்கண்ணா” என்று மகனிடம் சரோஜா கேட்க,” ரொம்ப சமத்தா இருந்தேன் அம்மா” என்ற நந்துவை கோபம் கலந்த வியப்புடன் பார்க்க ஆரம்பித்தாள் விமலா.
