அன்பும் வணக்கமும்.
சில புத்தகங்கள் நாம் எழுத வேண்டும் என்று விரும்பி எழுதுபவை. ஆனால், சில புத்தகங்களோ நம் விருப்பத்தையும் தாண்டி, இறைவனின் அருள் ஆணைப்படி நம் மூலமாக தங்களை உருவாக்கிக் கொள்பவை. அப்படிப்பட்ட ஒரு அதிசயமான அனுபவம்தான் இந்த ‘திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்’ நூல்.
உண்மையைச் சொல்லப்போனால், திருக்கோளூர் பெண் பிள்ளையின் அந்த 81 ரகசியங்களையும், அவற்றுள் பொதிந்துள்ள ஆழ்ந்த ஆன்மீகப் பணிவையும் பற்றி எழுத வேண்டும் என்பது என் மனதின் ஓரத்தில் பல நாட்களாக இருந்த ஓர் ஆசைதான். ஆனால், அதை எப்போது, எப்படித் தொடங்குவது என்ற தயக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அந்தத் தயக்கத்தைப் போக்கி, என் கையில் பேனாவைக் கொடுத்து எழுத வைத்தது ஒரு தெய்விகத் தற்செயல்.
நமது ‘அரங்கனோடு பொழுதுகள்’ புத்தக வெளியீட்டு விழாவில், மதிப்பிற்குரிய திரு. தெ . ஞானசுந்தரம் ஐயா அவர்கள் மேடையில் ஆற்றிய உரை என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. விழா மேடையில் அவர் பேசிய பேச்சு, வெறும் வாழ்த்துரையல்ல; அது எனக்குக் கிடைத்த ‘குரு வாக்கு’!
“திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியத்தைப் பற்றி நீங்கள் விரிவாக எழுத வேண்டும்…” என்று ஐயா அவர்கள் மேடையில் கூறிய அந்த வார்த்தைகள், சாட்சாத் அந்த வைணவ ஆச்சார்யர்களே அவர் மூலமாக எனக்குமிட்ட கட்டளையாகவே எனக்குப் பட்டது. குருவின் சொல்லே மந்திரம் என்பார்களே… அந்த நொடியில்தான் இந்த நூல் என் மனதில் கருப்பெற்றது.
ஐயா அவர்களின் திருவடிகளைச் சிரம்தாழ்த்தி வணங்கி இந்த நூலை தொடங்குகிறேன் .இன்று அவர் ஸ்ரீவைகுந்தத்தில் பரமபத நாதனின் திருவடி நிழலில் வீற்றிருந்தபடியே, தன் வாஞ்சையான அருளாசிகளையும் ஆசிகளையும் நம்மீதும் இந்த நூலின் மீதும் பொழிந்து கொண்டிருப்பார் என்று என் மனம் உறுதியாக நம்புகிறது.
திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் -1
தாமிரபரணி நதியின் பொன்னிற அலைகள் கரையை முத்தமிட்டுத் தழுவ, தென்றல் காற்று வேத மந்திரமாய் வீசிடும் புண்ணிய பூமி… கோளூர்! பசும் கம்பளம் விரித்தாற்போன்ற நெல் வயல்களும், தலைசாய்த்து வரவேற்கும் தென்னை மரங்களின் நிழல்களும், வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்களும் சூழ்ந்த தெய்வீகம் உறைந்து இ ருந்தது .
வெறும் நிலப்பரப்பாக அல்லாமல், தன் ஒவ்வொரு ஓரத்திலும் அணுவணுவாய் ஆன்மீகச் சுடரையும், வற்றாத இயற்கைச் செல்வத்தையும் தாங்கி ஈன்றது அந்த பூலோக வைகுந்தம்!
அந்த பெண் தன் சோத்து மூட்டையை கட்டிக் கொண்டாள் .எங்கு செல்ல போகிறோம் ,யாரை பார்க்க போகிறோம் எதை பற்றியும் எந்த எண்ணமும் இல்லை .அவளுள் ஒரு உந்துதல் ,ஆழ்வாரின் பாசுரம் அவளுக்குள் உருண்டு கொண்டே இருந்தது .
உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,* மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
கண்ணனை நினைப்பதா ?ஆழ்வாரை துதிப்பதா ? அல்லது தன்னுடைய மானசீக ஆசார்யன் உடையவரை நினைப்பதா ?
அவள் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள் .கோவிலின் கோபுரமே அவளை பற்றி இழுத்தது .வைத்தமா நிதி பெருமாள் ,நவ நிதிகளையும் வைத்துக் கொண்டு அடியார்களுக்காக காத்துக் கொண்டிருந்தான் .
பெருமாளை நினைக்கும் பொழுதே கோளுரை பற்றி நினைத்தாள் .
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே பெரும் போர் நடந்தது ,
தர்மத்தின் சுயஒளி பிரகாசித்தபோது, அதர்மம் தன் தோலையுரித்துக் கொண்டு நிலைகுலைந்து ஓடியது. அது அழிந்த இடம் ‘அதர்ம பிகனம்’ எனப்பட்டது.
ஆனால், அதர்மத்திற்குத் தோல்வியை ஒப்புக்கொள்ளும் பக்குவம் ஏது? அது நேராகக் கைலாயத்திற்குப் பறந்து சென்று, தேவதேவனின் நண்பனும், தனபதியுமான குபேரனின் காதில் நஞ்சைக் கக்கியது.அவனோ பெரும் சாபத்திற்கு ஆளாகி இருந்தான் .
குபேரன் சிவ பக்தன் .சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றான். அங்கே பார்வதி தேவியோடு ஈசன் உரையாடிக் கொண்டிருந்தார். தவத்தின் பலனால் ஈசனுக்கு நிகரான அரியணையைப் பெற்ற குபேரன், உலகன்னையான பார்வதி தேவியின் பேரழகைக் கண்டு தன் நில மறந்தான். காமக் கண் கொண்டு அவளை உற்றுப் பார்த்தான்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் கண்கள் கோபத்தால் சிவந்தன!
பார்வதி தேவி,”அடே குபேரா! படைப்பின் மூலத்தையே காமக் கண்ணால் பார்க்கத் துணிந்துவிட்டாயா? பார்வை எங்கே தூய்மை இழக்கிறதோ, அங்கே மனிதன் தன் உயர்வை இழக்கிறான்! தூய்மையற்ற எண்ணத்தோடு என்னைப் பார்த்த உன் அந்த ஒரு கண் உடனே குருடாகக் கடவது! அகத்தின் விகாரமே புறத்தில் தெரியும்—உன் உடலும் விகாரமடைந்து, எட்டு பற்களுடனும், மூன்று கால்களுடனும் உருக்குலையட்டும்! செல்வம் என்பது தர்மத்தின் நிழல். தர்மம் தவறினவனுக்குச் செல்வம் தங்காது; உன்னிடம் உள்ள நவநிதிகளும் கணப்பொழுதில் உன்னை விட்டு அகலட்டும்!”
சாபம் பலித்தது! கணப்பொழுதில் பேரழகனான குபேரன் விகாரமான தேகத்தோடும், குருட்டுக்கண்ணோடும் செல்வம் போன இடம் தெரியாமல் துடித்தான் .
சாபத்தால் தவித்துக் கொண்டிருந்த குபேரனிடம் அதர்மம்,”மகாபிரபோ! நுண்வடிவில் வீற்றிருக்கும் உங்கள் ஒன்பது பெருஞ்செல்வங்களான நவநிதிகளும் (பத்மம், மகாபத்மம், சங்கம், மகரம், கச்சபம், குந்தம், முகுந்தம், நீலம், கற்பம்) உங்களை விடுத்து, தாமிரபரணிக்கரையில் உள்ள ஒரு தலத்தில் தஞ்சம் புகுந்துவிட்டன!
அதர்மம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ‘கோள்’ மூட்டியது .அந்த ஊர் கோளூர் ஆனது .
அதர்மத்தின் வாக்கைக் கேட்டுத் கோளூர் அடைந்த குபேரன், புனித தீர்த்தத்தில் நீராடி கடும் தவம் புரிந்தான். மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசியன்று எம்பெருமான் அவன் முன் தோன்றினான்.அந்த இடம் திருக்கோளூர் ஆனது .பெருமானின் மடியில் நவநிதிகளும் குழந்தை போலத் தஞ்சம் புகுந்திருந்தன! திருமால் அவற்றுக்கு அடைக்கலம் கொடுத்ததால், அவருக்கு “வைத்த மாநிதிப் பெருமாள்” என்று திருநாமம் உண்டாயிற்று.
குபேரன், “ஜெகந்நாதா! என் அறியாமையால் இழந்த நவநிதிகளையும் மீண்டும் எனக்கே தந்தருள வேண்டும்!”
எம்பெருமான் சிரித்தபடியே, தன் தலைக்குக் கீழே ஒரு மரக்காலை வைத்துப் பள்ளிொண்டார்.
வைத்த மாநிதிப் பெருமாள்,”குபேரா! செல்வம் என்பது அநுபோகத்திற்கான பொருள் மட்டுமல்ல, அது பிறருக்குப் பயன்பட வேண்டிய அறத்தின் அடையாளம். ஒரே நேரத்தில் கிடைக்கும் பேராபத்து மிக்க செல்வம் மீண்டும் மனிதனை அகந்தையில் தள்ளும். அதனால் உன் செல்வத்தை ஒரே நாளில் தர மாட்டேன்; இந்த மரக்காலால் கொஞ்சம் கொஞ்சமாக அளந்தே தருவேன். செல்வம் குறையக் குறைய மனிதன் இறைவனை நினைப்பான்; அது அளவோடு சேரச் சேர தர்மத்தைச் செய்வான். இந்த மரக்கால் உனக்கு எப்போதும் எல்லைகளை நினைவூட்டிக்கொண்டே இருக்கட்டும்!”
எம்பெருமானின் திரு உருவம் அவள் மணக் கண்ணில் தோன்றியது , தன் தலைக்குக் கீழே மரக்கால் வைத்து, அளந்து கொடுக்கும் கோலத்தில் பள்ளி கொண்டு அவரை சரணடைந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கி கொண்டிருந்தார் ,அவளுக்கும் வழங்கினார் ,இருந்தும் அவளுக்குள் ஒரு குறை இருந்தது .ஆசார்யன் முகமாக ஒரு திருவாக்கை பற்றி கொள்ள ஆசை இருந்தது ,உடையவர் தெற்கு நோக்கி வருவதாக வந்த செய்தியை நம்பி அவரின் தரிசனத்தை வேண்டி கிளம்பினாள் .
ஆச்சர்யனை பற்ற மனதில் எழுந்த விழைவு ,அவளை செலுத்தியது .அன்று அயோத்தில் இருந்து தெற்கு நோக்கி பெரும் ஒளியை தொடந்து கிளம்பிய மதுரகவியாழ்வார் தேவு மற்று அறியேன்” என்று கூறி, பகவானை விட குருவே உயர்ந்தவர் எனப் போற்றி தன் ஆச்சார்யனான நம்மாழவாரை சரணடைந்ததை போல் தானும் தன் ஆச்சர்யனை அடைய பிரார்தித்துக் கொண்டாள் .
எது நாதமுனிகளுக்கு நாலாயிரத்தை மீட்டுக் கொட்டுததோ அந்த பாசுரத்தை சொல்ல ஆரம்பித்தாள் .
“கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே”
பொழுது புலரும் வேளை ,குயில்களின் சப்தமும் ,வேத கோஷமும் காதில் விழுந்தது .
அந்த பெண் பிள்ளையின் மனதில் ,இப்படி தனியாக கிளம்புவது சரியா ?என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது .அந்த கேள்விக்கு பதில் உடனே வந்தது “இலக்கு தெளிவாக இருக்கும்போது தனிமை ஒரு தடங்கலே அல்ல! “
தாமிரபரணியின் தென்றல், திருக்கோளூர் எல்லையைத் தொட்டுத் தழுவிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில், காஷாயக் கொடியென ஒளிவீசும் திருமேனியோடும், கரங்களில் முக்கோலோடும் (த்ரிதண்டம்), கண்கள் கருணை பொழிய, ஸ்ரீ இராமானுஜர் தம் வைணவத் தொண்டர்கள் சூழத் திருக்கோளூருக்குள் அடிமேல் அடிவைத்து பிரவேசித்தார்.
அவர் காலடி பட்ட இடமெல்லாம் புல் பூண்டுகளும் பரவசமடைந்தன. அவருடைய திவ்ய பிரசன்னம் அந்த ஊரின் எல்லையிலேயே ஒரு பேரமைதியையும், தெய்வீக ஒளியையும் பரப்பியது.
அதே தருணத்தில், திருக்கோளூர் எல்லை வாசலைக் கடந்து ஒரு இளம் பெண் வெளியேறி வந்துகொண்டிருந்தாள். வைணவத்தின் திருமண் காப்பினை நெற்றியில் அணிந்திருந்த அவளது முகத்தில் ஒருவித ஏக்கம் நிறைந்திருந்தது. ஆனால், எதிரே நடந்து வரும் இராமானுஜரைக் கண்ட அந்தப் பரவசக் கணத்தில், அவளது நடையும் சிந்தனையும் சட்டென்று உறைந்துபோயின.
அவர் யார் என்பதை அவள் அதுவரை அறியாள்; ஆயினும், அந்த மகானின் முகத்தில் சுடர்விட்ட ஆச்சார்ய தேஜஸும், அவரது கருணை பொங்கும் பார்வையும் அவளது அகத்தின் இருளைக் கணப்பொழுதில் அகற்றியது.
ஓர் உண்மையான குருவின் தரிசனம் கிடைத்த மாத்திரத்திலேயே, சீடனின் மனதில் எழும் சகல கேள்விகளுக்கும் விடைகள் தானாகவே புலப்படுமே… அதே போன்றதொரு மெய்ஞானப் பரவசம் அவளுள் பொங்கியது!
உடையவர் அவளை நோக்கித் தம் கருணை விழி உயர்த்தினார். ஆழ்வாரால் ‘என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே’ என்று போற்றப்பட்ட புனித பூமியை விட்டு, ஒரு பெண் வெளியேறுவது அவருக்கு வியப்பை அளித்தது.
உடையவர் (மிகவும் சாந்தமான, அதே சமயம் கம்பீரமான குரலில்) “தாயே! நவதிருப்பதிகளின் நாயகனான வைத்த மாநிதிப் பெருமாள் வீற்றிருக்கும் இத்தலம், எல்லோரும் புக வேண்டிய முக்திப் புகலிடம் அல்லவா? வடதிசை நோக்கிச் சென்ற மதுரகவியாழ்வார் கூட, நம்மாழ்வாரின் ஞானச் சுடரைக் கண்டவுடன் ஓடோடி வந்து புகுந்த புண்ணிய பூமி இது. அப்படியிருக்க, எல்லாரும் புகும் ஊரை விட்டு, நீ மட்டும் வெளியேறும் ‘போகும் ஊராக’ இதை மாற்றுவது ஏன் அம்மா? உன் நெஞ்சில் என்ன பாரம்?”
உடையவரின் குரலில் இருந்த பேரன்பும், அவர் கேட்ட கேள்வியில் ஒளிந்திருந்த ஆழ்ந்த பாசுரப் பொருளும் அப்பெண்ணின் உள்ளத்தைத் தொட்டன. எதிரே நிற்பவர் சாதாரணத் துறவி அல்ல; தன் ஆத்ம தாகத்தைத் தீர்க்க வந்த ஞானாச்சார்யரே என்பதை அவளது உள்ளுணர்வு உரக்கச் சொன்னது. அவளது அகக்கண் திறந்தது.
அவளும் கோள் சொல்ல ஆரம்பித்தாள் .பெருமாளின் ஸ்ரீவைஷ்ணவ அடியார்களை பற்றி கோள் சொல்ல ஆரம்பித்தாள் .
தொடர்ந்து வளரும்…
