
சங்கர்ஜோதிராஜ் முகநூல் பதிவு
ஒரு நாள் சுவாமிஜி கோயிலுக்குள் சென்று தம்முடன் வந்த அன்பரை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு எதிரேயிருந்த மகிழ மரத்தருகில் நின்று கொண்டு அதையே கூர்ந்து கவனித்த வண்ணமிருந்தார். அதைப் பார்த்த ஒருவர் “2-3 நாட்களாக இங்கு நின்று கொண்டு இவர் இந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார், இந்த மரத்தில் என்ன தான் இருக்கிறதோ” என்று உட்கார்ந்திருந்த அன்பருக்கு மட்டும் கேட்கும்படி சொல்லி விட்டுப் போனார்.
30 நிமிடங்களுக்கு மேல் இந்த விருட்சத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுவாமிஜி உட்கார்ந்திருந்த அன்பரைத் தம் அருகே அழைத்து விருட்ச மேடை மீதேறி விருட்சத்தின் அடிப்பாகத்தைச் சுட்டிக் காட்டினார். விருட்சத்தின் அடிமரத்தை யாரோ சுமார் ஒரு சதுர மீட்டருக்குச் செதுக்கிப் பட்டை எடுத்து விட்டிருந்தது காணப்பட்டது. இதைப் பார்த்தீர்களா என்றும், இதனால் விருட்சத்திற்கு என்ன நேரும் என்றும் அந்த அன்பரை சுவாமிஜி கேட்டார். பதில் கூற முடியாமல் அன்பர் நின்றிருந்தார். இதற்குள் சுவாமிஜியே சொல்லத் தொடங்கி “இம்மாதிரி செய்வது விருட்சத்திற்கு ஊறுவிளைவிப்பதாகும். விருட்சத்தின் ஆயுளைக் குறைத்து விடும். கோயிலில் உள்ள தல விருட்சமிது. பல நூற்றாண்டுகளாக தெய்வீகத்தன்மை பொருந்தி விளங்குகிறது.”
“இதிலிருந்தா பட்டை செதுக்கி எடுக்க வேண்டும். மருந்து செய்வதற்காக இதை எடுக்கிறார்கள் கோயிலுக்கு வெளியே உள்ள வேறு எங்கேயாவது உள்ள மரத்தில் இருந்து எடுக்கக் கூடாதா” என்று கூறி அந்த அன்பரை உட்காரச் சொன்னார். விருட்சத்தைப் பல இடங்களிலும் தம் திருக்கரத்தால் தொட்டு, பட்டை எடுப்பதனால் விருட்சம் பாதிக்கப் படாமலிருக்கும் வகை செய்யும் பொருட்டு சுமார் ஒரு மணி நேரம் அதனருகேயே நின்று கொண்டு அருளாசி வழங்கினார். பிறகு அந்த அன்பரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
அந்த சுற்றுப் பிராகாரத்தை விட்டு வருவதற்குள் எதிரே ஒருவர் வந்து சுவாமிஜியை வணங்கி நின்றார். “யார் நீங்கள்” என்று சுவாமிஜி அவரைக் கேட்டார். அவர் தான் கோயில் தேவஸ்தான அலுவலகக் கண்காணிப்பாளர் என்றார். அவர் பெயரையும் கேட்டறிந்தார் சுவாமிஜி. பின்பு அவரைத் தம்முடன் “தயவு செய்து வாருங்கள்” என அழைத்துக் கொண்டு மீண்டும் தல விருட்சத்தின் அடிமரத்தில் பட்டை செதுக்கி இருப்பதைக் காட்டி, “பார்த்தீர்களா! இதை இவ்வாறு பட்டை செதுக்கி எடுப்பதனால் பல நூற்றாண்டுகளாகத் தெய்வீகத் தன்மை பொருந்திய தல விருட்சத்தின் ஆயுள் குறைந்து மரம் பட்டுப் போக நேரும்” என்று சொன்னார். அலுவலகக் கண்காணிப்பாளர் சுவாமிஜி சொன்னதை மிக்க சிரத்தையுடன் ஏற்றுக் கொண்டு இதை முன்னமே நாம் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்தி, இது போல் இனி நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறோம் என்று பயபக்தியுடன் சொன்னார்.
சுவாமிஜி அவரைக் கைகூப்பி வணங்கி நன்றி எனக் கூறிவிட்டு நகர்ந்தார். தாவரங்களிடத்தும் அவர் வைத்திருந்த அளவு கடந்த அன்பையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.
