
” சுகந்தா! சொல்லுடி! என் திருமணத்தை முன்னிட்டு, நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும்; சொல்லு!” என்று தன் தமக்கையிடம் கேட்டாள்; மீனலோசனி.
“கேட்டால், தட்டாமல் கொடுப்பாயா?” என்று சந்தேகத்துடன் சுகந்தா கேட்டாள்.”
“என்னடி! உனக்கு என்ன, என் மேல் சந்தேகம்? கண்டிப்பாக.”என்றதும், சுகந்தா, “உன் முதல் குழந்தையை, நான் முதன் முதலில் கையில் எடுத்து கொஞ்சும் மகிழ்வை எனக்குக் கொடு. நான் கல்யாணமான சிறிது நாட்களிலேயே பூவையும் பொட்டையும் இழந்ததால், புதுக் குழந்தையை தூக்கிக் கொஞ்சும் பாக்கியம். எனக்கில்லாமல் போய்விட்டது. உன்னால் இதைத் தர முடியுமா? ” என்று கேட்டவளுக்கு சத்தியம் செய்தாள்; மீனலோசனி.
பேறுவலி எடுத்ததும், மீனலோசனி, மருத்துவரிடம், ” குழந்தையை, முதலில் அவள் கையில் கொடுத்து அவள் ஆசிர்வாதம் பெற்ற பிறகே மற்றவர் கையில் கொடுக்க வேண்டுகிறேன். அவளுக்கு எனது திருமணப் பரிசாக இரண்டு வருடம் முன்பே நான் செய்து கொடுத்த சத்தியம்.” என்றாள்.
மருத்துவரின் இணக்கத்தில், பிறந்த பெண் சிசு, முதலில், அவள் அக்காவின் அன்புக் கரங்களிலும், தாய்மையிலும் சீராடியது.
அந்தப் பெண் மகவு, இரு தாயார்களின் அன்பிலும் மாறி மாறி தழைத்து வளர்ந்தது
126 வார்த்தைகள்
