
அன்றைய தினம் ஆனந்துக்கு பிறந்த நாள். மாலை ஏழு மணிக்கு ஒரு ஹோட்டல் சிற்றரங்கத்தில் நடந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர்.
ஆனந்தின் தாயார் சுமதிக்கு அளவு கடந்த சந்தோசம். அவளுடைய தோழிகள், உறவினர்கள் என்று பலர் வந்திருந்து பரிசுகளை தந்து விட்டு சென்றனர்.
அரங்கத்தின் ஓரத்தில் ஒரு பெண் நின்று கொண்டு, நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் தான் சியாமளா. ஒரு சிறிய புன்முறுவல் அவள் உதடுகளில் தெரிந்தாலும், மனதில் ஒரு ஏக்கம் இருப்பதை என்னதான் மறைக்க முயன்றாலும், அது மறைவதாக இல்லை. விருந்தினர்கள் குழந்தையை ஒருவர் பின் ஒருவராக வாழ்த்திய வண்ணம் இருந்தனர்.
சுமதி வேலைக்கு செல்பவள் என்பதால், ஆனந்த் பிறந்ததில் இருந்து தாய்க்கு தாயாக செவிலி ஸ்தானத்தில் இருந்து அவனுடைய சகல தேவைகளையும் செய்து வருபவள் சியாமளா.
சட்டென்று சியாமளாவை இழுத்துக்கொண்டு அரங்கத்தின் மேடை மீது நிறுத்திய சுமதி அனைவருக்கும் அவளை அறிமுகம் செய்தாள்.
“இவள் தான் சியாமளா. ஆனந்தை பெற்றவள் நான். ஆனால் ஒரு தாய்க்கு நிகராக அவனை வளர்த்துக்கொண்டு இருப்பவள் சியாமளா தான்.”
இரண்டு தாய்மார்களை மேடையில் ஒரு சேர பார்த்த ஆனந்த் குலுங்கி குலுங்கி சிரித்தான்.
(125 words)
