
செண்ட்ரல் ஸ்டேஷன்.
அவள் குழந்தையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னங்க அப்படிப் பார்க்கறீங்க?”
இவள் கேட்டாள்.
“குழந்தை நல்ல களையா துரு துருன்னு இருக்கு. உங்க குழந்தையா?”
அவள் பதிலுக்குக் கேட்டாள்
இவள் கொஞ்சம் தயக்கத்துடன்
“வந்து.. ஆமா”
”என்ன பேரு?”
இவள் மௌனமாக இருந்தாள்.
“பெயர் கேட்டா என்ன யோசிக்கறீங்க?”
“வந்து.. ஷ்யாம்”
“நல்ல பேர்.. கிருஷ்ண பகவானோட பேர்.. ஆமா.. என்ன வயசு?”
மீண்டும் தயக்கம்.
“வந்து ரெண்டு”
சொல்லிக்கொண்டே இவள் நகர முயன்றாள்.
அவள் கொஞ்சம் குரலை உயர்த்தி
“முரளி கண்ணா” என்றழைத்தாள்.
குழந்தை திரும்பிப் பார்த்துச் சிரித்தது.
“ம்மா”
என்றபடி அவளிடம் தாவியது.
பதுங்கியிருந்த பெண் காவலர்கள் இவளை சூழ்ந்துக் கொண்டார்கள்.
குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இவள் சிக்கினாள்.
“ரொம்ப நாளா டிமிக்கி கொடுத்திட்டிருந்தா.. பிடிக்க உதவினதுக்கு உங்களுக்கும் குழந்தைக்கும் நன்றி”
கமிஷனர் அவளைப் பாராட்டினார்.
