
தமிழில் :
க.மோகனரங்கன்
அன்பைப் பெறுவதற்காக
சிலர் வாழ்கிறார்கள்
அதைக் கொடுப்பதற்காகவே வாழ்கிற சிலரும் இருக்கிறார்கள்.
நிச்சயமாக,
இவ்விரண்டு நிலைகளிலும்
பொருந்தும் மனிதர்கள் உண்டு;
ஆனால், அந்த எண்ணிக்கை
எப்போதும் சமமாக இருப்பதில்லை.
வழங்குவதற்கான அன்பைத்
தம்மிடம் கொண்டிருப்பவர்கள்
பனிப்பொழிவில் தென்படும்
‘கார்டினல்’ பறவைகளைப் போன்றவர்கள்;
மிகவும் எளிமையாகத்
தோற்றமளிப்பார்கள்,
அழகாக ஒளிர்வார்கள்.
சிலரோ முயல்களைப் போன்றவர்கள்;
அந்த மென்மை, நடுக்கம்,
இரத்தம் என அனைத்து விதத்திலும்.
அவர்களை வேட்டையாட நினைப்பவர்களைத் தவிர
மற்றவர்களால்
அவர்களைக் காண்பது சிரமம்:
அன்பைப் பெறத் துடிப்பவர்கள்
எதிலுமே நிறைவடைவதில்லை. கழுகின் கூர்மையான பார்வையும் வலிமையான நகங்களும் கொண்ட அவர்களுக்கு,
உரோமம் போர்த்திய
எவ் உயிரினமும் இரையே ஆகும்.
வலுவாகத் துடித்துக்கொண்டிருக்கும்
ஒர் இதயத்தைப் பிடுங்கி எடுப்பது
அவர்களுக்கு மிகவும் எளிது.
குளிர்காலப் பனிவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன்.
நான் யார் என்பது எனக்குத் தெரியும்.
