உனக்கென்ன மேலே நின்றாய்/♦அனங்கன்

்்்்

ஆண்டுதோறும் பிறக்கின்றாய்..
ஆண்டுதோறும் இறக்கின்றாய்…
உன்னைவைத்து எங்கள்புகழ்
தேட… காரணக்கருவியாய் இருக்கின்றாய்…

வாழ்ந்தபோது..வாழாதவன்
இறவாப்புகழோடு வாழ்கின்றாய்…
உன்கவிதைநூல் விற்கிறது..
சிலருக்கு ஒன்றிரண்டு கவிதையும் தெரிகிறது…

மேடையில் முழங்கிட உன்னைவிட்டால்
எங்களுக்குவேறு கதியில்லை…
புதுமை…புரட்சியென்றால்
உன்படத்தைத்தான் போடுகிறார்கள்…

உனக்குப்பிறகு எத்தனையோ
கவிஞர்கள் இங்கு பிறந்துவிட்டார்கள்..
அவர்களை கண்டுகொள்ள
நாதியில்லை…
செத்தபிறகு கொண்டாடுவதுதானே சிறப்பு…

கவிதையை யார் படிக்கிறார்கள் என்று கேட்கிறாயா…
எல்லாக்காலத்திலும் கவிதையை யார்தான்
விரும்பிப் படிக்கிறார்கள்…?

இன்றுஉன் பிறந்தநாள் …
இன்றுகூட உன்னை நினைக்காவிட்டால் எப்படி…
இன்று கவிஞர்களெல்லாம்
உனைப்பாடி முடித்துவிடுவார்கள்…ஏன்
நானும் கூடத்தான்..
ஊரோடு ஒத்துவாழவேண்டாமா…

உன்னை வைத்து எங்கள் முகங்களை அரங்குகளில்
பல்வேறு கோணங்களில் காட்டிவிடமாட்டோமா என்ன…?

2 Comments on “உனக்கென்ன மேலே நின்றாய்/♦அனங்கன்”

Comments are closed.