முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/ரெண்டு அம்மா

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு, அம்மா அத்தை இருவருடனும் வந்தபோது “உன் அம்மா யாரு?” என்று கேட்டார்கள்.
நான் இருவர் கையும் பிடித்துக்கொண்டு நின்றேன்.
டீச்சர் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகைத்தார்.
அம்மாவின் கைகள் மெலிந்திருந்தன. ஆனால் அணைப்பு இறுக்கமாக இருந்தது.
அத்தையின் கைகள் வலுவேறி இருந்தன. ஆனால் அந்த அணைப்பில் அதே தாய்மை. எங்கள் வீட்டிலிருந்த இரு பெண்டிருமே என் மேல் அன்பைப் பொழிந்தவர்கள்.
சின்ன வயதில் விபத்தில் அப்பாவை இழந்தோம்.
அம்மாவால் வேலைக்கு போக முடியவில்லை. கடன் மலைபோல் ஏறியது.
அப்போதுதான் அத்தை எங்கள் வாழ்வில் வந்தாள்.
“அண்ணி, நீ வீட்டப் பாத்துக்கோ. குழந்தைய நான் பாத்துக்கிறேன். தையல் வேலை செஞ்சு நான் சம்பாதிச்சுக் குடும்பத்துக்குத் தரேன்” என்றாள்.
மாமாவை இழந்து தனியாக வாழ்ந்த அவளுக்கு நானும் அம்மாவும்தான் துணை.

அம்மா எனக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பாள்.
அத்தை விடியத் விடிய தைத்து, என் ஸ்கூல் பீஸ் கட்டினாள்.
“அம்மா” என்று கூப்பிடும்போது இருவருமே திரும்புவார்கள்.
எனக்கு காய்ச்சல் வந்தால், அம்மா நெற்றியில் ஈரத்துணி போடுவாள்.
அத்தை இரவெல்லாம் விழித்து என் அருகில் உட்கார்ந்திருப்பாள்

இன்று நான் வேலைக்குப் போகிறேன்.
முதல் சம்பளத்தில் இருவருக்கும் பட்டுச்சேலை எடுத்துக் கொடுத்தேன்.நான் இன்றும் அவர்கள் நடுவில் தான் இருக்கிறேன்.
ஏனென்றால் ஒரு குழந்தைக்கு இரண்டு தாயார்கள் கிடைப்பது கடவுள் தந்த வரம்.


சென்னை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன