
”அம்மம்மா, நீங்க நாளைக்கு கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரீங்களா?”
தன் குட்டி விரல்களால் அம்மம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, சித்து இதையே நான்காவது முறையாகக் கேட்டான். அவன் கண்களில் அத்தனை எதிர்பார்ப்பு.
”நாளைக்கு நிச்சயம் வரேன் கண்ணா,” என்று சுந்தரி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
ஆனால் அவன் முகம் தெளியவில்லை; பெரியவர்களை அவ்வளவு எளிதில் நம்பிவிட அவனுக்கு மனமில்லை. சுந்தரி அவனது கன்னத்தைத் தொட்டு, “ஏன் பட்டு, இப்படி விடாம சும்மா சும்மா கூப்பிடறே?” என்று வாஞ்சையோடு கேட்டாள்.
அவன் தன் மழலைக் குரலில் பட்டென உடைத்தான், “என் பிரண்டோட அம்மம்மாவும் தாத்தாவும் தான் அவன போனிக்ஸ் கிளாஸ்ல கொண்டு போய் விடுறாங்க. நாளைக்கு நீங்களும் வந்து என்னை கிளாஸ்ல விடணும், சரியா?”
பேரனின் மழலை ஆசையைக் கேட்டு உருகிப்போன சுந்தரி, “நிச்சயமா பட்டு, அம்மம்மா நானே உன்னை கூட்டிட்டுப் போறேன்,” என்று அவனை இறுகக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.
ஒருவழியாக சித்து நம்பிக்கையோடு வீடு திரும்பினான்.
மறுநாள் காலை. சுந்தரி அவன் வீட்டு வாசற்படியை மிதித்த அடுத்த நொடியே, சித்து ஓடிவந்து எதிரே நின்றான்.
”அம்மம்மா… எனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்திங்களா?”
அவன் கேட்ட வேகத்தைப் பார்த்து சுந்தரி ஒரு கணம் செய்வதறியாது திகைத்தாள். அவசரமாய் கிளம்பி வந்ததில் பரிசைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை. நிலைமையைச் சமாளிக்க எண்ணி, “அச்சச்சோ பட்டு, நெக்ஸ்ட் டைம் வரும்போது உனக்கு பெரிய கிஃப்ட்டா வாங்கிட்டு வரேன் சரியா?” என்றாள் நைச்சியமாக.
சித்து கொஞ்சமும் அசரவில்லை. அம்மம்மாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “நீ எதுக்கு அலையணும்? அசேசான்ல (Amazon) ஆர்டர் போடு… ஒரு அங்கிள் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பாங்க,” என்றான் மிகச் சாதாரணமாக.
சுந்தரிக்கு சிரிப்பு தாங்கவில்லை. அவனைச் சீண்ட நினைத்து, “சரிதான் பட்டு, ஆனா அந்த அங்கிள் நம்மகிட்ட பைசா கேப்பாங்களே, அதுக்கு என்ன பண்றது?” என்று கேட்டாள்.
அதற்கு சித்து தன் தாத்தாவைத் திரும்பிப் பார்த்துவிட்டு அலட்சியமாகச் சொன்னான்—
”அதுக்கு என்ன… தாத்தா ‘ஜிபே’ பண்ணுவாங்க!”
இந்த டிஜிட்டல் காலத்து சுட்டியின் பதிலைக் கேட்டு சுந்தரி முற்றிலும் அசந்து போனாள்.

சூப்பர். இந்த காலத்து வாண்டு. 1950, 1960,70ல் பிறந்த நமக்கு இதெல்லாம் தெரியாது